

தெலுங்குத் திரைத்துறையைச் சேர்ந்த நடிகர்களுக்கும், திரைத்துறை பற்றிய செய்திகளைச் சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்கும் கரோனா நெருக்கடி அறக்கட்டளை மூலமாக இலவசமாகத் தடுப்பூசி போடப்படும் என்று நடிகர் சிரஞ்சீவி அறிவித்துள்ளார்.
கடந்த வருடம், கரோனா ஊரடங்கு சமயத்தில் திரைத்துறை தொழிலாளர்களுக்காக பல்வேறு உதவிகளைச் செய்து வந்தார் சிரஞ்சீவி. அவர் தொடங்கிய கரோனா நெருக்கடி அறக்கட்டளைக்கு (CORONA CRISIS CHARITY) தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரும் பண உதவி செய்தார்கள். அதை வைத்துத் தொழிலாளர்களின் வீடுகளுக்கே மளிகைப் பொருட்கள், பண உதவி எனச் செய்து வந்தார்.
தற்போது இந்த அறக்கட்டளை சார்பாக, அப்போலோ 24/7 நிறுவனத்துடன் சேர்ந்து தெலுங்குத் திரைத்துறையைச் சேர்ந்த நடிகர்களுக்கும், திரைத்துறை பற்றிய செய்திகளைச் சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்கும், அவர்களின் கணவன்/மனைவிக்கு 45 வயது கடந்திருந்தால் அவர்களுக்கும், இலவசமாகத் தடுப்பூசி போடப்படும் என்று சிரஞ்சீவி அறிவித்துள்ளார். அவரவர் தொடர்புடைய சங்கங்களில் இதற்காகப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று சிரஞ்சீவி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த சிரஞ்சீவி, ஒரு காணொலியையும் பகிர்ந்துள்ளார். தடுப்பூசி போடும் பணி இன்று (ஏப்ரல் 22) முதல் தொடங்குகிறது. 45 வயதைக் கடந்தவர்கள் முதலில் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் சிரஞ்சீவி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், மூன்று மாதங்களுக்கு, அப்போலோ மருத்துவர்களின் ஆலோசனையை இலவசமாகப் பெறலாம் என்றும், பரிந்துரைக்கப்படும் மருந்துகள் சலுகை விலையில் கிடைக்கும் என்றும் சிரஞ்சீவி குறிப்பிட்டுள்ளார்.