Published : 25 May 2021 13:29 pm

Updated : 25 May 2021 19:06 pm

 

Published : 25 May 2021 01:29 PM
Last Updated : 25 May 2021 07:06 PM

கவுண்டமணி பிறந்த நாள் ஸ்பெஷல்: எல்லோராலும் எப்போதும் கொண்டாடப்படும் கலைஞன் 

goundamani-birthday-special

சென்னை

தமிழ் சினிமாவின் தலைசிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர், எல்லாத் தரப்பினராலும் கொண்டாடப்படும் நகைச்சுவை வித்தகர், 70களில் நடிக்கத் தொடங்கினாலும் 2கே கிட்ஸையும் 2.1கே கிட்ஸையும் கவரும் காலத்தால் அழிக்க முடியா நகைச்சுவைக் காட்சிகளையும் தமிழ் மக்களின் அன்றாடப் பேச்சு வழக்கின் தவிர்க்க முடியா அங்கமாகிவிட்ட வசனங்களையும் கொடுத்த நடிகர் கவுண்டமணி இன்று தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். தமிழகம் கொண்டாடுகிறது என்று சொல்வதே இன்னும் பொருத்தமானதாக இருக்கும்.

கவுண்டமணியின் இயற்பெயர் சுப்பிரமணியன். உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் பிறந்து நாடகங்களின் வழியாகத் திரைத்துறைக்கு வந்தவர். அவர் திரையில் தலைகாட்டத் தொடங்குவதற்கு முன்பே திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டனர். 1970இல் வெளியான 'ராமன் எத்தனை ராமனடி' கவுண்டமணியின் முதல் படமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பே 'சர்வர் சுந்தரம்', 'ஆயிரத்தில் ஒருவன்' போன்ற படங்களில் அவர் கூட்டத்தில் ஒருவராகத் திரையில் தோன்றியிருக்கிறார். ஆனால் இயக்குநர் இமையம் பாரதிராஜாவின் அறிமுகப்படமான '16 வயதினிலே' படத்தில் பிரதான எதிர்மறைக் கதாபாத்திரமான பரட்டையின் (ரஜினிகாந்த்) கூட்டாளியாக நடித்ததும் 'பத்த வெச்சிட்டியே பரட்ட' என்னும் வசனமும் கவுண்டமணியின் முகத்தையும் பெயரையும் ரசிகர்கள் மனங்களில் பதியவைத்தன.


'கிழக்கே போகும் ரயில்', 'புதிய வார்ப்புகள்' எனத் தொடர்ந்து பாரதிராஜா படங்களில் நகைச்சுவையைத் தாண்டிய முக்கியமான துணைக் கதாபாத்திரங்கள் கிடைத்தன. 1980களில் பல படங்களில் தனியாகவும் 'வைதேகி காத்திருந்தாள்', 'கரகாட்டக்காரன்' போன்ற சில படங்களில் நடிகர் செந்திலுடன் இணைந்தும் நடித்த நகைச்சுவைக் காட்சிகள் கவுண்டமணியைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றன.

'கரகாட்டக்காரன்' படத்தில் இடம்பெற்ற 'வாழைப்பழ' காமெடி உலகப் புகழ் பெற்றது. அதன் பிறகு கவுண்டமணி-செந்தில் இணை தமிழ் சினிமாவின் தலைசிறந்த நகைச்சுவை இணையாக உருவெடுத்தது. தமிழ் சினிமாவில் வேறெந்த நகைச்சுவை இணையும் இந்த அளவு வெற்றிகரமானதாகவும், தொடர்ந்து பல திரைப்படங்களில் இயங்கிவந்ததாகவும் இருந்ததில்லை. இனிமேல் இருக்க முடியுமா என்பதும் சந்தேகமே.

