Published : 08 Apr 2021 06:54 PM
Last Updated : 08 Apr 2021 06:54 PM

'அண்ணாத்த' Vs 'விக்ரம்': தீபாவளி வெளியீடு

'அண்ணாத்த' மற்றும் 'விக்ரம்' ஆகிய படங்கள் தீபாவளிக்குப் போட்டியிட வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்படுகிறது.

சிவா இயக்கத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படம் கரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டு வெளியீடும் தாமதமானது. தற்போது தீபாவளி வெளியீடு என்று அறிவித்துள்ளது படக்குழு.

இன்னும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு முழுமையாக முடிவு பெறவில்லை. தற்போது ஹைதராபாத்தில் சில முக்கிய காட்சிகளைப் படமாக்கவுள்ளது படக்குழு. 'விஸ்வாசம்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் என்பதால், இதற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

அதே போல், 'மாஸ்டர்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள படம் 'விக்ரம்'. ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரிக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை.

ஆனால், கரோனா ஊரடங்கு காலத்திலேயே படத்தின் முதற்கட்ட பணிகள் அனைத்தையுமே முடித்துவிட்டார் லோகேஷ் கனகராஜ். மே 3-ம் தேதி படப்பிடிப்பைத் தொடங்கி, 100 நாட்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளது படக்குழு. இந்தப் படத்தையும் தீபாவளிக்கு வெளியிடலாம் என்று இப்போதைக்கு முடிவு செய்துள்ளனர்.

இதனால் தீபாவளிக்கு 'அண்ணாத்த' மற்றும் 'விக்ரம்' ஆகிய படங்கள் மோதும் சூழல் உருவாகியுள்ளது. ரஜினி - கமல் ஆகியோரது படங்கள் ஒரே நாளில் வெளியானால் ரசிகர்கள் மத்தியில் கடும் போட்டி இருக்கும். இதற்கு முன்னதாக ரஜினி நடித்த 'சந்திரமுகி' மற்றும் கமல் நடித்த 'மும்பை எக்ஸ்பிரஸ்' ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x