Published : 01 Jun 2021 01:31 PM
Last Updated : 01 Jun 2021 01:31 PM

ஊடகத்தில் கசிந்த சிரஞ்சீவி தொலைபேசி பேச்சு: நல உதவிகள் பற்றி இருட்டடிப்பு செய்வதாக வேதனை

தான் செய்யும் நல உதவிகளைப் பற்றிச் செய்தி வெளியிடாமல் ஊடகத்தினர் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்வதாக நடிகர் சிரஞ்சீவி வேதனையுடன் பேசிய தொலைபேசி பேச்சு தற்போது வெளியே கசிந்துள்ளது.

கடந்த வருடம் கரோனா நெருக்கடி ஆரம்பித்த கட்டத்திலிருந்தே தெலுங்குத் திரையுலகில் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நடிகர் சிரஞ்சீவி உதவி செய்து வருகிறார். இதற்காக கரோனா நெருக்கடி அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து, அதன் மூலம் நிதி திரட்டியும், தனது பெயரில் செயல்படும் அறக்கட்டளை மூலமாகவும் பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து வந்தார்.

சமீபத்தில் தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு இலவச தடுப்பூசி முகாம் நடத்திய சிரஞ்சீவி, இனி ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒரு உயிரும் போகக் கூடாது என்று கூறி ஆந்திரா முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கான விநியோகத்துக்காக ஆக்ஸிஜன் வங்கிகளைத் தனது சொந்தச் செலவில் ஆரம்பித்துள்ளார். இதற்காக மட்டும் அவர் கிட்டத்தட்ட ரூ.30 கோடி செலவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி பாராட்டி செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் மூத்தோ கோபாலகிருஷ்ணா என்பவரைத் தொலைபேசியில் அழைத்து நன்றி தெரிவித்திருக்கும் நடிகர் சிரஞ்சீவி, அரசியல் காரணங்களுக்காகத் தான் செய்யும் நல உதவிகள் குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிடாமல் இருட்டட்டிப்பு செய்வதாக வேதனையுடன் பேசியுள்ளார்.

இந்தத் தொலைபேசி பேச்சு தற்போது வெளியே கசிந்துள்ளது.

"ஆக்சிஜன் வங்கிகள் குறித்து நீங்கள் வெளியிட்ட செய்திக்கு மனப்பூர்வமான நன்றி. நீங்கள் மிகையாக எழுதவில்லை, என்னை மகிழ்ச்சிப்படுத்த எழுதவில்லை. மக்களுக்கு இதைப் பற்றித் தெரிவிக்கவே எழுதப்பட்டுள்ளது. ஆனால் (மற்ற) ஊடகத்தினர் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்வது வேதனையைத் தருகிறது.

நல்ல செயல்களைக் கூடத் திரித்துப் பேசுகிறார்கள். நாங்கள் எவ்வளவு நல்லது செய்தாலும் அதைப் பற்றி ஊடகத்தினர் கண்டுகொள்வதில்லை. நான் யாரிடமும் பணம் பெறாமல் என் சொந்தச் செலவில் இந்த வேலைகளைச் செய்கிறேன்" என்று சிரஞ்சீவி பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x