Published : 14 Apr 2021 07:45 PM
Last Updated : 14 Apr 2021 07:45 PM

அனைத்துவிதமான கதைகளும் சொல்லப்பட வேண்டும்: வெற்றிமாறன்

சென்னை

சினிமாவில் அனைத்துவிதமான கதைகளும் சொல்லப்பட வேண்டும் என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்தார்.

சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக இலவசமாக சினிமா பயிற்சி கொடுக்கும் புதிய முயற்சியை எடுத்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன். இதனை சர்வதேச திரைப்பட மற்றும் பண்பாட்டு நிறுவனம் தொடங்கியுள்ளது. இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஒவ்வொரு மாணவருக்கும் 100% மானியத்துடன் முழுமையான உணவு, குடியிருப்பு வசதிகள் வழங்கப்படும் .

இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று (ஏப்ரல் 14) நடைபெற்றது. இதில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டார். முதலில் மாணவர்களுக்கான இந்தத் திட்டத்தை விளக்கினார். பின்பு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அவை பின்வருமாறு:

சாதிக் கலவரங்களை நேரில் பார்த்தவன் நான். சமீபகால தமிழ்ப் படங்களில் சாதியைப் பேசுவது அதிகமாக இருக்கிறது. 'அசுரன்', 'திரௌபதி', 'கர்ணன்', 'ருத்ர தாண்டவம்' என அடுத்தடுத்து படங்கள் வருகின்றன. சினிமாவினால் சாதி வெறி தூண்டப்படுகிறதோ என்கிற அச்சம் இருக்கிறது. இந்தப் போக்கு சரியா?

ஒவ்வொருவருக்கும் அவரவரின் கதையைச் சொல்லும் உரிமை இருக்கிறது. எல்லா விதமான கதைகளும் சொல்லப்பட வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். சமூகத்தில் இருப்பதைத்தான் சினிமா பேசுகிறது. அதைப் பேசாமல் இருப்பதால் சமூகத்தில் அது இல்லை என்று ஆகிவிடாது. பேசப்பட்டு விவாதத்தை உருவாக்கும்போது அது நல்ல விஷயம் என்றே நான் நினைக்கிறேன்.

பாதிக்கப்படுவது தென், வட மாவட்டத்து மக்கள்தான். இரண்டு தரப்பிலும் பற்ற வைத்தால் எளிதில் வெடிக்கும் அபாயம் இருக்கிறது. அந்தப் பொறுப்புணர்வு தேவை இல்லையா?

பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பதைத்தான் நான் சொல்கிறேன். பொறுப்பு என்பது இல்லாமல் இதுபோன்ற கதைகளைக் கையாளவே முடியாது என்றே நினைக்கிறேன். குறைந்தபட்சப் பொறுப்புணர்வு இருந்தால்தான் இதைச் செய்யவே முடியும்.

இவ்வாறு வெற்றிமாறன் பதில் அளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x