Published : 06 Apr 2021 07:18 PM
Last Updated : 06 Apr 2021 07:18 PM

தமிழக தேர்தல் 2021: வாக்களித்த / வாக்களிக்கத் தவறிய பிரபலங்களின் பட்டியல்- சில சுவாரஸ்யங்கள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திரையுலக பிரபலங்கள் வாக்களிக்கும்போது சில சுவாரசியங்களும் நடைபெற்றன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 6) நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, இரவு 7 மணிக்கு முடிந்தது. சின்ன பிரச்சினைகளைத் தாண்டி பெரிதாக எந்தவொரு பிரச்சினையுமின்றி இந்த வாக்குப்பதிவு முடிந்தது குறிப்பிடத்தக்கது. திரையுலக பிரபலங்கள் பலரும் காலையிலேயே முதல் நபராக வந்து தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்தார்கள்.

ரசிகர்களால் டென்ஷனான அஜித்

7 மணியளவில் சென்றால் ரசிகர்கள் கூடுவார்கள் என்று காலை 6:30 மணிக்கு எல்லாம் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்துவிட்டார் அஜித். அங்கிருந்த ரசிகர்கள் பலரும் செல்ஃபி எடுக்க முற்பட்டனர். இதனால் அஜித் டென்ஷனாகிவிட்டார். ஒரு ரசிகரின் செல்போனைப் பறித்து வைத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் ரசிகரிடன் செல்போனை மீண்டும் வழங்கினார். அதேபோல், அஜித் வாக்களிக்க வரும்போது கருப்பு, சிவப்பு கலந்த மாஸ்க் அணிந்து வந்தார். அதை வைத்து சிலர் குறியீடு கண்டுபிடித்து வெளியிட்ட பதிவுகளைக் காண முடிந்தது.

சைக்களில் விஜய்; அரசியல் வட்டாரம் டென்ஷன்

யாரும் எதிர்பாராதவிதமாக வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்தார் விஜய். இதனால் ரசிகர்கள் கூட்டம் கூடியது. வாக்களித்துவிட்டுத் திரும்பும்போது, கூட்ட நெரிசல் அதிகமாகவே உடனடியாகத் தனது கார் ஓட்டுநருடன் பைக்கில் வீட்டிற்குச் சென்றார். பைக்கில் பயணிக்கும்போது ரசிகர்களும் பைக்கில் பயணித்து, விஜய்யைத் தொடுவது, செல்ஃபி எடுக்க முயல்வது எனத் தொந்தரவு செய்தனர். ஆனால், விஜய்யோ எதற்கும் டென்ஷன் ஆகாமல் கூலாக இருந்தார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை மறைமுகமாக உணர்த்தவே விஜய் சைக்கிளில் பயணித்தார் என்று செய்திகள் வெளியாகத் தொடங்கின. இதனால் பதறிய விஜய் தரப்பு, "வீட்டிற்குப் பின்னால் வாக்குச்சாவடி அங்கு காரில் பயணிக்க முடியாது. ஏனென்றால் தெரு மிகவும் சிறியது. அதனால்தான் சைக்கிள். வேறு எந்தவொரு காரணமும் அல்ல" என்று விளக்கம் அளித்தார்கள்.

பலத்த பாதுகாப்புக்கு இடையே ரஜினி, கமல் வாக்களிப்பு

காலை 7 மணிக்கே முதல் நபராகக் கடும் பாதுகாப்புக்கு இடையே ரஜினி வாக்களித்தார். வாக்களிக்கும் இயந்திரம் அருகே புகைப்படம், வீடியோ எடுக்க பலரும் கூடிவிட்டார்கள். இதனால் அனைவரையும் ஒதுங்கச்சொல்லி செய்கை காட்டினார் ரஜினி. அனைத்துப் பக்கங்களிலும் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பின்பே தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

தனது மகள் ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன் ஆகியோருடன் வந்து வாக்களித்தார் கமல். ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டு உடனடியாக கோவைக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு அனைத்து பூத்களிலும் நடக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.

வீட்டிலிருந்து நடந்தே வந்த விக்ரம்

தனது வீட்டிற்கு அருகிலேயே வாக்குச்சாவடி என்பதால், நடந்தே வந்தார் விக்ரம். இதைப் பார்த்தவர்கள் உடனடியாகப் புகைப்படம் எடுக்கக் கூடினார்கள். அப்போது ரொம்பவே கூலாக அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் கேமராமேன் ஒருவர் கீழே விழவே, "பார்த்துப்பா" என்று பதறினார் விக்ரம்.

பிரபலங்களின் வேண்டுகோள்

சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சித்தார்த், ஜெயம் ரவி, ஆர்யா, ஐஸ்வர்யா ராஜேஷ், த்ரிஷா, அருண் விஜய், பிரசன்னா, விஷ்ணு விஷால், சசிகுமார், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட பலரும் தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்தார்கள். அனைவருமே பத்திரிகையாளர்கள் மத்தியில் அனைவரும் வாக்களிக்க வற்புறுத்தினார்கள்.

விஜய் சைக்களில் வந்து வாக்களித்தது குறித்து விஜய் சேதுபதியிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு "இதை அவரிடம் போய் கேளுங்கள். எதற்கு என்னிடம் கேட்கிறீர்கள்" என்றார் விஜய் சேதுபதி.

ஹாலிவுட் படத்தால் வாக்களிக்காத தனுஷ்

'தி க்ரே மேன்' ஹாலிவுட் படத்துக்காக அமெரிக்காவில் இருக்கிறார் தனுஷ். மே மாதம் தான் இந்தியாவுக்குத் திரும்பவுள்ளார். இதனால் இந்தத் தேர்தலில் தனுஷ் வாக்களிக்கவில்லை. அவருடன் ஐஸ்வர்யா தனுஷும் சென்றிருப்பதால் அவரும் வாக்களிக்கவில்லை. அதேபோல் ரஜினியின் மற்றொரு மகளான செளந்தர்யா ரஜினிகாந்தும் வாக்களிக்கவில்லை. இதற்கான காரணம் என்னவென்று அவருடைய தரப்பிலிருந்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

வாக்களிக்கத் தவறிய பிரபலங்கள்

ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, யுவன், மணிரத்னம், வெற்றிமாறன், கவுண்டமணி, வடிவேலு, கே.பாக்யராஜ், விஜயகாந்த், மோகன், கார்த்திக், பார்த்திபன், ராஜ்கிரண், அரவிந்த் சுவாமி, பிரபுதேவா, லாரன்ஸ், விஷால், இயக்குநர் சுந்தர்.சி, சிவா, சமுத்திரக்கனி, ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன், லிங்குசாமி, கோவை சரளா, மீனா, விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் இந்தத் தேர்தலில் வாக்களிக்கவில்லை. இதற்கான காரணம் என்னவென்றும் தெரிவிக்கவில்லை.

ரசிகர்களிடம் குறையாத செல்ஃபி மோகம்

வழக்கம் போல் ரசிகர்களின் செல்ஃபி மோகம் இந்தத் தேர்தலிலும் எதிரொலித்தது. பிரபலங்கள் வாக்களிக்கச் செல்லும்போது அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள முண்டியடித்தார்கள். அவர்களைக் காவல்துறையினர் அப்புறப்படுத்தினார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x