Published : 21 Apr 2021 04:41 PM
Last Updated : 21 Apr 2021 04:41 PM

3-வது குழந்தை பெற்றுக்கொண்டால் சிறை தண்டனை அல்லது அபராதம்: கங்கணா சர்ச்சைக் கருத்து

மக்கள் தொகையைக் கட்டுக்குள் கொண்டுவர இனி மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு சிறை தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்பட வேண்டும் என்று நடிகை கங்கணா ரணாவத் கூறியுள்ளார். இந்தக் கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ட்விட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வரும் கங்கணா செவ்வாய்க்கிழமை அன்று தற்போதைய கரோனா சூழலைச் சுட்டிக்காட்டி, இந்த உலகை நாம் மோசமாக வைத்திருக்கிறோம். அதன் இயற்கை வளங்களை அளவுக்கு அதிகமாக உறிஞ்சிவிட்டோம் என்கிற ரீதியில் கங்கணா அடுத்தடுத்து ட்வீட்டுகள் பகிர்ந்து வந்தார். ஒரு கட்டத்தில் அதிக மக்கள்தொகையால் நாம் அவதிப்படுகிறோம் என்று பதிவிட ஆரம்பித்தார் கங்கணா.

"அதிக மக்கள்தொகை காரணமாக மக்கள் உயிரிழந்து வருகின்றனர். 130 கோடி என்பது நமது அதிகாரபூர்வ மக்கள்தொகை. இதோடு சட்டவிரோதமாகக் குடியேறிய 25 கோடி மக்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு மூன்றாம் உலக நாடு. ஆனால், நல்ல தலைமையின் கீழ் உலகத்தின் தடுப்பூசி உருவாக்கத்தில், கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருக்கிறோம். அதேசமயம் நாம் சற்று பொறுப்பும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அமெரிக்காவில் 32 கோடி மக்கள். ஆனால், இந்தியாவை விட 3 மடங்கு நிலமும் வளமும் உள்ளது. சீனாவில் இந்தியாவுக்கு ஈடான மக்கள் தொகை இருக்கலாம். ஆனால், அங்கும் நிலமும் வளமும் மூன்று மடங்கு அதிகம். இங்கு மக்கள்தொகை பிரச்சினை மிக மோசமாக இருந்ததால்தான் இந்திரா காந்தி கட்டாயமாக பல லட்சம் மக்களுக்குக் கருத்தடை செய்தார். ஆனால், அவர் கொலை செய்யப்பட்டார். இந்த தேசத்தை எப்படிக் கையாள்வது சொல்லுங்கள்?

மக்கள்தொகையைக் கட்டுக்கள் வைக்கக் கடுமையான சட்டங்கள் வேண்டும். போதும் இந்த ஓட்டு அரசியல். இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்ததால் இந்திரா காந்தி தேர்தலில் தோற்றதும், பின்னர் கொல்லப்பட்டதும் உண்மை. ஆனால், இன்றைய நிலையைப் பார்க்கும்போது, மூன்றாவது குழந்தை பெற்றுக்கொண்டால் குறைந்தபட்சம் சிறை தண்டனையோ, அபராதமோ விதிக்கப்பட வேண்டும்" என்று கங்கணா கூறியுள்ளார்.

கங்கணாவின் இந்தக் கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x