Published : 02 Jun 2021 01:27 PM
Last Updated : 02 Jun 2021 01:27 PM

இசைஞானி இளையராஜா பிறந்த நாள் ஸ்பெஷல்: இளையராஜாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் 

சென்னை

இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் இன்று (ஜூன் 2). அவருடைய ஒப்பற்ற இசை மேதைமையைப் பற்றியும் இசைத் துறையில் அவர் நிகழ்த்திய பிரமிக்கத்தக்க சாதனைகளைக் குறித்தும் பல்லாயிரம் பக்கங்கள் எழுதப்பட்டுவிட்டன. இன்னும் பல்லாயிரம் பக்கங்கள் எழுதப்படக் காத்திருக்கின்றன. அவற்றைத் தாண்டி, இளையராஜா என்னும் ஆளுமையின் தொழில் பயணத்திலிருந்து வாழ்விலிருந்து பொதுவாக மனிதர்களும் குறிப்பாக வாழ்வின் தொடக்கத்தில் இருக்கும் இளைஞர்களும் கற்றுக்கொள்ள ஏராளமான பாடங்கள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.

எந்த வயதிலும் தொடங்கலாம்

பொதுவாக எந்த ஒரு துறையை எடுத்துக்கொண்டாலும் அதில் பிரமிக்கத்தக்க பெரும் சாதனைகளை நிகழ்த்திய ஆளுமைகள் மிக இளம் வயதிலேயே அந்தத் துறைக்குள் அடியெடுத்து வைத்திருப்பார்கள். சச்சின் டெண்டுல்கர் தன் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியை விளையாடியபோது அவருக்கு 16 வயது. எம்ஜிஆர் முதல் படமான 'சதிலீலாவதி'யில் நடித்தபோது அவருக்கு 19 வயது. அதற்குப் பிறகு நீண்ட போராட்டத்துக்குப் பிறகுதான் அவரால் திரைத் துறையில் நிலையான இடம்பெற முடிந்தது என்பது வேறு விஷயம். சிவாஜி கணேசனும் ரஜினிகாந்தும அவர்தம் முதல் படங்களில் நடித்தபோது அவர்களுக்கு 25 வயது. கமல்ஹாசன் நான்கு வயதில் திரையில் அடியெடுத்துவைத்தவர். 'ரோஜா' வெளியானபோது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 25 வயது.

ஆனால், இளையராஜா இசையமைத்த முதல் படமான 'அன்னக்கிளி' வெளியானபோது அவருக்கு 32 வயது. முதல் படத்திலேயே அவர் வெற்றிகரமான இசையமைப்பாளராகிவிட்டார். முதல் ஐந்தாண்டுகளுக்குள் 100 படங்களுக்கு இசையமைத்துவிட்டார். தொடர் வெற்றிகளின் மூலம், இசை மேதைமையின் மூலம் ரசிகர்களை மயக்கிக் கட்டிப்போட்டு தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னராகக் கோலோச்சிய 1980களில் அவர் 40களை நெருங்கியவராகவும் 40களைக் கடந்தவராகவும் இருந்தார்.

பொதுவாக இந்தியச் சமூகத்தில் 20களின் பிற்பகுதிகளுக்குள் செட்டிலாக முடியாதவர்கள் பலர் வாழ்வை இழந்துவிட்டதாக மற்றவர்களால் முத்திரை குத்தப்படுவார்கள். அல்லது தாமே அப்படி கற்பிதம் செய்துகொள்வார்கள். ஏனென்றால் 20களில் வாழ்வில் நிலையான வேலை, திருமணம் என்று செட்டில் ஆகிவிட்டால்தான் அதற்குப் பிறகு நடக்க வேண்டியவை சரியான வயதில் சரியான நேரத்தில் நடக்கும் என்பது சமூகத்தின் பொதுவான மனநிலை. ஆனால், அது நடக்கவில்லை என்பதற்காகத் துவண்டுபோய்விட வேண்டியதில்லை. பயணம் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம். அது எப்படி அமைகிறது என்பதும் அடையப்போகும் இலக்குகளுமே ஒருவரின் வாழ்வின் வெற்றி தோல்வியையும் அதைத் தாண்டிய முக்கியத்துவத்தையும் தீர்மானிக்கிறது என்பதற்கு இளையராஜாவே சான்று.

