பன்மொழிகளில் கரோனா விழிப்புணர்வுச் செய்தி: 'ஆர்.ஆர்.ஆர்' குழு வெளியிட்ட காணொலி
கரோனா விழிப்புணர்வு குறித்த தகவல்களைப் பேசி 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படக் குழுவைச் சேர்ந்த நடிகர்களும், இயக்குநர் ராஜமௌலியும் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13ஆம் தேதியன்று இந்தப் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது நிலவும் கரோனா நெருக்கடி சூழலில் படப்பிடிப்பை நடத்துவது பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதனால் படப்பிடிப்பு காலவரையின்றி தள்ளிப்போனதாகக் கூறப்படுகிறது.
தற்போது ஆலியா பட், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், எஸ்.எஸ்.ராஜமௌலி எனப் படம் சம்பந்தப்பட்டவர்கள் பேசும் காணொலி ஒன்று 'ஆர்.ஆர்.ஆர்' அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
இதில், முகக்கவசம் அணியுங்கள், சமூக விலகலைப் பேணுங்கள், தேவையின்றி வெளியே செல்லாதீர்கள், கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள் என்று, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என அத்தனை முக்கிய மொழிகளிலும் பேசியுள்ளனர்.
