Published : 28 May 2021 02:16 PM
Last Updated : 28 May 2021 02:16 PM

'ராதே' அவ்வளவு சிறப்பான படம் இல்லை: சல்மான் கானின் தந்தை கருத்து 

’ராதே’ அவ்வளவு சிறப்பான படம் ஒன்றும் கிடையாது. மேலும், பாலிவுட்டில் நல்ல கதாசிரியர்கள் இல்லை என்று ’ராதே’ படக் கதாசிரியரும், சல்மான் கானின் தந்தையுமான சலீம் கான் தெரிவித்துள்ளார்.

சல்மான் நடிப்பில் ஒவ்வொரு வருடமும் ஈகைத் திருநாள் அன்று ஒரு படம் வெளியாவது வழக்கம். இம்முறை கரோனா நெருக்கடியால் மே 13, ஈகைத் திருநாள் அன்று நேரடியாக ஓடிடியில் சல்மான் கானின் 'ராதே: யுவர் மோஸ்ட் வாண்டட் பாய்’ திரைப்படம் வெளியானது.

விமர்சகர்கள் படத்தைக் கடுமையாகச் சாடியிருந்தாலும் ஓடிடி தளங்களில் அதிக பார்வையாளர்களை ஈர்த்து படம் சாதனை படைத்தது. இந்நிலையில் ’ராதே’ படம் குறித்துக் கதாசிரியரும், சல்மான் கானின் தந்தையுமான சலீம் கானும் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

"சல்மான் கானின் முந்தைய படங்களின் சாயல் ’ராதே’வில் இருந்ததாக விமர்சகர்கள் கூறினர். ’ராதே’வுக்கு முன் வெளியான ’தபாங் 3’ வித்தியாசமாக இருந்தது. ’பஜ்ரங்கி பைஜான்’ நன்றாகவும், வித்தியாசமாகவும் இருந்தது. வணிக ரீதியான சினிமாவுக்கு, எல்லோருக்கும் பணத்தை ஈட்டித் தர வேண்டிய பொறுப்பு உள்ளது. அந்த வகையில் சல்மான் கான் தன் வேலையைச் செய்து வருகிறார்.

அவர் படத்தால் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் லாபமே. மற்றபடி ’ராதே’ அவ்வளவு சிறப்பான படம் ஒன்றும் கிடையாது. மேலும், பாலிவுட்டில் நல்ல கதாசிரியர்கள் இல்லை. அதற்குக் காரணம் அவர்கள் இந்தி, உருது இலக்கியங்களைப் படிப்பதில்லை. வெளிநாடுகளில் பார்க்கும் விஷயங்களை இந்தியத் தன்மைக்கு மாற்ற முயல்கின்றனர்" என்று சலீம் கான் பேசியுள்ளார்.

சலீம் கானும் - ஜாவேத் அக்தரும் இணைந்து பல பாலிவுட் படங்களில் கதாசிரியர்களாகப் பணியாற்றியுள்ளனர். ’ஷோலே’, ’யாதோன் கி பாராத்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்கள் இந்தக் கூட்டணி எழுதியதே. பாலிவுட்டில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற முதல் கதாசிரியர் இணை என்கிற பெருமை இவர்களுக்கு உண்டு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x