Published : 30 Apr 2021 08:50 PM
Last Updated : 30 Apr 2021 08:50 PM

சரவணன் சூர்யாவாக மாறியது உங்களால் தான்: கே.வி.ஆனந்த் மறைவுக்கு சூர்யா அஞ்சலி

நீங்கள் எடுத்த புகைப்படங்களால் தான் சரவணன் சூர்யாவாக மாறிய அற்புதத் தருணம் நிகழ்ந்தது என்று கே.வி.ஆனந்த் மறைவுக்கு நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இன்று (ஏப். 30) அதிகாலை 3 மணியளவில் இயக்குநர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அடிப்படையில் ஒளிப்பதிவாளரான கே.வி.ஆனந்த், 'அயன்', 'கோ', 'மாற்றான்', 'காப்பான்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.

சூர்யாவின் முதல் படமான நேருக்கு நேரில் கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவாளர். கே.வி.ஆனந்த் இயக்கிய கடைசி படமான காப்பானில் சூர்யா நாயகன். மேலும் சூர்யாவின் திரை வாழ்க்கையில் மிக முக்கிய வெற்றிப் படமான அயன், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவானது தான். இந்த நிலையில் கே.வி.ஆனந்தின் மறைவுக்கு நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

"கே.வி. ஆனந்த்‌ சார்‌... இது 'பேரிடர்‌ காலம்‌' என்பதை உங்கள்‌ மரணம்‌ அறைந்து நினைவூட்டுகிறது. நீங்கள்‌ இல்லை என்ற உண்மை, மனமெங்கும்‌ அதிர்வையும்‌, வலியையும்‌ உண்டாக்குகிறது. ஏற்க முடியாத உங்கள்‌ இழப்பின்‌ துயரத்தில்‌, மறக்க முடியாத நினைவுகள்‌ அலை அலையாக உயிர்த்தெழுகின்றன.

நீங்கள்‌ எடுத்தப்‌ புகைப்படங்களில்தான்‌, 'சரவணன்‌ சூர்யாவாக:' மாறிய அந்த அற்புதத்‌ தருணம்‌ நிகழ்ந்தது. 'முன்பின்‌ அறிமுகமில்லாத ஒருவனை: சரியான கோணத்தில்‌ படம்பிடித்துவிட வேண்டுமென, இரண்டு மணிநேரம்‌ நீங்கள்‌ கொட்டிய உழைப்பை இப்போதும்‌ வியந்து பார்க்கிறேன்‌.

'மெட்ராஸ்‌ டாக்கீஸ்‌' அலுவலகத்தில்‌ அந்த இரண்டு மணிநேரம்‌, ஒரு போர்க்களத்‌தில்‌ நிற்பதைப்‌ போலவே உணர்ந்தேன்‌. நேருக்கு நேர்‌' திரைப்படத்துக்காக நீங்கள்‌ என்னை எடுத்த. அந்த 'ரஷ்யன்‌ ஆங்கிள்' புகைப்படம்தான்‌, இயக்குனர்‌ திரு. வசந்த்‌, தயாரிப்பாளர்‌ திரு. மணிரத்னம்‌ உள்ளிட்ட அனைவருக்கும்‌, என்மீது நம்பிக்கை வர முக்‌கிய காரணம்‌. புகைப்படத்தைவிட பத்தாயிரம்‌ மடங்கு பெரியதாக முகம்‌ தோன்றும்‌ வெள்ளித்‌திரையிலும்‌, நடிகனாக என்னை படம்பிடித்ததும்‌ நீங்கள்தான்‌.

முதன்முதல்‌ என்‌ மீது பட்ட வெளிச்சம்‌, உங்கள்‌ கேமராவில்‌ இருந்து வெளிப்பட்டது அதன்மூலம்தான்‌ என்‌ எதிர்காலம்‌ பிரகாசமானது. என்னுடைய திரையுலகப்‌ பயணத்தில்‌ உங்களின்‌ பங்களிப்பும்‌, வழிகாட்டலும்‌ மறக்கமுடியாதது. 'வளர்ச்‌சிக்கு நீ இதையெல்லாம்‌ மாற்றிக்கொள்ள வேண்டும்‌' என அன்புடன்‌ அக்கறையுடன்‌ சொன்ன வார்த்தைகள்‌ இப்போதும்‌ என்னை வழிநடத்துகின்றன.

இயக்குனராக 'அயன்‌' திரைப்படத்திற்கு நீங்கள்‌ உழைத்த உழைப்பு, ஒரு மாபெரும்‌ வெற்றிக்காக காத்திருந்த எனக்குள்‌, புதிய உத்வேகத்தை அளித்தது. அயன்‌ திரைப்படத்‌தின்‌ வெற்றி, 'அனைவருக்கும்‌ பிடித்த நட்சத்‌திரமாக: என்னை உயர்த்‌தியது என்பதை நன்றியுடன்‌ நினைத்துப்‌ பார்க்‌கிறேன்‌.

எனது முதல்‌ திரைப்படத்தில்‌ நீங்களும்‌, உங்களின்‌ கடைசி திரைப்படத்தில்‌ நானும்‌ பணியாற்றியது இயற்கை செய்த முரண்‌. எங்கள்‌ நினைவில்‌ என்றும்‌ நீங்கள்‌ வாழ்வீர்கள்‌ சார்‌. இதயப்பூர்வமான நன்றி அஞ்சலி.

நினைவுகளுடன் சூர்யா"

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x