Published : 12 May 2021 13:27 pm

Updated : 12 May 2021 13:27 pm

 

Published : 12 May 2021 01:27 PM
Last Updated : 12 May 2021 01:27 PM

கரோனா தொற்றிலிருந்து மீண்ட இயக்குநர் ரவிக்குமார்: பொதுமக்களுக்கு வேண்டுகோள்

director-ravikumar-facebook-post
கோப்புப் படம்

சென்னை

கரோனா தொற்றிலிருந்து மீண்ட இயக்குநர் ரவிக்குமார், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

'இன்று நேற்று நாளை' படத்தைத் தொடர்ந்து 'அயலான்' படத்தை இயக்கி வருகிறார் ரவிக்குமார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கரோனா 2-வது அலையின் தீவிரத்தால் இந்தப் படத்தின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில், இயக்குநர் ரவிக்குமாருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து மீண்டுள்ளார். இது தொடர்பாகத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"முன்னெச்சரிக்கையோடு இருந்தேன். இருந்தும் கரோனா என்னைத் தொற்றியது. எந்தவித அறிகுறியும் இல்லை. மூக்கில் ஒழுகியதும் கூட வழக்கமான அலர்ஜி என்ற அளவில்தான் நினைத்தேன். இருந்தும் சந்தேகத்தின் பேரில் 26.04 அன்று இரத்தப் பரிசோதனை செய்து பார்த்தேன் CBC, CRP, d-dimer அதில் CRP 26 என்ற அளவில் இருந்தது டாக்டர் வரபிரசாத் அதை கோவிட் என்று உறுதிசெய்து மருத்துவ ஆலோசனையும் மருந்துகளையும் பரிந்துரைத்தார். வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு மருந்துகளை எடுத்துக்கொண்டேன்.

என்னருகிலேயே இருந்த குழந்தை நறுமுகை (3) மீதும், மனைவி பிரியா மீதும் கவலை வந்தது. மறுநாள் எல்லோருக்கும் ஸ்வாப் டெஸ்ட் எடுத்ததில் எனக்கும் நறுமுகைக்கும் மட்டும் பாசிட்டிவ். டாக்டர் வரபிரசாத் மிகுந்த நம்பிக்கை கொடுத்தார். நறுமுகைக்கும் சிரப் எழுதிக் கொடுத்தார். பிரியாவின் அன்பும், சலிப்பற்ற உணவு உபசரிப்பும் மீண்டுவர ரொம்பவும் உதவியது.

தொடர்ந்து மருந்துகள் எடுத்துக்கொண்டேன். 14 நாட்கள் கடந்து நேற்று 10.05 ஸ்வாப் பரிசோதனை ரிசல்ட் இப்போது வந்தது நெகட்டிவ் என்று. டாக்டர் வரபிரசாத்துக்கு நெஞ்சார்ந்த நன்றி. சார் என்ன வேணும் என்று கேட்டு தினசரிப் பொருட்கள் வாங்கி வந்து கொடுத்த என் உதவியாளன் நாகேந்திரனுக்கு என் அன்பு.

அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் உடனே இரத்தப் பரிசோதனை/ ஸ்வாப் செய்து கொள்வது மிக அவசியம். நோய் தொற்ற ஆரம்பித்த 7 நாட்கள் மிக முக்கியமான நாட்கள். அதற்குள் மருந்துகள் எடுத்துக்கொள்வது அவசியம். காலதாமதம் செய்வதும் “எனக்கு வராது அதெல்லாம் ஒன்னும் இல்லை”, “டெஸ்ட் பண்ணுனா கரோனான்னு சொல்லிடுவாங்க”. இப்படியாக அலட்சியமாகப் பரிசோதனையைத் தள்ளிப் போடுவதும் நோய் உடலுக்குள் வீரியமடையவே உதவி செய்யும். மிகுந்த விழிப்புணர்வோடு நோய்க்கு முந்தினால் மட்டுமே நோயை வெற்றிகொள்ள முடியும்

நோய்த்தொற்றுக்கு ஆளான பிறகு ஃபேஸ்புக் மற்றும் செய்திகள் வாயிலாக இறந்தவர்கள் பற்றிய நியூஸ் கேட்க கேட்க மனப்பதற்றம் ஏற்படுகிறது. துளியும் தூக்கம் வரவில்லை. அதுவும் நம் மனநிலையை பாதிக்கிறது. நோயுற்ற காலத்தில் முடிந்த அளவு நியூஸ் பார்க்காமல் இருப்பது நல்லது.

உறவுகளுக்குள்ளும், நட்புகளுக்குள்ளும் நிறையத் தொற்று ஏற்பட்டுள்ளது. அன்பானவர்களுக்குச் சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்றுதான் சிறிய சந்தேகம் இருப்பினும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். தாமதம் செய்யாமல் உங்கள் மருத்துவரை அணுகுங்கள். மீண்டு வருவோம்".

இவ்வாறு இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

தவறவிடாதீர்!

CoronaCorona virusDirector ravikumarRavikumar facebook postCorona for ravikumarOne minute newsகரோனாகரோனா தொற்றுஇயக்குநர் ரவிக்குமார்ரவிக்குமாரின் ஃபேஸ்புக் பதிவு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x