Published : 01 Jun 2021 13:48 pm

Updated : 01 Jun 2021 18:42 pm

 

Published : 01 Jun 2021 01:48 PM
Last Updated : 01 Jun 2021 06:42 PM

மர்லின் மன்றோ: புரிந்துகொள்ள முடியாத புதிர்; விடை கிடைக்காமல்போன விடுகதை!

marilyn-monroe

ஜூன் 1, 1926 - மர்லின் மன்றோவின் பிறந்த நாள்!

உலகப் புகழ்பெற்ற அமெரிக்க நடிகையும், பாடகியுமான மர்லின் மன்றோ, ஹாலிவுட்டைக் கலக்கிய அழகுப் பதுமை. விடுவிக்க முடியாத பல புதிர்களுக்குள் தன்னை ஒளித்து வைத்திருப்பவர். 1950-களில் ஹாலிவுட்டின் கனவு தேவதையாக வலம் வந்த மர்லின் மன்றோ, தனது இறுதி நாட்களில் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி, குடும்பப் பிரச்சினைகளால் அவதியுற்றார். 36 வயதில் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், அவரது மரணம் இன்னும் புதிராகவே இருந்து வருகிறது.

உணர்ச்சியும், கற்பனையும் கொண்டு வளர்ந்த ஓவியம் முதலியவற்றையே கலை என்று சிறப்பித்து வழங்குதல் பொருந்தும், என்றார் தமிழறிஞர் மு.வரதராசனார். ஆனால், கற்றதுக்கு உரியவை எல்லாம் கலைதான் என்ற பொது வரையறைக்குள் தன்னை விரிவுபடுத்திக் கொண்டது கலை.

உணர்ச்சிக்கும், கற்பனைக்கும் முக்கியத்துவம் தரும் முக்கியப் பொருளாகக் கலை விளங்குகிறது. இயல், இசை, நாடகம் எனத் தொன்றுதொட்டுக் கூறப்பட்டாலும், பேச்சு வராத அல்லது பேசத் தெரியாத காலத்தில் சைகை மொழிதான் சகல மொழியாக இருந்தது. பேச நினைப்பதை சைகை மொழியால் நடித்துக் காட்டிப் புரிய வைத்தபோதுதான் முதன் முதலாக நடிப்பு உருவானது. அப்படிப் பார்த்தால், மனிதன்தான் முதல் நடிகன்.

''கலை'' நாளடைவில் கலை வடிவமாய்க் கை, கால் முளைத்து, நாடகங்களாய்ப் பரிணாமம் பெற்றது. சினிமா என்ற சக்திவாய்ந்த சாதனம் கண்டுபிடிக்கப்பட்டபின், ''கலை'' தொழில்நுட்பத்தோடு கைகுலுக்கத் தொடங்கியது. கலை, சினிமாவுக்குள் தன்னை நாளுக்கு நாள் முகம் பார்த்து அழகுபடுத்திக் கொண்டது.

மௌனப் படம் ''பேசும் படமாக'' மாறியபோது அழகானது. அழகழகான கதாநாயகர்களும், நாயகிகளும் சினிமாவை இன்னும் அழகாக்கினார்கள். அமெரிக்காவின் கனவுத் தொழிற்சாலையான ஹாலிவுட், 1950-களில் தேவதைகளை ஊர்கோலம் போக வைத்தது. தேவதையான ஒரு நாயகி மட்டும் இன்றளவும், என்றளவும் உலக ரசிகர்கள் மனதில் நாற்காலி போட்டுக் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். அவர்தான் மயக்க வைக்கும் மர்லின் மன்றோ.

மர்லின் மன்றோ, ஹாலிவுட் உலகின் அழகு அவதாரம். 1950-களின் அதிர வைத்த அடையாளம். உலக சினிமா ரசிகர்களின் கனவுகளில் உலா வந்த எழில் தேவதை. அமெரிக்காவின் Los Angeles-ல் 1926-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி மருத்துவமனை ஒன்றில் பிறந்தார் மர்லின் மன்றோ. பெரும்பாலானோரைப் போல, மர்லின் மன்றோவின் இளமைக் காலம் இனிப்பானதாக இல்லை. பருவத்தை எட்டிவிட்டாலும், பக்குவத்தை எட்டாத 16 வயதில் திருமணம். பின்னர் விவகாரத்து எனத் தோள் வலிக்கும் தோல்விகள், அவரை தொடர்ந்த வண்ணமே இருந்தன.