90களில் பெரும்பாலும் செந்திலுடன் இணைந்து நடித்தாலும் பல படங்களில் தனி ஆவர்த்தனத்திலும் பட்டையைக் கிளப்பினார். 'புது மனிதன்', 'மை டியர் மார்த்தாண்டன்', 'நடிகன்', 'பிரம்மா', 'சிங்காரவேலன்', 'வியட்நாம் காலனி', 'உழைப்பாளி', 'மன்னன்', 'சூரியன்', 'மாமன் மகள்' எனப் பல படங்களில் செந்திலின் துணை இல்லாமலும் நகைச்சுவையை வாரி வழங்கினார். திரையில் சக நகைச்சுவை நடிகரான செந்திலை எப்படி ஓட்டுவாரோ அதேபோல் நட்சத்திர நடிகர்களை ஓட்டத் தயங்கியதில்லை. “அந்தக் கைய தூக்கறத நிறுத்த மாட்டியாப்பா” என்று 'மன்னன்' படத்தில் ரஜினியைக் கலாய்ப்பதாகட்டும் “சந்த்ரு சந்த்ருனு இங்க ஒரு மானஸ்தன் இருந்தான் அவன தேட்றேன்' என்று 'இந்தியன்' படத்தில் கமலைக் கலாய்த்ததும் உச்ச நட்சத்திர நடிகர்களே திரையில் கவுண்டமணியால் கலாய்க்கப்படுவதை விரும்பினார்கள் என்பதற்கான சான்று.

சத்யராஜ் என்றால் கேட்கவே வேண்டாம். கவுண்டமணிக்கு மிகப் பொருத்தமான ஜோடி என்று செந்திலுக்கு இணையாக நட்சத்திர கதாநாயகனாக இருந்த சத்யராஜையும் சொல்லலாம். இரண்டு பேரும் பல படங்களில் மாற்றி மாற்றி கலாய்த்து ரசிகர்களைக் கொண்டாட வைத்தார்கள். கவுண்டமணியுடன் நடிக்கும்போது தான் சிரிப்பை அடக்கிக்கொள்ள மிகவும் சிரமப்பட்டதாக சத்யராஜ் பலமுறை கூறியிருக்கிறார். 'பிரம்மா' படத்தில் குஷ்புவைத் தேடி மிஷனரி பள்ளிக்குச் சென்று வாட்ச்மேனிடம் விசாரிக்கும் காட்சியில் கவுண்டமணியின் வசனங்களுக்குச் சிரிப்பைக் கட்டுப்படுத்திக்கொள்ள சத்யராஜ் மிகவும் கஷ்டப்படுவதையும் அதையும் தாண்டி சிரிப்பு வெளிப்பட்டுவிடுவதையும் காணலாம்.

நட்சத்திர நடிகர்களைத் திரையில் ஓட்டும் அளவு சுதந்திரத்தைப் பெற்றிருந்தார். அதை அவர்கள் அனுமதிக்கும் அல்லது வேறு வழியில்லாமல் பொறுத்துக்கொள்ளும் அளவுக்குத் திரைத் துறையிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் மதிப்பைப் பெற்றிருந்தார் கவுண்டமணி. இந்த விஷயத்தில் அவருக்கு நிகர் வேறு யாருமில்லை என்று சொல்லலாம்.

கவுண்டமணியின் நகைச்சுவை காலத்தைக் கடந்து ரசிக்கப்படுவதற்கும் எல்லோரையும்விட சிறந்தவராக அவர் கொண்டாடப்படுவதற்கும் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் முக்கியமானது அவர் ஒரு குறிப்பிட்ட நகைச்சுவை பாணிக்குள் அடக்கிவிட முடியாத நடிகர் என்பது. கூட இருப்பவர்களைக் கலாய்த்தல், கவுண்ட்டர் (புத்திசாலித்தனமான பதிலடி) கொடுத்தல் ஆகியவற்றில் அபார திறமைக்காக கவுண்ட மணி என்று பெயர் மாற்றம்பெற்ற அவர் அத்துடன் தன்னை சுருக்கிக் கொள்ளவில்லை. மற்றவர்களால் கலாய்க்கப்படுவதற்கும் தன்னை ஆட்படுத்திக்கொண்டார்.

