Last Updated : 09 Apr, 2021 04:53 PM

 

Published : 09 Apr 2021 04:53 PM
Last Updated : 09 Apr 2021 04:53 PM

முதல் பார்வை: கர்ணன்

ஊர் மக்களின் நன்மைக்காக நாயகன் உரிமைக் குரல் எழுப்பினால், அதனால் போராட்டங்களைச் சந்தித்தால் அதுவே 'கர்ணன்'.

நெல்லை மாவட்டத்தில் உள்ள பொடியங்குளம் ஒரு குக்கிராமம். பஸ் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் அந்த ஊர் மக்கள் அல்லல்படுகின்றனர். பக்கத்து ஊரான மேலூருக்கு நடந்து சென்று போய் பஸ் ஏறினால்தான் வெளியூருக்குப் போக முடியும். அப்படிப்பட்ட நிலையில் மேலூர்க்காரர்கள் பொடியங்குளம் மக்களைச் சம்பந்தமில்லாமல் சண்டைக்கு இழுக்கின்றனர். இளம்பெண்ணை கேலி செய்கின்றனர். அதைக் கண்டிக்கும் ஆண்களை இழுத்துப் போட்டு அடிக்கின்றனர். இதனால் வெகுண்டெழும் கர்ணன் (தனுஷ்) மேலூரைச் சேர்ந்த ஆதிக்க சாதியினரின் அகந்தைக்குத் தகுந்த பாடம் புகட்டுகிறார். இதனால் பிரச்சினை வலுக்கிறது. அது கபடி போட்டியிலும் எதிரொலிக்கிறது.

பொடியங்குளம் கிராமத்தில் நிற்காமல் செல்லும் பேருந்துகளால் கர்ப்பிணிப் பெண், கல்லூரி செல்லும் மாணவி, ராணுவத் தேர்வுக்காகச் செல்லும் நாயகன் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கர்ப்பிணிப் பெண் மருத்துவமனை செல்வதற்காக பஸ்ஸை நிறுத்தாதபட்சத்தில் அவரது மூத்த மகன் கல்லெறிகிறான். இதனால் நிலவரம் கலவரமாகிறது. அது தொடர்பான விசாரணைப் படலமும், பொடியங்குளம் ஊர் மக்களின் அணுகுமுறையும் போலீஸ் அதிகாரி கண்ணபிரானின் (நட்டி நட்ராஜ்) ஈகோவை உரசிப் பார்க்கிறது. அதற்குப் பிறகு அந்த ஊர் என்ன ஆனது, ராணுவத்தில் வேலை கிடைத்த நிலையில் நாயகன் என்ன முடிவெடுக்கிறார், பொடியங்குளம் கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் கிடைத்தனவா, போராட்டம் முடிவுக்கு வந்ததா போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது திரைக்கதை.

'பரியேறும் பெருமாள்' மூலம் அரசியல் சினிமாவை நுட்பமாகக் கொடுத்துப் பரவலான கவனத்தை ஈர்த்தவர் மாரி செல்வராஜ். சாதிய வன்முறையால் பாதிக்கப்படும் இளைஞன் அதையே எதிரிக்குப் பரிசளிக்காமல் அதிலிருந்து விலகி நின்று கல்வியை ஆயுதமாகக் கொள்கிறான். 'கர்ணன்' படத்தில் கல்வி, வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக நாயகன் போராட்டத்தை ஆயுதமாகக் கொள்கிறான். அரசியல் சினிமாவை பிரச்சார நெடி இல்லாமல் அவ்வளவு சாதாரணமாகப் படைத்துவிட முடியாது. ஆனால், அரசியலை அழகியலுடன் மிக நேர்த்தியாகக் கொடுப்பது எப்படி என்ற கலை மாரி செல்வராஜுக்கு கை வந்திருக்கிறது. தன் நேர்மையையும், உழைப்பையும் அப்படியே கொட்டி கர்ணனைக் கொடுத்திருக்கிறார்.

'கர்ணன்' என்றால் கொடுப்பவன், கொடை வள்ளல் என்று புராணங்கள் சொல்கின்றன. இந்தக் 'கர்ணன்' ஊர் மக்களின் தேவைக்காக, பிரச்சினைக்காக, உரிமையைக் கேட்கிறான். சுயமரியாதையின் முகமாக நிமிர்ந்து நிற்கின்றான். அனுமதி மறுக்கப்படுவதை, உரிமை மீறல்களைத் தட்டிக் கேட்கின்றான். அந்த வகையில் 'கர்ணன்' மகாபாரதத்தின் தலைகீழ் விகிதமாக, தலைகீழ் பிம்பமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம்.

