Published : 01 Jun 2021 12:07 PM
Last Updated : 01 Jun 2021 12:07 PM
திரையரங்க அனுபவமாக இருந்திருக்க வேண்டிய படம் 'ஜகமே தந்திரம்' என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க, ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் திரையரங்க வெளியீடு அல்லாமல் நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ஜூன் 18-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் ஓடிடி வெளியீடு என்று முடிவானதிலிருந்தே தயாரிப்பாளர் சசிகாந்த் - தனுஷ் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது.
'ஜகமே தந்திரம்' திரைப்படம் ஓடிடி வெளியீடு என்று முடிவான பிறகு, அந்தப் படம் தொடர்பாக எந்தவொரு ட்வீட்டையும் தனுஷ் வெளியிடாமலேயே இருந்தார். இன்று ட்ரெய்லர் வெளியாகியுள்ள சூழலில், முதன்முறையாக 'ஜகமே தந்திரம்' குறித்து ட்வீட் செய்துள்ளார் தனுஷ்.
தனது ட்விட்டர் பதிவில் தனுஷ் கூறியிருப்பதாவது:
"ஒரு அற்புதமான திரையரங்க அனுபவமாக இருந்திருக்க வேண்டிய படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்துக்கு வருகிறது. இருந்தாலும் நீங்கள் அனைவரும் 'ஜகமே தந்திரம்' மற்றும் சுருளியை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்".
இவ்வாறு தனுஷ் தெரிவித்துள்ளார்.
தற்போது 'தி க்ரே மேன்' தொடருக்காக அமெரிக்காவில் படப்பிடிப்பில் இருக்கிறார் தனுஷ். தனது காட்சிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, இந்த மாதம் இந்தியா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
What would have been a great theatrical experience coming to Netflix. Nevertheless hope you all enjoy jagame thandhiram and suruli @karthiksubbaraj @Music_Santhosh https://t.co/gCeOdtkcD3
— Dhanush (@dhanushkraja) June 1, 2021
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT