

டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா, கண்டசாலா, பி.பி.சீனிவாஸ், எஸ்.பி.பி. இவர்கள் எல்லாருக்கும் இருக்கும் ஓர் ஒற்றுமை, இவர்கள் எல்லோருமே பேஸ்வாய்ஸ் சிங்கர்ஸ் (கனத்த சாரீரம் வாய்த்த பாடகர்கள்) என்று அறியப்பட்டதுதான்.
கர்நாடக இசையில் பேஸ் வாய்ஸை, மந்திர ஸ்தாயியில் பாடுவது என்பார்கள். அப்படிப்பட்ட தன்னுடைய கனத்த சாரீரத்தால் மேற்கத்திய இசைக் குழுக்களால் கொண்டாடப்பட்டவர் டாக்டர் சாமுவேல் கிரப். இவரின் கனத்த குரல் வளத்தால் கவரப்பட்ட இளையராஜா, 'கோழி கூவுது' திரைப்படத்தில் இடம்பெற்ற 'அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே நம்ம ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்ப கெட்டுப் போச்சுண்ணே..' என்கிற பாடலைப் பாடவைத்தார். தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஒலித்த அந்தக் கனத்த குரல் அண்மையில் ஒலிப்பதை நிறுத்திக்கொண்டது.
மேற்கத்திய இசை நிகழ்ச்சிகளை வழங்குவதில் புகழ்பெற்ற மெட்ராஸ் மியூசிகல் அசோசியேஷனில் இசை நடத்துநராகவும் பாடகராகவும் இருந்தவர் டாக்டர் சாமுவேல் கிரப். பொள்ளாச்சியில் 1940 மார்ச் 12 அன்று செல்லராஜ் - வடிவம்மாள் தம்பதிக்குப் பிறந்தார் சாமுவேல்.
எட்டுக் குழந்தைகள் உள்ள அந்தக் குடும்பத்தில் ஆறாம் குழந்தை சாமுவேல். பெயின்ஸ் பள்ளியிலும், மெட்ராஸ் கிறித்தவக் கல்லூரியிலும் படித்தார். பள்ளி இறுதியை பச்சையப்பா கல்லூரியில் முடித்த அவர், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தார்.
தொடர்ந்து, மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் தோல் மருத்துவத்தை பிரத்யேகமாகத் தேர்ந்தெடுத்து அதில் தன்னுடைய நிபுணத்துவத்தை வளர்த்துக்கொண்டார். தோல் மருத்துவ சிகிச்சையில் புகழ்பெற்ற மருத்துவரானார். தங்களின் இசை நிகழ்ச்சிகளில் இடம்பெற்று பியானோ கலைஞராகச் சுடர்விட்ட பிரமிளாவைத் திருமணம் செய்துகொண்டார் சாமுவேல். மருத்துவமும் இசையும் சாமுவேலின் இரு கண்களாகின.
1971-ல் மேற்குலகின் இறைகீத பாடல்களைப் பாடும் வகைமையான காஸ்பல் இசையில் மிகவும் பிரபலமானவரும், இருபதாம் நூற்றாண்டில் மிகவும் முக்கியமான அரிதான குரல்வளம் உள்ள பாடகியாக அறியப்பட்டவருமான மஹாலியா ஜாக்ஸன், சென்னை மியூசிக் அகாடமியில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக வந்திருந்தார்.
அப்போது, மெட்ராஸ் மியூசிகல் அசோசியேஷனின் சேர்ந்திசை நிகழ்ச்சியைக் கேட்டார். அதில் குறிப்பாக டாக்டர் சாமுவேலின் குரல் வளத்தைப் பெரிதும் பாராட்டினார். 'ஆழம் காண முடியாத அடர்த்தியான கனத்த குரல் வளத்தைக் கொண்டவர் நீங்கள்' என்று சாமுவேலைப் பாராட்டினார் மஹாலியா ஜாக்ஸன். டாக்டர் சாமுவேலின் இசைக் குழுவினர் சிட்னியில் நடந்த ஒலிம்பிக் விழா கொண்டாட்டத்திலும் பாடியது உலகின் பார்வையை இந்தியாவின் மீது திருப்பியது.
பின்னாளில் குழுவில் இருந்த பலரும் அவரவர் பணி காரணங்களுக்காக பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர். டாக்டர் சாமுவேல் லிபியாவில் பல ஆண்டுகள் மருத்துவச் சேவையில் ஈடுபட்டார். அதன்பின் தாயகம் திரும்பியவர், மெட்ராஸ் மியூசிக்கல் அசோசியேஷனில் 1989-ல் இசை நடத்துநராக இறுதிநாள் வரை இசைச் சேவையை அளித்தார். மேற்கத்திய இசை ரசிகர்களின் மனத்தில் டாக்டர் சாமுவேலின் கனத்த குரல் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும்!
அண்ணே அண்ணே பாடலைக் காண: