Last Updated : 22 Apr, 2021 11:54 AM

 

Published : 22 Apr 2021 11:54 AM
Last Updated : 22 Apr 2021 11:54 AM

வறியவர்கள் அனைவருக்கும் இலவச கோவிட் தடுப்பூசி: சோனு சூட் கோரிக்கை

ஏழை எளியவர்களுக்கு கரோனா தடுப்பூசியை இலவசமாகத் தர வேண்டும் என்றும், விலை நிர்ணயத்தில் கட்டுப்பாடு வேண்டும் என்றும் நடிகர் சோனு சூட் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு கரோனா நெருக்கடியால் சொந்த ஊர் திரும்ப முடியாத ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் வீடு சேர பாலிவுட் நடிகர் சோனு சூட் உதவினார். இது இல்லாமல் வெளிநாட்டில் தவித்த மாணவர்கள் இந்தியா திரும்ப தனி விமானம், வேலைவாய்ப்பு, மொபைல் டவர் இல்லாமல் தவித்த பள்ளி மாணவர்களுக்கு மொபைல் டவர் என எண்ணற்ற உதவிகளைச் செய்தார். தொடர்ந்து செய்தும் வருகிறார்.

கடந்த வாரம் கரோனா தொற்றால் தான் பாதிக்கப்பட்டிருப்பதாக சோனு சூட் அறிவித்திருந்தார். தற்போது தடுப்பூசி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

"வறியவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாகத் தரப்பட வேண்டும். விலை நிர்ணயித்தில் கட்டுப்பாடு விதிப்பது மிக முக்கியம். கார்ப்பரேட் நிறுவனங்களும், விலை கொடுத்து வாங்கும் வசதி இருக்கும் தனி நபர்களும் முன்வந்து அனைவரும் தடுப்பூசி பெற உதவ வேண்டும். வியாபாரத்தை இன்னொரு சமயத்தில் செய்து கொள்ளலாம்" என்று சோனு சூட் ட்வீட் செய்துள்ளார்.

கோவிஷீல்ட் தடுப்பூசி ரூ.400 என்கிற விலையிலும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.600 என்கிற விலையிலும் கிடைக்கும் என்று அதைத் தயாரிக்கும் சீனம் நிறுவனம் அறிவித்துள்ளது. இதையொட்டியே சோனு சூட் இந்த ட்வீட்டைப் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவில் தற்போது கிட்டத்தட்ட 21.57 லட்சம் கோவிட் நோயாளிகள் இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த வருடத்தை விட இரண்டு மடங்கு தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x