

டெல்லி மது விடுதியின் வெளியே நடந்த சண்டை தொடர்பாக வெளியான வீடியோவில் இருப்பது தான் இல்லை என்று அஜய் தேவ்கன் விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில் உள்ள மது விடுதி ஒன்றின் வாசலில் இரு நபர்கள் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி சண்டை போட்டுக்கொள்ளும் வீடியோ கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் வலம் வந்தது. அந்த வீடியோவில் சண்டை போட்டுக் கொண்டிருந்த வெள்ளை சட்டை அணிந்திருந்த நபர் நடிகர் அஜய் தேவ்கன் என்று பலரும் கூறி வந்தனர். இந்த வீடியோ ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் அந்த வீடியோவில் இருப்பது அஜய் தேவ்கன் அல்ல என்று அவரது தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
''கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ‘தன்ஹாஜி’ படத்தின் விளம்பரத்துக்குப் பிறகு அஜய் தேவ்கன் டெல்லி செல்லவில்லை. எனவே, டெல்லியில் உள்ள பப் ஒன்றின் வாசலில் அஜய் சண்டை போட்டதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் போலியானவை.
‘மைதான்’, ‘மே டே’ மற்றும் ‘கங்குபாய் கத்தியாவாடி’ ஆகிய படங்களுக்காக அவர் மும்பையிலேயே இருக்கிறார். கடந்த 14 மாதங்களாக அவர் டெல்லி செல்லவே இல்லை. செய்திகளை வெளியிடும் முன்னர் ஊடகங்கள் உண்மைத்தன்மையை ஆராய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்''.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.