Published : 04 May 2021 10:39 AM
Last Updated : 04 May 2021 10:39 AM

கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி: ஆம்புலன்ஸ் விமானம் மூலம் உதவி செய்த சோனு சூட்

கடந்த ஆண்டு கரோனா நெருக்கடியால் சொந்த ஊர் திரும்ப முடியாத ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் வீடு சேர பாலிவுட் நடிகர் சோனு சூட் உதவினார்.

இது இல்லாமல் வெளிநாட்டில் தவித்த மாணவர்கள் இந்தியா திரும்ப தனி விமானம், வேலைவாய்ப்பு, மொபைல் டவர் இல்லாமல் தவித்த பள்ளி மாணவர்களுக்கு மொபைல் டவர் என எண்ணற்ற உதவிகளைச் செய்தார். அவரது உதவிகள் இந்த ஆண்டும் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த இளம்பெண் ஒருவரை நாக்பூரில் இருந்து ஹைதராபாத்துக்கு ஆம்புலன்ஸ் விமானத்தில் அழைத்து வர உதவினார்.

அந்த வகையில் தற்போது மீண்டும் கரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட மற்றொரு நபரை ஜான்ஸியிலிருந்து ஹைதராபாத்துக்கு ஆம்புலன்ஸ் விமானம் மூலம் அழைத்து வர உதவியுள்ளார் சோனு சூட்.

உ.பி. மாநிலம் ஜான்ஸியை சேர்ந்தவர் கைலாஷ் அகர்வால். இவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. உள்ளூர் மருத்துவமனையில் மேற்கொண்டு அவருக்கு சிகிச்சை அளிக்க இயலாது என்றும் வேறு பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறும் கூறியுள்ளனர். எம்எல்ஏ உள்ளிட்டோரை அணுகியும் கூட அவர்களால் பெரிய மருத்துவமனையில் இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் அவர்கள் சமூக வலைதளம் மூலம் நடிகர் சோனுவிடம் இது குறித்து கோரிக்கை வைத்துள்ளனர். இதைக் கண்ட சோனு சூட் உடனடியாக ஹைதரபாத் அப்போலோ மருத்துவமனையை தொடர்பு கொண்டு அங்கு வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய படுக்கை இருப்பதை உறுதி செய்தார்.

ஆனால் ஜான்ஸியில் விமான நிலையம் இல்லாததால் சோனு சூட்டின் அவசர உதவிக் குழுவினர் கைலாஷ் அகர்வாலை மத்திய பிரதேச மாநிலம் க்வாலியர் நகருக்கு அழைத்து வந்தனர். பின்னர் அங்கிருந்து அவர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் ஹைதராபாத் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x