Published : 17 Apr 2021 19:52 pm

Updated : 17 Apr 2021 19:52 pm

 

Published : 17 Apr 2021 07:52 PM
Last Updated : 17 Apr 2021 07:52 PM

தனி மனித ஒழுக்கத்துக்கு உதாரணமாக இருந்தவர் நடிகர் விவேக்: இயக்குநர் வஸந்த சாய்

director-vasanth-sai-about-vivek-discipline

தனி மனித ஒழுக்கத்துக்கு உதாரணமாக இருந்தவர் நடிகர் விவேக் என்று இயக்குநர் வஸந்த சாய் பேசியுள்ளார்.

தமிழ் திரைப்படத் துறையில் நகைச்சுவை நடிகராக ஜொலித்த நடிகர் விவேக் சனிக்கிழமை காலை காலமானார். இதைத் தொடர்ந்து திரைத்துறையில் அவரது நண்பர்கள், சக நடிகர் நடிகையர், இயக்குநர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படங்களில் அறிமுகமானவர் விவேக். அந்தத் திரைப்படத்தில் உதவி இயக்குநராக இருந்தவர் இயக்குநர் வஸந்த் சாய். பின் வஸந்த் இயக்கிய கேளடி கண்மணி, நேருக்கு நேர், ஏ நீ ரொம்ப அழகா இருக்கே ஆகிய படங்களில் விவேக் நடித்தார். வஸந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராகவே இருந்தார். விவேக் மறைவு குறித்து இந்து தமிழ் திசை சார்பில் இயக்குநர் வஸந்திடம் பேசியபோது அவர் பகிர்ந்த வார்த்தைகள்...

"விவேக் மிக மிக நல்ல மனிதர். பல வருட நண்பர். 1986லிருந்து எனக்கு அவரைத் தெரியும். அவரது முதல் படம் மனதில் உறுதி வேண்டும். அதில் நான் உதவி இயக்குநர். அப்போது அவர் தலைமை செயலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். வேலைக்கு நடுவில், விடுமுறை எடுத்து தான் நடிக்க வந்தார். சுற்றி இருப்பவர்களை எல்லாம் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார். அவ்வளவு நகைச்சுவை உணர்வு உள்ளவர். உடனடியாக உதவ வேண்டும் என்ற மனநிலையும் கொண்டவர்.

வசனங்களை முன்னரே அதைப் படித்து கே பாலச்சந்தர் அவர்களிடம் பேசி ஆச்சரியப்படுத்த நினைப்பார். என்னிடம் ஸ்க்ரிப்ட் இருக்கும் என்பதால் எங்களுக்குள் நல்ல நட்பு உண்டானது. எனது முதல் படமான கேளடி கண்மணியில் நடித்தத்தைத் தாண்டி பல உதவிகளைச் செய்தார். திரைக்கதையைக் கேட்டு யோசனைகள் சொன்னார். திரைக்கதையில் நல்ல அறிவு கொண்டவர்.

அதன் பின் எனது நேருக்கு நேர் திரைப்படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் வெற்றி விழாவில் அவர் பேசியது இன்றும் நினைவில் இருக்கிறது. 'வஸந்த் கே பாலச்சந்தரிடம் இயக்கத்தோடு சேர்த்து கோபத்தையும் கற்றுக் கொண்டிருக்கிறார். எதையும் வீணடிக்க மாட்டார். மீதமிருக்கும் கோபத்தைக் கூட அந்த நாள் முடிந்ததும் ஃபிரிட்ஜில் கொண்டு வைத்து விட்டு அடுத்த நாள் கொண்டு வருவார்' என்று நகைச்சுவையுடன் சொன்னார். எதையுமே இப்படி நகைச்சுவையாகப் பேசக் கூடியவர்.

டி40 என்கிற விழாவில் அவர் மேடையில் இயக்குநர் கே பாலச்சந்தரைப் பற்றி மட்டுமே பேச வேண்டும். ஆனால் முதல் படத்திலிருந்து நான் அவருக்குப் பரிச்சயம் என்பதால் என்னைப் பற்றியும், நான் அறிமுகம் செய்து பெரிய வரவேற்பு பெற்ற நடிகர்கள் பற்றியும் எனக்காகப் பேசினார்.

கேபி அவர்களின் பட்டறையிலிருந்து வந்த யாருமே அவரைப் போலவே, பெருமையைத் தலையில் தூக்கி வைத்துக் கொள்ள மாட்டார்கள். அப்படி விவேக் எப்படி ஒரு உச்சத்துக்குச் சென்றாலும் அவரிடம் ஒரு கர்வம் இருந்ததில்லை. துறையிலும், வாழ்க்கையிலும் தனி மனித ஒழுக்கத்துக்கு உதாரணமாக விவேக் வாழ்ந்தார்.

பல வருடங்கள் கழித்து சந்தித்தாலும் கூட மனதில் உறுதி வேண்டும் காலத்தில் எப்படிப் பேசினாரோ அப்படித்தான் நாங்கள் பேசிக் கொள்வோம். அவ்வளவு உணர்வுப்பூர்வமான நட்பு எங்களுக்குள் உண்டு. தனது அம்மா மீது மிகுந்த அன்பு கொண்டவர். யாருக்கு உதவி செய்ய வேண்டும் என்றால் முதலில் வந்து நிற்பார்.

இந்த சமூகம் குறித்து எவ்வளவு பெரிய அக்கறை கொண்டவர் என்பதற்கு அவர் நட்ட மரங்கள் சின்ன உதாரணம். அப்துல் கலாம் மீது அவருக்கிருந்த அன்பு அனைவருக்கும் தெரிந்ததே. நன்றியுணர்வு மிக்கவர். அவரிடமிருந்து கற்க நிறையப் பண்புகள் உள்ளன. அவர் மறைந்த அதிர்ச்சி இன்னும் நீங்கவில்லை.

சில வருடங்களுக்கு முன் அவரது மகன் இறந்த போது என்னால் அவருக்கு ஆறுதலே கூற முடியவில்லை. ஏனென்றால் அவர் பெரிய புத்திசாலி. என்ன சொன்னாலும் அதற்கு ஒரு கேள்வியோ, பதிலோ வைத்திருந்தார். என்னைப் போலவே அவரும் சாய் பாபா பக்தர். அந்தப் பெயரைச் சொல்லிக் கூட அவருக்கு ஆறுதல் சொல்ல முடியவில்லை" என்று இயக்குநர் வஸந்த் சாய் கூறியுள்ளார்.

தவறவிடாதீர்!

Vivek demiseActor vivek deathDirector vasanth saiManadhil urudhi vendum vivekPudhu pudhu arthangal vivekNerukku ner vivekAei nee romba azhaga irukke vivekVivek comedyVivek kalamGreen kalam projectவிவேக் மறைவுநகைச்சுவை நடிகர் மறைவுஇயக்குநர் வசந்த் சாய்மனதில் உறுதி வேண்டும் விவேக்புதுப்புது அர்த்தங்கள் விவேக்நேருக்கு நேர் விவேக்ஏய் நீ ரொம்ப அழகா இருக்க விவேக்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x