'கர்ணன்' கதாபாத்திரத்தில் தனுஷ் தன் முழுமையான ஆற்றலை அப்படியே அள்ளிக் கொடுத்திருக்கிறார். உரிமைக்காக குமைந்துகொண்டு, பிரச்சினை என்றால் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொண்டு வருபவர் அடுத்தடுத்து பாய்ச்சலை நிகழ்த்துகிறார். தார்மீக ரீதியாக கோபப்படுவது, நல்லதைச் சொல்வது, தனி மனிதனாகக் களத்தில் இறங்குவது, உரிமைக்காக ஓங்கிக் குரல் கொடுப்பது, நிமிர்ந்து நிற்கும் அரசியலில் திருப்பி அடிப்பது, காதலியுடனான ஊடலில் இழவு வீட்டில் ஆடித் தன் துயரை வெளிப்படுத்துவது, பஸ்ஸை நிறுத்துவதற்காக காலில் தொடர்ந்து அடித்து எகிறிப் போய் விழுவது, காவல் நிலையத்தைக் களேபரமாக்குவது என நாயகனின் அத்தனை அம்சங்களையும் இம்மி பிசகாமல் செய்கிறார். தென் மாவட்ட வட்டார வழக்கில் தனுஷ் பேசும் லாவகமும், உடல் மொழியும் அபாரம்.

தனுஷின் ஆசானாக, வழிகாட்டியாக, ஏமராஜாவாக லால் பின்னி எடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் சில படங்களில் லால் வீணடிக்கப்பட்டுள்ளார். ஆனால், இதில் லாலுக்கு மகுடம் சூட்டியுள்ளார் மாரி செல்வராஜ். அவரின் உயிர்ப்பான நடிப்பு படத்துக்குப் பெரிதும் பலம் சேர்க்கிறது. தனுஷ்- லால் இணை அன்பின் அடர்த்தியைப் பரப்புகிறது.

காமெடியனாகப் பார்த்தே பழக்கப்பட்ட யோகி பாபு 'பரியேறும் பெருமாள்' படத்தில் குணச்சித்ர முகத்தைக் காட்டினார். அதன் நீட்சியாக இதிலும் பக்குவமான நடிகனுக்குரிய இயல்புகளை வெளிப்படுத்துகிறார்.

ரஜிஷா விஜயன் நாயகிக்குரிய பங்களிப்பில் எந்தக் குறையும் இல்லை. ஆனால், அந்தப் பாத்திரம் வழக்கமும் பழக்கமும் ஆனதாகவே இருப்பதால் பெரிதாக ஈர்க்கவில்லை. கௌரி கிஷனுக்குப் பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை என்றாலும் படிக்க முடியாத ஏக்கத்தையும், வருத்தத்தையும் வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கிறார். தனுஷின் அக்காவாக லட்சுமி ப்ரியா சந்திரமௌலி தேர்ந்த நடிப்பில் பிரமாதப்படுத்துகிறார்.

குற்ற உணர்ச்சியும், இயலாமையும் மிகுந்த தனுஷின் தந்தை கதாபாத்திரத்துக்கு 'பூ' ராமு அவ்வளவு பொருத்தம். ஆதிக்க சாதியின் கர்வத்தை அழகம் பெருமாள் நுட்பமாக வெளிப்படுத்துகிறார். நட்டி நட்ராஜ் சாதியின் கோர முகத்தை அப்பட்டமாக பிரதிபலித்துள்ளார். ஊர்ப் பெரியவராக ஜி.எம்.குமாரின் நடிப்பு கச்சிதம். சண்முகராஜன், சுபத்ரா, ஜானகி ஆகியோரும் தங்கள் கதாபாத்திரங்களின் நோக்கங்களை நிறைவேற்றுகிறார்கள்.

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும், ராமலிங்கத்தின் கலை இயக்கமும், சந்தோஷ் நாராயணனின் இசையும் படத்தின் தரத்தை வேற லெவலுக்குக் கொண்டு சென்றுள்ளன. கண்டா வரச் சொல்லுங்க, மஞ்சனத்தி பாடல்கள் ரிப்பீட் ரகம்.

கதையமைப்பில், கதாபாத்திரக் கட்டமைப்பில் இயக்குநரின் மெனக்கெடல் தெரிகிறது. நாயகி தவிர்த்து மற்ற அத்தனை பெண் பாத்திரங்களும் அழுத்தமான வார்ப்புகள். லால் தன் முன்னாள் காதலியிடம் 10 ரூபாயைத் திருடுவது, அதை அறிந்த அவர், ''மஞ்சனத்தி புருஷா... 10 ரூபாய் போதுமா... வேணும்னா ஒரு முத்தம் கொடுத்துட்டுப் போ'' என்று சொல்வது. லால் அவரின் தலையில் முத்தம் பதித்துச் செல்வது, லால்- தனுஷ் இணையின் காட்சிகள் ஆகியவை ரசனை அத்தியாயங்கள்.

