Published : 07 Apr 2021 05:59 PM
Last Updated : 07 Apr 2021 05:59 PM

'விக்ரம்' அப்டேட்: ஃபகத் பாசில் ஒப்பந்தம்

சென்னை

கமல் நடிக்கவுள்ள 'விக்ரம்' படத்தில் ஃபகத் பாசில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து, கமல் நடிக்கவுள்ள 'விக்ரம்' படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். தேர்தல் பணிகளில் கமல் இருந்ததால், இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. நேற்று (ஏப்ரல் 6) தேர்தல் முடிவடைந்ததைத் தொடந்து, இன்று கமல் - லோகேஷ் கனகராஜ் சந்திப்பு நடைபெற்றது.

கமல் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி அறிவிக்கப்பட உடனேயே இந்தப் படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரிக் மீடியா நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்தில் 'காதலா காதலா' படத்துக்குப் பிறகு கமல் - பிரபுதேவா இருவரும் இணைந்து நடிக்கிறார்கள்.

மேலும், இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் லாரன்ஸை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில், கமலுடன் நடிக்கவுள்ளதை ஃபகத் பாசில் உறுதிப்படுத்தியுள்ளார். அவரது 'ஜோஜி' படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில்," 'விக்ரம்' படத்தில் கமல் சாருடன் நடிக்கவுள்ளேன். அதற்காக மிகவும் ஆர்வமாக உள்ளேன்" என்று ஃபகத் பாசில் தெரிவித்துள்ளார்.

'விக்ரம்' படத்தில் கமலுடன் யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்பதை இதுவரை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x