Published : 30 May 2021 17:12 pm

Updated : 30 May 2021 19:18 pm

 

Published : 30 May 2021 05:12 PM
Last Updated : 30 May 2021 07:18 PM

கே.எஸ்.ரவிகுமார் பிறந்த நாள் ஸ்பெஷல்: அனைவராலும் மதிக்கப்படும் இயக்குநர்-நடிகர் 

ksravikumar-birthday-special-article

சென்னை

தமிழ் சினிமாவில் பெரும் வெற்றிகளைக் குவித்த சாதனைப் படைப்பாளிகளில் முக்கியமானவரான இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் இன்று (மே 30) தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

1990இல் வெளியான 'புரியாத புதிர்' கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய முதல் படம். தரமான திரைப்படங்களுக்காக நற்பெயர் பெற்றிருந்த ஆர்.பி.செளத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்தது. மிகச் சிறிய முதலீட்டில் மிகக் குறுகிய காலத்தில் உருவான திரைப்படம், வித்தியாசமான கதையமைப்பு, சுவாரஸ்யமான திரைக்கதை ஆகியவற்றால் ரசிகர்களைக் கவர்ந்தது. விமர்சகர்களின் பாராட்டுகளைக் குவித்தது.


அதற்குப் பிறகு ரவிகுமார் இயக்கிய 'சேரன் பாண்டியன்' கிராமத்தில் நடக்கும் சென்டிமென்ட் படம். அதுவும் மிகப் பெரிய வெற்றிபெற்று சரத்குமாரை நாயக நடிகராக உயர்த்தியது. சரத்குமார், சத்யராஜ், கார்த்திக், அர்ஜுன், பிரபு, விஜயகாந்த், கமல்ஹாசன், ரஜினிகாந்த் என 90களில் அனைத்து முன்னணி நட்சத்திர நாயகர்களும் ரவிகுமார் இயக்கிய திரைப்படங்களில் நடித்தனர். 'நாட்டாமை', 'முத்து', 'அவ்வை சண்முகி', 'பிஸ்தா', 'நட்புக்காக', 'படையப்பா' என பிரம்மாண்ட வெற்றிப் படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் நட்சத்திர இயக்குநராக தயாரிப்பாளர்கள், நட்சத்திரங்கள் அனைவரின் நன்மதிப்பையும் பெற்ற இயக்குநராக உருவெடுத்தார் ரவிகுமார்.

புத்தாயிரத்துக்குப் பின் மூத்த நட்சத்திரங்களான கமல், ரஜினி, சரத்குமார் மட்டுமல்லாமல் விஜய், அஜித், சூர்யா, மாதவன், சிலம்பரசன் என அடுத்த தலைமுறை நட்சத்திரங்களுடனும் பணியாற்றினார். குறிப்பாக அஜித்தை வைத்து ரவிகுமார் இயக்கிய 'வில்லன்', 'வரலாறு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் அஜித்தின் திரைவாழ்வில் முக்கியத் திருப்புமுனைகளை ஏற்படுத்திய பெரும் வெற்றிப் படங்களாகின. இந்தக் காலகட்டத்தில் கமல்ஹாசனுக்கு மிகவும் இணக்கமான இயக்குநராகவும் திகழ்ந்தார். 'தெனாலி', 'பஞ்சதந்திரம்', 'மன்மதன் அம்பு' போன்ற நகைச்சுவைப் படங்களை இயக்கினார். 'தசாவதாரம்' என்னும் பிரம்மாண்ட கமர்ஷியல் படத்தின் மூலம் கமலின் பெருங்கனவுகளுக்குத் திரையில் உயிர் கொடுக்கும் திறமைமிகு இயக்குநராக வெளிப்பட்டார்.

தெலுங்கு, கன்னடம், இந்தி திரையுலகங்களிலும் வெற்றிகரமான இயக்குநராகத் தடம் பதித்தவர் ரவிகுமார். அவருடைய 'நட்புக்காக' 18 இந்திய மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. பல நேரடி தெலுங்குப் படங்களையும் 'நட்புக்காக' உள்ளிட்ட தமிழ்ப் படங்களின் தெலுங்கு மறு ஆக்கங்களையும் இயக்கியிருக்கிறார். தமிழில் ஹரி இயக்கத்தில் பிரம்மாண்ட வெற்றிபெற்ற 'சாமி' திரைப்படத்தை இந்தியில் சஞ்ச்ய தத்தை நாயகனாக வைத்து 'போலீஸ் கிரி' என்னும் தலைப்பில் இயக்கினார்.

