Published : 15 Apr 2021 02:50 PM
Last Updated : 15 Apr 2021 02:50 PM

படம் நன்றாக இருந்தால் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள: அருண் விஜய்

திரைப்படங்கள் நன்றாக இருந்தால் திரையரங்கத்திற்கு ரசிகர்கள் வருகை தருவார்கள் என்று நடிகர் அருண் விஜய் பேசியுள்ளார்.

'குற்றம் 23' படத்துக்குப் பின் அருண் விஜய் - அறிவழகன் மீண்டும் இணைந்து பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது. இந்தப் படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதன் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, நேற்று (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. முழுக்க ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்துக்கு 'பார்டர்' எனத் தலைப்பிட்டுள்ளனர்.

இந்தத் தலைப்பு அறிமுகத்தை சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வித்தியாசமான முறையில் நடத்தியது படக்குழு. இதில் படக்குழுவினருடன் பல்வேறு திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்

இதில் நடிகர் அருண் விஜய் பேசியதாவது:

'' 'கைதி' படத்தின் பின்னணி இசையைப் பார்த்தும், கேட்டும் வியப்படைந்தேன். இப்படத்தின் கதையைக் கேட்டபிறகு இயக்குநர், சாம் சி.எஸ்.தான் இசையமைக்கிறார் என்று சொன்னதும் நான் உற்சாகமானேன். ஏனெனில் 'பார்டர்' படத்தில் பின்னணி இசைக்குப் பெரும் பங்களிப்பு உண்டு. என்னுடைய கலை உலகப் பயணத்தில் நான் நம்பும் ஒரு சில இயக்குநர்களில் அறிவழகனும் ஒருவர். ஒரு நடிகருக்குப் பக்கபலமாக இருப்பவர்கள் இயக்குநர்கள்தான். அந்த வகையில் இயக்குநர் அறிவழகன் எனக்குப் பக்கபலமாகவும், நல்லதொரு புரிதலுடனும் இருக்கிறார். இப்படத்தின் டைட்டில் நல்ல விதமாக அமைந்துவிட்டது. இதற்கு முன் வேறு ஒரு தலைப்பை வைக்கலாமென திட்டமிட்டிருந்தோம். ஆனால், 'பார்டர்' என்ற தலைப்பு மிகப் பொருத்தமாக அமைந்ததை வெற்றிக்கான ஆசியாக நினைக்கிறேன்.

நடிப்பைப் பொறுத்தவரை இப்படம் எனக்குச் சவாலாக இருந்தது. திரைப்படங்கள் நன்றாக இருந்தால் திரையரங்கத்திற்கு ரசிகர்கள் வருகை தருவார்கள் என்பதை இந்த கரோனா தொற்று காலகட்டத்திலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். 'பார்டர்' படம் என்னுடைய நடிப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியிருக்கிறது. இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்''.

இவ்வாறு அருண் விஜய் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x