Published : 11 May 2021 05:25 PM
Last Updated : 11 May 2021 05:25 PM

ஹாலிவுட்டில் வெடிக்கும் புதிய சர்ச்சை: கோல்டன் குளோப் விருதுகளைத் திருப்பிக் கொடுத்த டாம் க்ரூஸ்

நடிகர் டாம் க்ரூஸ் தான் இதுவரை வென்ற மூன்று கோல்டன் குளோப் விருதுகளையும் திருப்பிக் கொடுத்துள்ளார்.

ஹாலிவுட் ஃபாரின் ப்ரெஸ் அசோசியேஷன் என்கிற அமைப்பு ஒவ்வொரு வருடமும் கோல்டன் குளோப் விருதுகளை வழங்கி வருகிறது. சினிமா மற்றும் சின்னத்திரையில் சிறந்த படைப்புகளையும், கலைஞர்களையும் வருடா வருடம் இந்த அமைப்பு கவுரவித்து வருகிறது. இதுவே கோல்டன் குளோப் என்றழைக்கப்படுகிறது. ஆஸ்கருக்கு இணையாக இந்த விருது வழங்கும் விழா பார்க்கப்படுகிறது.

பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், புகைப்படப் பத்திரிகையாளர்கள் இந்த அமைப்பின் உறுப்பினர்கள். 90 உறுப்பினர்கள் இருக்கும் இந்த அமைப்பில் கடந்த 19 வருடங்களாக கருப்பினத்தவர் யாரும் உறுப்பினராக இல்லை என்றும், வெள்ளை நிறத்தவர்களுக்கே இந்த அமைப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றும், அமைப்பைச் சேர்ந்தவர்கள் நிறவெறி குறித்து சர்ச்சைக் கருத்துகளைக் கூறியுள்ளனர் என்றும் அண்மையில் ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.

லாஸ் ஏஞ்சல்ஸ் பத்திரிகையில் இதுகுறித்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து ஹாலிவுட்டில் பெரிய சர்ச்சை வெடித்தது. அமைப்பின் செயல்பாட்டைக் கண்டித்து பல்வேறு நட்சத்திரங்கள், தயாரிப்பு நிறுவனங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதையொட்டியே, 1989, 1996, 1999 வருடங்களில் தான் வென்ற மூன்று கோல்டன் குளோப் விருதுகளையும் நடிகர் டாம் க்ரூஸ் திருப்பிக் கொடுத்துள்ளார்.

இன்னொரு பக்கம் கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழாவைப் புறக்கணிப்பதாக அமேசான், நெட்ஃபிளிக்ஸ், வார்னர் உள்ளிட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன. வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதிக்குள் இந்த அமைப்பில் உரிய மாற்றங்கள் நிகழும், பல்வேறு இனத்தைச் சேர்ந்தவர்களும் இதன் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் செயலில் வரும் வரை கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவை ஒளிபரப்ப மாட்டோம் என்று என்பிசி தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x