

ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த 'அண்ணாத்த' படப்பிடிப்பை முடித்துவிட்டு, சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்.
சிவா இயக்கத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
கரோனா பரவல், ரஜினியின் உடல்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டது. ரஜினியின் உடல்நிலை சீரானவுடன் சென்னையில் 'அண்ணாத்த' படப்பிடிப்பு கடும் கட்டுப்பாடுகளுடன் தொடங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் ஏற்கெனவே போடப்பட்டிருந்த அரங்கில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. பயோ-பபுள் முறையில் கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வந்த படப்பிடிப்பு முடிந்தது. அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள நண்பர்களைச் சந்தித்துள்ளார் ரஜினி.
பின்பு, இன்று (மே 12) காலை சென்னை திரும்பினார் ரஜினி. இங்கு கரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் அவர் விமானத்திலிருந்து இறங்கும் வீடியோ பதிவுகள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், அவர் காரில் வீட்டிற்குள் செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. ரஜினியை அவருடைய மனைவி லதா ஆரத்தி எடுத்து வரவேற்பது பதிவாகியுள்ளது.
சென்னையில் கரோனா பரவல் அதிகமாகியுள்ளதால் வீட்டிலேயே ஓய்வெடுக்க உள்ளார் ரஜினிகாந்த். கரோனா அச்சுறுத்தல் குறைந்தவுடன்தான் 'அண்ணாத்த' படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு திட்டமிடப்படவுள்ளது.