எப்போதும் நிற்காத கற்றல்

பயணத்தைத் தாமதமாகத் தொடங்குவதால் வெற்றி கிட்டிவிடாது. எந்தத் துறையிலும் வெற்றி பெறுவதற்கும் தொடர்ந்து நிலைத்து நிற்பதற்கும் அடுத்தடுத்த கட்டங்களுக்கு உயர்வதற்கும் கடினமான உழைப்பு மட்டுமல்ல, தொடர்ந்து கற்றுக்கொள்ளும் ஆர்வமும், விரைவாக கற்றுத் தேர்ச்சியடையும் திறமையும் புதிய மாற்றங்களுக்கும் முன்னேற்றங்களுக்கும் உடனடியாக முகம் கொடுத்து தன்னை அதற்கேற்றபடி தகவமைத்துக்கொள்ளும் ஆற்றலும் இருப்பவர்கள் மட்டுமே சாதனைகளை நிகழ்த்த முடியும். இதற்கும் இளையராஜாவைவிட ஒரு சிறந்த முன்னுதாரணம் இருக்க முடியாது.

14 வயதில் அண்ணன் பாவலர் வரதராஜன் நடத்திவந்த இசைக் குழுவில் இசைக் கலைஞராக இணைந்தார் இளையராஜா. அதற்கு முன்பே தன்ராஜ் மாஸ்டரிடம் நாட்டார் இசை பயின்றார். ஆக பிள்ளைப்பருவத்திலும், பதின்மயவதிலும் இளமைப் பருவத்திலும் தொடர்ந்து இசையுடன் இணைந்து அதைத் தன்னுடைய இன்னொரு சுவாசமாகவே கொண்டு வாழ்ந்துவருகிறார் இளையராஜா. இளமைப் பருவத்தில் மேற்கத்திய இசையையும் கர்நாடக இசையையும் முறைப்படி பயின்று தேர்ச்சி பெற்றார். ஆக எப்போதும் கற்றுக்கொள்பவராகவே இருந்தார். இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷின் இசைக் குழுவில் பல திரைப்படங்களில் பணியாற்றியபோதே தன்னுடைய இசைக் கோவைகளை உருவாக்கத் தொடங்கிவிட்டார். காலம் வரட்டும் என்று காத்திருக்கக் கூடாது. காலம் வரும்போது அதைப் பயன்படுத்திக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் அல்லவா?

இசையமைப்பாளர் ஆகிவிட்ட பிறகும் கற்பதை நிறுத்திவிடவில்லை. அவர் இசையமைக்கத் தொடங்கிய புதிதில்தான் பின்னணி இசையைக் கற்றுக்கொள்ளத் தொடங்கியதாக சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். மிகக் குறுகிய காலத்தில் தானாகக் கவனித்து சுய பரிசோதனைகளின் மூலம் கற்றுக்கொண்டார். அத்தகைய பயிற்சியின் மூலமே இந்திய சினிமாவில் பின்னணி இசையில் தலைசிறந்தவராக அறியப்படும் நிலையை அடைந்தார். இந்திய இசைக் கலைஞர்கள், தனக்கு முன் சாதனை படைத்த திரை இசையமைப்பாளர்கள், சர்வதேச புகழ்பெற்ற இசை மேதைகள் அனைவரின் இசையையும் தொடர்ந்து கேட்பதன் மூலமும் இசைப் பயிற்சியை மேற்கொண்டோர். இந்த உலகில் இதுவரை படைக்கப்பட்டுள்ள சிறந்த இசைக் கோவைகளைக் கேட்பதற்கே ஒரு ஆயுள் போதாது என்று சொல்வார்.

அபாரமான மல்டி டாஸ்க்கர்

தன்னுடைய இசையைக் காலமாற்றத்துக்கு ஏற்பத் தகவமைப்பதிலும் முறையான கவனம் செலுத்தினார். முதல் ஐந்தாண்டுகளில் அவருடைய இசைக்கும் அடுத்த 10 ஆண்டுகளில் அவருடைய இசைக்கும் மிகப் பெரிய வேறுபாடுகளை உணர முடியும். 90களுக்குப் பிந்தைய உலகமயமாக்கல் காலகட்டத்தில் அவருடைய இசை வேறு வடிவம் எடுத்தது. புத்தாயிரத்தில் இன்னொரு வடிவம் எடுத்தது. இவை எதிலும் இளையராஜாவின் இசையின் இயல்பும் ராஜமுத்திரையும் தனித்தன்மைகளும் குறைந்துவிடவில்லை. காலமாற்றத்துக்கு முகம் கொடுப்பது மட்டுமல்ல, எத்தகைய மாற்றம் வந்தாலும் தன்னுடைய இயல்பைத் தொலைக்காமல் இருப்பதையும் இளையராஜாவிடமிருந்து கற்கலாம்.

