Published : 30 May 2021 05:48 PM
Last Updated : 30 May 2021 05:48 PM

நீங்கள் இல்லை என்பதை ஏற்க மறுக்கிறது மனம்: கே.வி.ஆனந்த் குறித்து கலை இயக்குநர் கிரண் உருக்கம்

சென்னை

இயக்குநர் கே.வி.ஆனந்தின் பிரிவைத் தாங்க முடியாமல் கவிதை ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார் கலை இயக்குநர் கிரண்.

முன்னணி இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் ஏப்ரல் 30-ம் தேதி அன்று காலமானார். கரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானவர், திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். அவருடைய மறைவுக்கு ரஜினி, மோகன்லால் உள்ளிட்ட தென்னிந்தியத் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

இன்று (மே 30) கே.வி.ஆனந்த் இறந்து 30 நாட்கள் ஆகின்றன. அவருடைய பிரிவைத் தாங்காமல் கவிதை ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார் கலை இயக்குநர் கிரண். கே.வி.ஆனந்த் இயக்கிய படங்களுக்குக் கலை இயக்குநராக பணிபுரிந்தவர் கிரண். மேலும், தான் பணிபுரியும் படங்களில் சிறு கதாபாத்திரத்திலும் நடித்துவிடுவார்.

கே;வி.ஆனந்துக்கு நெருங்கிய நண்பராக வலம் வந்தவர், அவருடைய பிரிவைத் தாங்க முடியாமல் இந்தக் கவிதையை எழுதியுள்ளார்.

தூக்கம் சிதைந்த இரவுகள்
இம்மாதம்.!
அண்ணனாக
ஆசானாக
ஆலோசகனாக
நலம் விரும்பியாக
நல்ல நண்பனாக இருந்த
நீங்கள் இல்லை என்பதை
ஏற்க மறுக்கிறது மனம்....

தூக்கம் சிதைந்த இரவுகள்
இம்மாதம்.!
உணவிலும்..
அலைபேசியின் அழைப்பு
ஓசையிலும்..
அரிய இயற்கை படங்களிலும்..
அரசியல் வாசித்தாலும்..
சமூக வலைதளத்திலும்..
செடி/கொடிகளிலும்..
ஏன்.?
கண்கள் மூடினாலும்
உங்களின் உருவமே தெரிகிறது...

தூக்கம் சிதைந்த இரவுகள்
இம்மாதம்.!
சில இழப்புகளும்
பல தோல்விகளையும்
கண்ட எனக்கு - இது
மிகப்பெரிய பேரிழப்பே...

தூக்கம் சிதைந்த இரவுகள்
இம்மாதம்.!
உடல் இல்லா
நிழல் ஆனது...
போல உள்ளது.
தொலைந்து போன
குழந்தையைப் போல,
தவிக்கிறேன் செய்வது அறியாமல்.
நம்ப மறுக்கிறது - என் மனம்.
நீங்கள் இல்லை என்பதை...

தூக்கம் சிதைந்த இரவுகள்
இம்மாதம்.!
நம்ப மறுக்கும்
என் மனதோடு - போராடாமல்
நீங்கள்
என்னோடு இருப்பதாக
நினைக்கப் பழகுகிறேன்...
உங்களின்
அன்பை எதிர்பார்த்து -
என்றும்...

இவ்வாறு கிரண் எழுதியுள்ளார்.

— drk.kiran (@KiranDrk) May 30, 2021

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x