இனி கங்கணாவுடன் எப்போதும் பணியாற்றப் போவதில்லை: பிரபல ஆடை வடிவமைப்பாளர்கள் அறிவிப்பு

இனி கங்கணாவுடன் எப்போதும் பணியாற்றப் போவதில்லை: பிரபல ஆடை வடிவமைப்பாளர்கள் அறிவிப்பு
Updated on
1 min read

அடிக்கடி சர்ச்சைக் கருத்துகளைப் பகிர்வது நடிகை கங்கணா ரணாவத்தின் வழக்கம். சில சமயங்களில் கங்கணாவின் சகோதரி ரங்கோலியும் தன் பங்குக்கு சர்ச்சைகளைக் கிளப்புவார். இதனால் இருவரும் சட்டரீதியான நடவடிக்கைகளைச் சந்தித்துள்ளனர்.

அண்மையில் மக்கள்தொகை பிரச்சினை பற்றிப் பேசியிருந்த கங்கணா, மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்களுக்கு சிறை தண்டனை வேண்டும் என்று சர்ச்சை கிளப்பினார். பின் ஆக்சிஜன் சிலிண்டர் பயன்படுத்துபவர்கள் அனைவரும் மீண்டும் இயற்கைக்குக் கைம்மாறு செய்ய வேண்டும் என்று பேசிப் பல விமர்சனங்களை எதிர்கொண்டார்.

தற்போது மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த தேர்தலில் மம்தா பானர்ஜியின் வெற்றியைத் தொடர்ந்து அங்கு தீவிரமான வன்முறைச் சம்பவங்கள் நடப்பது குறிப்பது கங்கணா ட்வீட் செய்திருந்தார். அங்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்கிற ரீதியில் தொடர் ட்வீட்டுகளைப் பகிர்ந்தார். அவர் பகிர்ந்திருக்கும் விஷயங்கள் ட்விட்டரின் விதிமுறைகளுக்கு எதிராக இருப்பதால், கங்கணாவின் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல பாலிவுட் ஆடை வடிவமைப்பாளர்களான ஆனந்த பூஷன், ரிம்ஸின் தாது இருவரும் இனி கங்கணாவுடன் இணைந்து பணியாற்றப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.

இது குறித்து ஆனந்த் பூஷண் கூறியுள்ளதாவது:

இன்று நடந்த சில குறிப்பிட்ட நிகழ்வுகள் அடிப்படையில், எங்களுடைய அனைத்து சமூக வலைதள பக்கங்களிலிருந்து கங்கணாவின் படங்களையும் நீக்குகிறோம். மேலும் இனி எதிர்காலத்திலும் அவரோடு பணியாற்றப் போவதில்லை என்பதை அறிவிக்கிறோம். ஒரு நிறுவனமாக வெறுப்பு பேச்சுக்களை நாங்கள் ஒருபோதும் ஆதரிப்பதில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதேபோல ரிம்ஸின் தாதுவும் தான் கங்கணாவுடன் பணியாற்றப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in