பேருந்து எரிப்பு, பேருந்து மீது கல்வீச்சு என்று பேருந்து தொடர்பான அரசியல் தென் மாவட்டங்களில் அதிகம். அதனை நினைவுகூரும் விதமான காட்சிகளை இயக்குநர் மாரி செல்வராஜ் பதிவு செய்துள்ளார். இறந்துபோன தனுஷின் தங்கையை நாட்டார் தெய்வமாக முன்னிறுத்துவது, தலை துண்டிக்கப்பட்ட புத்தரின் சிலை, தலையை மட்டும் வரையாமல் ராணுவ உடையில் இருக்கும் ஓவியம், காவல் நிலையத்தில் அம்பேத்கர் படம் எனப் படம் முழுவதும் பல குறியீடுகள் உள்ளன. அத்துடன் வாளால் மீன் வெட்டும் மரபு, நாணயங்களை வைத்து சூதாடுவது என மண் சார்ந்த பண்பாட்டு அடையாளங்களையும் படத்தில் வைத்துள்ளார்.

கர்ணனை நாயகனாக்கி, அவரது காதலியாக திரௌபதியைக் காட்டி, ஊர்ப் பெரியவருக்கு துரியோதன் என்று பெயர் சூட்டி, அவருடன் இருக்கும் அடிப்பொடியை அபிமன்யுவாக்கி, வில்லனைக் கண்ணபிரானாகக் காட்டி மகாபாரதத்தை மாரி செல்வராஜ் தனக்கே உரிய பாணியில் மாற்றி அமைத்துள்ளார். அந்த நுட்பமான அரசியல் ஆச்சரியம் அளிக்கிறது.

இந்த உலகம் அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது என்பதை உணர்த்தும் விதமாக மனிதர்களுடன், கிராமத்து மக்களுடன், கோழிக்குஞ்சு, பருந்து, கழுதை, குதிரை, யானை, மாடுகள், பன்றிகள் என அத்தனை உயிர்களையும் காட்சிப்படுத்தியுள்ளார். அவரின் மனிதம் மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வளவு பலங்கள் நிறைந்து கிடந்தாலும் சில பலவீனங்கள் இருப்பதையும் மறுப்பதற்கில்லை. கொடியங்குளம் சாதிக் கலவரத்தைத்தான் படத்தின் மையமாக மாரி செல்வராஜ் வைத்துள்ளார். அதை ஏன் மறைக்க வேண்டும்? தனுஷ்- ரஜிஷா விஜயன் காதலுக்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? அதை எடிட்டர் ஆர்.கே.செல்வாவின் ஒத்துழைப்புடன் அப்படியே கத்தரித்திருந்தால் நீளம் குறைந்திருக்கும். சீரியஸ் படத்தில் காதல் காட்சிகள் தொய்வை ஏற்படுத்துகின்றன. கமர்ஷியல் காரணத்துக்காகச் சேர்க்கப்பட்டாலும் அது படத்துடன் ஒட்டவில்லை.

முதல் பாதியில் மெதுவாக கதை சொல்லும் உத்தியைத் தவிர்த்திருக்கலாம். மக்களோடு மக்களாக நின்று, எதிர்க்கும் நாயகன் இறுதியில் தனித்து நின்றுக் களமாடுவதாகக் காட்டுவது எதனால்? நாயக பிம்பத்தைத் தூக்கிப்பிடிக்கும் காட்சிகள் அதிகம் உள்ளன. எப்போது தனுஷ் வாள் எடுத்துச் சுழற்றுவார், குதிரை மீது ஏறி அமர்ந்து வருவார் என்று பில்டப்பை ஏற்றிக்கொண்டே செல்கிறார்கள். அவற்றைக் குறைத்திருக்கலாம்.

இவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் 'கர்ணன்' தமிழ் சினிமாவில் தனித் தடம் பதித்துள்ளது. வன்முறை தெறிக்கும் காட்சிகள் அதிகம் உள்ளன. அதை நியாயப்படுத்துவது படத்தின் நோக்கமல்ல. ''என் தேவை என்ன, என் பிரச்சினை என்னன்னு புரிஞ்சுக்க முடியல. நான் எப்படி பேசுறேன், எப்படி நிக்குறேன்னு மட்டும்தான் உனக்குப் பிரச்சினையா தெரியுது'' என்ற மாரி செல்வராஜின் வசனத்தை உள்வாங்கிக் கொண்டால் 'கர்ணன்' உங்களுக்குக் காவியமாகத் தெரியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x