‘எனிமி’ டீஸர் எப்போது? - தயாரிப்பாளர் விளக்கம்
‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் - ஆர்யா இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. 'எனிமி' எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து முக்கியமான சண்டைக் காட்சி ஒன்றைப் படமாக்கியது படக்குழு. இதில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. ‘அவன் இவன்’ படத்துக்குப் பிறகு விஷால் - ஆர்யா இருவரும் நடிக்கும் படம் என்பதால் இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்தப் படத்தை வினோத் தயாரித்து வருகிறார். ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக தமன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இப்படத்தின் டீஸர் வெளியீடு குறித்து தயாரிப்பாளர் வினோத் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
‘எனிமி’ அப்டேட் கேட்பவர்களுக்கு, படத்தின் 90% படப்பிடிப்பு முடிந்து விட்டது. சென்னையில் 10% காட்சிகள் மட்டுமே மீதியிருக்கிறது. விரைவில் அதையும் முடித்துவிட்டு. அடுத்த இரண்டு வாரத்தில் படத்தின் டீஸரை வெளியிடவுள்ளோம்.
இவ்வாறு வினோத் கூறியுள்ளார்.