1944-ம் ஆண்டு ஒரு தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, ஒளிப்படக் கலைஞர் ஒருவர் எடுத்த புகைப்படம் மர்லின் மன்றோவின் வாழ்க்கையை வேறு பாதைக்குப் பயணிக்க வைத்தது. மாடலிங் தொழிலில் காலடி எடுத்து வைத்த மர்லின் மன்றோ, தனது வசீகரத்தால், உயரம் தொட ஆரம்பித்தார். ஹாலிவுட் திரையுலகம் தனது கண்களை மர்லின் மன்றோ மீது திருப்பியது. சிறு சிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்த மர்லின் மன்றோ, நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் பிரபல நடிகையாக மாறினார்.

'The Asphalt Jungle' மற்றும் 'All About Eve' ஆகிய படங்கள் மர்லின் மன்றோவை, கனவுத் தொழிற்சாலையின் அகண்ட வானில் பறக்க வைத்தன. மர்லின் மன்றோவின் கட்டழகை ரசிகர்கள் ஏராளமானோர், மயக்கம் தெளிவிக்கும் மருந்து தெரியாமல் மகிழ்ச்சியாய் ரசித்தனர். மர்லின் மன்றோவின் நடையழகு, உடையழகு, சிகையழகு, சிரிப்பழகு உலக ரசிகர்களை அவர்பால் ஈர்க்க வைத்தது. இவரைப் போல் இன்னொருவர் நிச்சயம் வருவார் என்ற ஹாலிவுட் திரையுலகின் எண்ணத்தைத் தோற்கடித்தது.

சற்றே மேலே பறக்கும் மேலாடையுடன் 'The Seven year Itch' என்ற திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட மர்லின் மன்றோவின் ஒளிப்படம் சிறப்பாக அமைய 14 முறை ரீடேக் எடுக்கப்பட்டதாகவும், இரவு ஒரு மணிக்கு எடுக்கப்பட்ட காட்சி நிறைவுபெற 3 மணி நேரமானதாகவும், அந்தப் படத்தை எடுத்த புகைப்படக்காரர் தெரிவித்துள்ள சம்பவம், மர்லின் மன்றோவின் திரை வரலாற்றின் தித்திப்பான அத்தியாயமாக இன்றளவும் திகழ்கிறது.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப். கென்னடி மற்றும் ராபர்ட் கென்னடியுடன் இணைத்துப் பேசப்பட்ட மர்லின் மன்றோ, உலக ரசிகர்கள் பலரின் இதயங்களிலும் கட்டிய இணைப்புப் பாலம் மிகவும் இறுக்கமானது, நெருக்கமானது.

போதைப்பொருள் சகவாசம், விலக மறுத்த விரக்தி எல்லாம் சேர்ந்து, மர்லின் மன்றோ என்ற மனம் கவர்ந்த தேவதைக்கு இளம் வயதிலேயே மரணத்தைச் சம்பவிக்க வைத்தது. தன்னம்பிக்கை தோற்றுப்போய் 36 வயதில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

வாழ்கிறார்கள் என்ற ஒரே காரணத்தை வைத்து, வாழ்க்கை எல்லோருக்கும் பிடித்திருக்கிறது என்று கூறி விட முடியாதே... அதுபோலத்தான் கனவுத் தொழிற்சாலையும், அதன் கனமான நிகழ்வுகளும். பளபளக்கும் பட்டுப்புடவையின் பின்னணியில் பல்லாயிரக்கணக்கான பட்டுப் புழுக்களின் மரணம் மறைக்கப்பட்டிருப்பதைப் போல, ஒளி வீசும் கனவுத் தொழிற்சாலையின் மறுபக்கம் ஓராயிரம் மெழுகுவர்த்திகளின் கண்ணீர் ஒளிந்திருக்கிறது. அதை யாராலும் புரிந்துகொள்ள முடியாது.

மர்லின் மன்றோவின் மரணமும் புரிந்துகொள்ள முடியாத புதிர். விடை கிடைக்காமல் போன விடுகதை.

- லாரன்ஸ் விஜயன், மூத்த பத்திரிகையாளர்

தொடர்புக்கு: vijayanlawrence64@gmail.com


தவறவிடாதீர்!


Marilyn monroeமர்லின் மன்றோபிறந்த நாள்ஹாலிவுட்அமெரிக்க நடிகைAll About Eveஜான் எஃப். கென்னடிகனவுத் தொழிற்சாலைதிரை உலகம்போதைக்கு அடிமைபோதைப்பொருள்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x