தெலுங்கில் பாலகிருஷ்ணாவை வைத்து 'ஜெய் சிம்ஹா'(2018), 'ரூலர்' ஆகிய இரண்டு படங்களை இயக்கினார். கிச்சா சுதீப்பை வைத்து கன்னடத்தில் இயக்கிய 'கோடிகொப்பா 2' பெரும் வெற்றி பெற்றது. இது 'முடிஞ்சா இவனப்புடி' என்னும் தலைப்பில் தமிழிலும் வெளியானது.

தான் இயக்கிய திரைப்படங்களுக்காகத் தமிழக அரசின் விருது உட்படப் பல விருதுகளை வென்றிருக்கிறார் ரவிகுமார். திரைக்கதை அமைப்பதில் தனக்கென்று பிரத்யேக பாணியைக் கொண்டவர். ஆக்‌ஷன், ஹீரோயிசம், பஞ்ச், ரொமான்ஸ், கிளாமர் காமடி, சென்டிமென்ட் என அனைத்து ஜனரஞ்சக அம்சங்களையும் சரிவிகிதத்தில் உள்ளடக்கி திரைக்கதை அமைப்பதில் வல்லமை பெற்றவர். அவருடைய எந்தத் திரைப்படத்திலும் சுவாரஸ்யத்துக்குக் குறைவிருக்காது. அவருடைய அபாரமான திரைக்கதை திறமையே இதற்குக் காரணம்.

அதேபோல் மற்றவர்களின் கதையை வைத்து, திரைக்கதை அமைக்கும்போது கதையின் சாரம் கெட்டுவிடாமல் பார்த்துக்கொள்வார். 'மன்மதன் அம்பு', 'தசாவதாரம்' போன்ற கமல்ஹாசன் படங்களில் அவருடைய கதை-திரைக்கதை-வசனம் மூன்றையும் வைத்துக்கொண்டு ஒரு இயக்குநராக அவற்றுக்குத் திரையில் உயிர் கொடுக்கும் கலையில் தன் தனித்தன்மையை வெளிப்படுத்தியிருப்பார்.

ஒரு இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்றிருக்கிறார். தான் இயக்கிய அனைத்துப் படங்களிலும் கெஸ்ட் ரோலில் ஆவது நடித்துவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் ரவிகுமார் மற்ற இயக்குநர்களின் திரைப்படங்கள் பலவற்றில் பாசிட்டிவ், நெகட்டிவ் எனப் பலவகையான கதாபாத்திரங்களில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். கடைசியாக ஜெயம் ரவி நாயகனாக நடித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 'கோமாளி', ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த 'நான் சிரித்தால்' ஆகிய படங்களில் மெயின் வில்லனாக வெகு சிறப்பாக நடித்திருந்தார்.

தற்போது போஸ்ட் புரொடக்‌ஷனில் இருக்கும் அஜய் ஞானமுத்து இயக்கும் 'கோப்ரா' திரைப்படத்தில் விக்ரமுடன் நடித்துள்ளார். வெப் சிரீஸ்களிலும் தலைகாட்டத் தொடங்கிவிட்டார். அவர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த 'மதில்' என்னும் இணையத் தொடர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி, ரசிகர்கள் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது.

ஒரு இயக்குநராக, திரைக்கதை ஆசிரியராக, நடிகராகத் திரைத் துறையினர் திரைப்படங்களைக் கண்டு ரசிக்கும் பொதுமக்கள் அனைவரின் நன்மதிப்பையும் பெற்றிருக்கும் ஆளுமையான கே.எஸ்.ரவிகுமார் 30 ஆண்டுகளைக் கடந்து தொடரும் தன்னுடைய கலைப் பயணத்தில் இன்னும் பல வெற்றிகளையும் விருதுகளையும் குவிக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துவோம்.

தவறவிடாதீர்!

கே.எஸ்.ரவிகுமார்கே.எஸ்.ரவிகுமார் பிறந்த நாள்கே.எஸ்.ரவிகுமார் படங்கள்One minute newsKsravikumarKsravikumar birthdayHappy birthday ksravikumar

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x