Last Updated : 18 Apr, 2021 03:18 AM

 

Published : 18 Apr 2021 03:18 AM
Last Updated : 18 Apr 2021 03:18 AM

ரூ.73 கோடியில் வீராணம் ஏரி புனரமைப்பு: 24 மாதங்களுக்குள் பணிகளை முடிக்க இலக்கு

வீராணம் ஏரியில் ரூ. 73 கோடியில் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில், வெள்ளத் தடுப்பு பணிகள், தடுப்புக் கட்டைகள்,பாசன வாய்க்கால்களை மேம்படுத்தும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த புனரமைப்புப் பணிகளால், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி பகுதி பாசனத்துக்கு தங்கு தடையின்றி தண்ணீர் செல்லும். ஏரியின் கட்டமைப்பு பலப்படுத்தப்படும்.

தமிழகத்தின் தனித்த அடையாளங்களுள் ஒன்று வீராணம் ஏரி.

நமது கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள இந்த ஏரி கடலூர் டெல்டா பகுதியின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் மிகப்பெரிய நீர் ஆதாரமாக திகழ்கிறது.

கடல் போல பரந்து விரிந்த இந்த ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். ஏரியின் கீழ் கரையின் நீளம் 15.6 கிமீ, ஏரியின் மேல் கரையின் நீளம் 30.6 கி.மீ, ஏரியின் சுற்றளளவு 50 கி.மீ, ஏரியின் அகலம் 5.6கிமீ. வீராணம் ஏரியின் கீழ் கரையில் 28 பாசன மதகுகளும், மேல் கரையில் 6 பாசன மதகுகளும் உள்ளன.

கீழணையில் இருந்து வடவாறு வழியாக ஏரிக்கு காவிரி தண்ணீர் வரும். மழை காலத்தில் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழை செங்கால் ஓடை உள்ளிட்ட பல்வேறு காட்டாறுகள் மூலம் ஏரிக்கு வந்து சேரும். ஏரிக்கு வெள்ளியங்கால் ஓடை மதகு, விஎன்எஸ்எஸ் மதகு என்கிற 2 வடிகால் மதகுகள் உள்ளன.

இந்த ஏரி மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதியில் 44 ஆயிரத்து 856 ஏக்கர் பயிர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஏரியால் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சென்னையின் குடிநீர் தேவையில் ஒரு பகுதியை இந்த ஏரி நீர் பூர்த்தி செய்கிறது.

இப்படி கடலூர் மாவட்டத்தின் முதன்மை ஏரியாக இருக்கும் வீராணம் ஏரி மற்றும் அதனுடன் தொடர்புடைய நாரைக்கால் ஏரி, சின்ன புங்க நதி ஏரி, சிதம்பரம் அருகே உள்ள பொன்னேரி ஆகியவற்றை புனரமைக்க தமிழக அரசு ரூ. 73 கோடியை ஒதுக்கீடு செய்தது.

தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டு, இதற்கான பணிகள் தொடங்கி, தற்போது நடைபெற்று வருகின்றன.

ஏரியின் பிரதான வடிகால் பகுதியான வெள்ளியங்கால் ஓடைப் பகுதியில் வெள்ள தடுப்பு நடவடிக்கையாக கரைகளைப் பலப்படுத்துதல், ஏரியின் கரை பகுதியில் தடுப்பு கட்டைகள் கட்டுதல், ஏரியின் எதிர்வாய் கரையில் உள்ள செங்கால் ஒடை,1,2,3, பாப்பாக்குடி வடிகால், ஆண்டிப்பாளையம் வடிகால் மற்றும் கோதாவரி வடிகால் வாய்க்கால்களில் நீர் ஒழுங்கியம் (ரெகுலேட்டர்) கட்டும் பணி, 28 பாசன வாய்க்கால்களும் தூர் வாரப்பட்டு கொண்டம் (நாட்சு) கட்டுதல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன.

மேலும், நாரைக்கால் ஏரி, சின்ன புங்க நதி ஏரி, பொன்னேரி ஆகியவை தூர் வாருதல் உள்ளிட்டப் பணிகளும் நடைபெற உள்ளது. இந்த புனரமைப்பு பணிகளுக்காக வீராணம் ஏரியில் தண்ணீர் வடிய வைக்கப்பட்டு, ஏரி தற்போது வறண்டு காணப்படுகிறது.

“இந்தப் புனரமைப்பு பணிகளால் வீராணம் ஏரியின் கட்டமைப்பு பலம் பெறும். வெள்ள காலங்களில் கூடுதல் பாதுகாப்புடன் இருக்கும், வடிகால் கரைகளை பலப்படுத்துவதால் வெள்ள காலங்களில் வடிகால் மதகுகளில் தண்ணீர் திறந்து விடும் போது ஏற்படும் உடைப்புகள், மண் அரிப்புகள் தடுக்கப்படும்.

இந்தப் புனரமைப்பின் மூலம் 28 பாசன வாய்க்கால்களும் மேம்படுத்தப்படுவதால் கடைமடை வரை தங்கு தடையின்றி தண்ணீர் செல்லும்.

வீராணம் ஏரியின் உப ஏரிகளாகத் திகழும் சிறிய ஏரிகளான நாரைக்கால் ஏரி, சின்ன புங்கநதி ஏரி, பொன்னேரி ஆகியவை தூர் வாரப்படுவதால் கோடை காலத்தில் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும். இந்த ஏரிகளில் தண்ணீரைத் தேக்கி வைப்பதன் மூலம் அப்பகுதி நிலத்தடி நீர் மட்டம் உயரும். இந்த மேம்பாட்டு பணிகள் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்” என்று பொதுப்பணித் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இப்பணிகளை அடுத்து வரும் 24 மாதங்களுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இதே வீராணம் ஏரியில் ரூ. 40 கோடியில் தூர் வாரும் பணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

வீர நாராயணன் ஏரி

முதலாம் பராந்தக சோழனின் மகன் ராஜாதித்தன் வடகாவிரி என்று அழைக்கப்படும் கொள்ளிடம் ஆற்றின் நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க எண்ணினான். தனது வீரர்களை கொண்டு இந்த ஏரியை வெட்ட உத்தரவிட்டான். ஏரி வெட்டும் பணி முடிவடையாத நிலையில் தக்கோலம் போருக்கு ஒரு பகுதி வீரர்களுடன் புறப்பட்டுச் சென்ற ராஜாதித்தன், ஏரியை வெட்டி முடித்ததும் தனது தந்தையின் பெயர்களில் ஒன்றான ‘வீர நாராயணன்’ பெயரைச் சூட்ட வேண்டும் என்று கூறிச் சென்றான்.

போரில் ராஜாதித்தன் யானை மீது அமர்ந்து போரிட்ட நிலையில் வீர மரணம் அடைந்தான்.

அதைத் தொடர்ந்து1011-1037 ஆண்டுகளுக்கு இடையே இந்த ஏரி வெட்டி முடிக்கப்பட்டது. ராஜாதித்தனின் விருப்பப்படியே ஏரிக்கு ‘வீர நாராயணன் ஏரி’ என்று பெயரிடப்பட்டது. காலப்போக்கில் இந்த ஏரியின் பெயர் ‘வீராணம் ஏரி’ என்று மருவியது.

அன்றைக்கு, தெளிந்த அறிவியல் திட்டமிடலோடு கட்டப்பட்ட இந்த ஏரியே, இன்றைக்கும் நமது கடலூர் மாவட்டத்தின் கடை மடை பாசனத்திற்கு பெரிய பக்க பலமாய் இருந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x