Published : 15 Apr 2021 06:33 PM
Last Updated : 15 Apr 2021 06:33 PM

'அந்நியன்' இந்தி ரீமேக் சர்ச்சை: ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு இயக்குநர் ஷங்கர் பதிலடி

சென்னை

'அந்நியன்' இந்தி ரீமேக் தொடர்பாக ஆஸ்கர் ரவிச்சந்திரனின் கடிதத்துக்கு இயக்குநர் ஷங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

2005-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், பிரகாஷ்ராஜ், விவேக், சதா, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அந்நியன்'. ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கவுள்ளார் இயக்குநர் ஷங்கர்.

பென் மூவிஸ் தயாரிக்கவுள்ள 'அந்நியன்' இந்தி ரீமேக்கில் விக்ரம் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே, இந்தி ரீமேக் அறிவித்தவுடன் 'அந்நியன்' படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரன், இயக்குநர் ஷங்கருக்குக் கடிதமொன்றை இன்று (ஏப்ரல் 15) காலை அனுப்பினார்.

அதில் " 'அந்நியன்' கதைக்கான உரிமை என்னிடம் மட்டுமே உள்ளது. அதற்கான ஆவணங்கள் உள்ளன. இப்படத்தின் கதையை என்னுடைய அனுமதியின்றி தழுவுவதோ, ரீமேக் செய்வதோ முற்றிலும் சட்டவிரோதமானது" என்ற நீண்ட கடிதத்துடன் நோட்டீஸும் அனுப்பினார். (ஷங்கருக்கு ஆஸ்கர் ரவிச்சந்திரன் எழுதிய கடிதத்தை முழுமையாக படிக்க: CLICK HERE)

ஆஸ்கர் ரவிச்சந்திரன் அனுப்பிய கடிதத்துக்கு, இயக்குநர் ஷங்கர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் இயக்குநர் ஷங்கர் கூறியிருப்பதாவது:

" 'அந்நியன்' திரைப்படத்தின் கதைக்கு நீங்கள் உரிமை கோரிய மின்னஞ்சலைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்திருக்கிறேன்.

'அந்நியன்' 2005-ம் ஆண்டு வெளியானது. படம் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே, படத்தின் கதையும், திரைக்கதையும் என்னுடையது என்று தெரியும். கதை, திரைக்கதை, இயக்கம் ஷங்கர் என்கிற பெயருடன்தான் இந்தப் படம் வெளியானது.

படத்தின் திரைக்கதையை எழுத யாரையும் நான் எழுத்துபூர்வமாக நியமிக்கவில்லை. எனவே, இந்தத் திரைக்கதையை நான் விரும்பும்படி பயன்படுத்திக் கொள்ள எனக்கு உரிமை உள்ளது. படைப்பை எழுதியவன் என்ற முறையில் எந்தச் சூழலிலும் எனது உரிமைகளில் யாரும் குறுக்கிட முடியாது.

மறைந்த சுஜாதாவின் பெயரை இதில் சம்பந்தப்படுத்தியதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். அவர் இந்தப் படத்துக்கு வசனங்கள் எழுத மட்டுமே நியமிக்கப்பட்டார். அதற்கான உரிய பெயரும் அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவர் திரைக்கதையிலோ, பாத்திரப் படைப்பிலோ எந்த விதத்திலும் சம்பந்தப்படவில்லை. எனவே வசனகர்த்தா என்பதைத் தாண்டி அவர் எந்த வகையிலும் இதில் ஈடுபடவில்லை.

திரைக்கதை என்னிடம் இருப்பதால் அதை நான் விரும்பும் வகையில் பயன்படுத்திக் கொள்ளும் முழு உரிமை எனக்குள்ளது. ஏன், அந்நியனுக்காக நீங்களோ உங்கள் நிறுவனமோ எந்த விதமான உரிமைகளையும் கோர முடியாது. படத்தை ரீமேக் செய்யவும் முடியாது. ஏனென்றால் அந்த உரிமை எழுத்துபூர்வமாக உங்களுக்குத் தரப்படவில்லை. அப்படி எதுவும் இல்லாத நிலையில், படத்தின் கதைக்கான உரிமை உங்களிடம் உள்ளது என்பதைச் சொல்ல உங்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை.

ஒரு தயாரிப்பாளராக, 'அந்நியன்' படத்தின் மூலம் கணிசமாக லாபம் அடைந்துள்ளீர்கள். தற்போது தேவையில்லாமல், உங்களுக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத எனது எதிர்கால முயற்சிகளின் மூலம் அநியாயமாக உங்களுக்கு ஆதாயம் தேடப் பார்க்கிறீர்கள்.

இந்த விளக்கத்துக்குப் பிறகாவது உங்களுக்கு ஒழுங்கான புரிதல் வரவேண்டும். இது போன்ற அடிப்படையற்ற விஷயங்களைத் தேவையின்றி பேச மாட்டீர்கள் என்று என்னால் மட்டுமே நம்பமுடியும்.

இதுபோன்ற மோசமான, சட்டவிரோதமான உரிமை கோரல்களால் எனது எதிர்கால திரைப்படங்களைப் பாதிக்க முயலும் நிலையில் ஒரு இயக்குநராக, கதாசிரியராக உண்மையான நிலை குறித்த தெளிவைத் தரவே எந்தவித பாரபட்சமும் இன்றி இந்த பதில் அளிக்கப்பட்டிருக்கிறது."

இவ்வாறு இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x