அறியாமை அல்லது அப்பாவித்தனத்தால் நிகழும் திட்டமிடா நகைச்சுவையான ஸ்லாப்ஸ்டிக் வகை நகைச்சுவையையும் பல படங்களில் அள்ளிக்கொடுத்தார். கவனக் குறைவாலும் திமிராலும் அடாவடித்தனத்தினாலும் ஏதேனும் செய்துவிட்டு அதனால் இழப்புகளை எதிர்கொள்ளும் கதாபாத்திரங்கள் மூலமாகவும் நகைச்சுவை செய்தார். செந்திலுடனான பல படங்களில் அவர் செந்திலை அடிப்பது திட்டுவது போலவே செந்தில் அவரை புத்திசாலித்தனமாகத் தோற்கடிப்பது மற்றவர்களிடம் மாட்டவிட்டு அடிவாங்கிக் கொடுப்பது போன்ற காட்சிகளும் இருக்கும். இருவரும் இணைந்து நடித்த பல காட்சிகளில் கவுண்டமணியை ஒரு பிரச்சினையில் சிக்க வைத்து புத்திசாலித்தனமாகத் தப்பித்துக் கொள்வார் செந்தில். அல்லது “அண்ணன் ரொம்ப செவப்படு டா சட்ட கலர் கூட செவப்பா இருக்கு பாரு” என்று கவுண்டருக்கே கவுண்டர் கொடுப்பார்.

இது தவிர என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, சோ ஆகியோரின் வழியில் சமூக அரசியல் விமர்சனங்களையும் நகைச்சுவையுடன் கலந்து பல படங்களில் கொடுத்தவர் கவுண்டமணி. இதில் கவுண்டமணிக்கு எந்த சார்பும் இருக்கவில்லை. எந்த ஒரு திருவுருவையும் பெரிதும் மதிக்கப்படும் சமூக அமைப்பையும் கேள்விக்குட்படுத்தவும் கிண்டலடிக்கவும் அவருக்கு எந்தத் தயக்கமும் இருந்ததில்லை. இதனால்தான் அவரால் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை மட்டுமல்லாமல் வாக்குக்குப் பணம் வாங்கும் மக்களையும் விமர்சிக்க முடிந்தது. சாதிய மேட்டிமை உணர்வைப் பணக்காரர்களின் ஆதிக்கத்தைக் கிண்டலடிப்பதுபோல் கிராமங்களில் எளிய மக்களிடம் நிலவிய அறியாமைகளையும் கிண்டலடிக்க முடிந்தது.

கவுண்டமணி திரையில் தோன்றி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. இருந்தாலும் இன்று சமூக வலைதளங்கள் அனைத்திலும் அவரை 'நகைச்சுவை சக்கரவர்த்தி' என்றும் 'மகான்' என்றும் இன்னும் பல உயர்வான அடைமொழிகளுடனும் வாழ்த்தும் செய்திகளும் பதிவுகளும்தான் நிரம்பியிருக்கின்றன. அவர் திரைத் துறையில் மிகவும் ஆக்டிவாக இருந்த காலகட்டம் முடிந்த பிறகு பிறந்த இன்றைய பதின்பருவத்தினரும் கவுண்டமணியைப் பெரிதும் கொண்டாடுகின்றனர். அந்த அளவு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தலைமுறைகள் கடந்தாலும் அவருடைய நகைச்சுவைக் காட்சிகள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துக்கொண்டே இருக்கும். எல்லோராலும் என்றென்றைக்கும் கொண்டாடப்படுவார் கவுண்டமணி. இதுவே ஒரு அசலான கலைஞனின் வெற்றி. யாருக்கும் அவ்வளவு எளிதில் கிடைக்காத வெற்றி.


தவறவிடாதீர்!

GoundamaniGoundamani birthdayHappy birthday goundamaniOne minute newsகவுண்டமணிகவுண்டமணி பிறந்த நாள்கவுண்டமணி சிறப்புக் கட்டுரை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x