அப்புறம் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் மல்டி-டாஸ்க்கிங் திறமை இன்றைய பணிச்சூழலில் முன்னேற்றத்துக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இளையராஜா அளவுக்குப் பல வகைமைகளைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்களுக்கு ஒரே நேரத்தில் இசையமைத்திருக்கக்கூடிய கலைஞர்கள் உலக அளவிலேயே இருந்திருப்பார்களா தெரியவில்லை. அப்படித் தொடர்ந்து பல படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்ததால்தான் அவரால் 1000 திரைப்படங்கள் என்னும் இமாலய சாதனையை நிகழ்த்த முடிந்தது.

இதில் காதல் படம், ஆக்‌ஷன் படம் சென்டிமென்ட் படம், நகைச்சுவைப் படம், குடும்பப் படம், கிராமத்துப் படம், நகரத்துப் படம், பக்திப் படம், நவீனப் படம், பாடல்களுக்காகவே எடுக்கப்படும் படம், பாடல்களே இல்லாத படம் எனப் பல வகையான படங்களுக்கு ஒரே நேரத்தில் இசையமைத்துக் கொண்டிருந்தார். அதுவும் இந்தியச் செவ்வியல் இசை, நாட்டார் இசை, மேற்கத்திய இசை என ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு வகையான இசை தேவைப்படும். சில படங்களில் எல்லா வகையான இசையும் தேவைப்படும். காலையில் ஒரு படம், மதியம் ஒரு படம், மாலையில் ஒரு படம் என்று இசையமைத்திருப்பார். அனைத்துமே திரைப்பட இசைதான் என்றாலும் இத்தனை வகைமைகளைச் சேர்ந்த இசையைக் கொடுக்க முடிவது அபாரமான மல்டி டாஸ்க்கிங்தானே.!

வெறுப்பைப் புறக்கணித்தல்

எந்த ஒரு நபரும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்ல. இளையராஜா மீதும் நியாயமான பல விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் தொடக்கக் காலம் முதல் இன்றுவரை இந்த விமர்சனத்துக்குரிய கூறுகளைப் பயன்படுத்தி அவர் மீதும் வெறுப்பையும் வன்மத்தையும் கொட்டித்தீர்ப்பவர்கள் அநேகர். பெரும்பாலும் அவருடைய திறமையாலும் உழைப்பாலும் கிடைத்த அதீத புகழைக் கண்டு பொறாமை கொள்பவர்களின் வெளிப்பாடுகள்தாம். தொடக்கத்தில் தன் இசை குறித்து பத்திரிகைகளில் வந்த விமர்சனங்களைப் படித்துவந்ததாகவும் ஒரு கட்டத்துக்கு மேல் அது தன்னுடைய பணியில் தாக்கம் செலுத்துவதாக உணர்ந்த பிறகு விமர்சனங்களைப் படிப்பதையே நிறுத்திவிட்டதாகவும் கூறியிருக்கிறார் இளையராஜா. அண்மை ஆண்டுகளில் பொதுவெளியில் அவர் பேசிய சில கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன.

தன்னுடைய நீண்ட கால நண்பரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தான் இசையமைத்த பாடல்களை மேடையில் பாடக்கூடாது என்று கடிதம் அனுப்பியதை இளையராஜாவின் தீவிர ரசிகர்கள் சிலரால் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதேபோல் ஊடகங்களிடம் பேசும்போது கோபத்தில் சில கடுமையான ஆட்சேபத்துக்குரிய சொற்களைப் பேசிவிடுவதையும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. ஆனால், இளையராஜா தன்னுடைய இசையில் அமைந்த பாடல்களைப் பயன்படுத்தி இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல வகைகளில் பணம் சம்பாதிப்பவர்களிடம் தனக்கு ராயல்டி கொடுக்க வேண்டும் என்று சட்டத்துக்குட்பட்டுக் கேட்டபோதெல்லாம் அவருடைய எதிர்பார்ப்பில் இருந்த நியாயத்தையும் மதிக்காமல் சட்டத்தைத் தெரிந்துகொள்ளாமல் சமூக ஊடகங்களில் மோசமான கேலிகளுக்கும் வசைகளுக்கும் உள்ளாக்கப்பட்டார். அவர் வெளிப்படுத்திய சில கருத்துகளும் திரிக்கப்பட்டு வசைபாடப்பட்டன. ஆனால், இந்த வசைகளும் கேலிகளும் இளையராஜாவின் ரசிகர்களைப் புண்படுத்தலாம், இளையராஜாவைத் துளியும் அசைத்துவிட முடியாது.

அவர் இதுபோன்ற வசைகள், கேலிகள் எவற்றுக்கும் சிறிய அளவில்கூட எதிர்வினை ஆற்றுவதில்லை. தானுண்டு தன் இசையுண்டு என்று கலைப் பணியில் ஆழ்ந்திருக்கிறார். அதே நேரம் எஸ்பிபி உடனான பிணக்கை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டு உண்மையான அக்கறை கொண்டவர்களின் மன வருத்தத்தையும் போக்கிவிட்டார். இருவரும் இணைந்து மேடை நிகழ்ச்சி நடத்தினர். கடந்த ஆண்டு எஸ்பிபி கரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும் அவருடைய மரணத்துக்குப் பிறகும் காணொலிப் பதிவுகளாக இளையராஜா வெளியிட்ட செய்திகள் அனைவரையும் உருக வைத்தன.

நியாயமான, அக்கறையின்பால் விளைந்த விமர்சனங்களுக்குச் செவிமடுக்க வேண்டும். அதே நேரம் வெறுப்பாலும் வன்மத்தாலும் கற்களை வீசுபவர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள் அவர்களைப் புறக்கணிக்கக் கற்றுக்கொள்ளாவிட்டால் அவர்களுக்குப் பதில் சொல்வதிலும் எதிர்வினை ஆற்றுவதிலுமே நேரம் கழிந்துவிடும். நம்மால் நாம் நினைத்த காரியங்களைச் செய்ய முடியாது. இளையராஜாவிடமிருந்து கற்க வேண்டிய இன்னொரு முக்கியமான பாடம் இது.

என்றும் தணியாத கலைக் காதல்

ஒரு துறையில் ஒருவர் அடையப்போகும் இடத்தைத் தீர்மானிப்பது வெற்றிகளும் விருதுகளும் அல்ல. அவர் தான் தேர்ந்தெடுத்த பணியை/கலையை எந்த அளவுக்கு நேசித்தார், மதித்தார் என்பதே தீர்மானிக்கிறது. ஒருவர் தான் தேர்ந்தெடுத்த துறையை எந்த அளவு நேசிக்க வேண்டும் என்பதற்கும் அதுவும் இசை போன்ற கலைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு இந்த விடாப்பிடியான நேசம் எந்த அளவு முக்கியம் என்பதற்கு இளையராஜாவைவிட சிறந்த உதாரணம் இருந்துவிட முடியாது. ஆண்டுக்கு நூறு படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த 80களில் மட்டுமல்ல ஆண்டுக்கு ஒருசில படங்களுக்கு மட்டுமே இசையமைக்கும் காலத்திலும் இசையமைக்காத காலத்திலும்கூட அதிகாலை ஏழு மணிக்கு இசையமைப்புக் கூடத்துக்கு வந்துவிட்டார் என்றால் மாலை அல்லது இரவு வரை அங்கேயேதான் இருப்பார். ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருந்த அந்தக் காலத்தில் குடும்பத்துடன் செலவழிக்க அவருக்கு நேரமே இருக்கவில்லை. இளையராஜாவின் இளையமகன் யுவன் ஷங்கர் ராஜா இதைப் பல பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார்.

இன்றும் தன்னுடைய ஒரு நாளின் பெரும்பகுதியை இசைக்கே அர்ப்பணிக்கிறார். அவருடைய இசைப் பணியைப் படங்களின் எண்ணிக்கையோ ஊதியமோ என்றுமே தீர்மானித்ததில்லை. 75 வயதைக் கடந்திருந்த நிலையில் பிரசாத் ஸ்டுடியோவின் புதிய நிர்வாகத்தினரிடம் பிணக்கு ஏற்பட்டு அங்கிருந்து தன்னுடைய இசைக் கூடத்தை நீக்க வேண்டியிருந்தது. அவர் அங்கிருந்து நீங்குவதற்கு முன் அந்த இசைக்கூடத்தில் இருந்த பொருட்கள் சிலவற்றுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டதாகச் செய்திகள் வந்தன. இதுபோன்ற விஷயங்களால் ஏற்படும் மன உளைச்சலால் துவண்டுபோய்விடுவார்கள். ஆனால் 75 வயதைக் கடந்த இளையராஜா அடுத்த சில வாரங்களுக்குள் தனக்கென்று வேறோரு புதிய இசைக்கூடத்தை உருவாக்கி அங்கு சென்று பணியாற்றத் தொடங்கிவிட்டார். காலையில் வீட்டிலிருந்து கிளம்பும் அவருடைய கார் சாலிகிராமத்துக்குப் பதிலாக கோடம்பாக்கத்துக்குச் செல்ல வேண்டும் என்பது மட்டும்தான் வேறுபாடு. மற்றபடி தொழில் மீதான அவருடைய அர்ப்பணிப்பிலோ இசை மீதான நேசத்திலோ எந்த மாற்றமும் இல்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x