தெலுங்கு நடிகர் 'வேதம்' நாகையா காலமானார்: அனுஷ்கா இரங்கல்

தெலுங்கு நடிகர் 'வேதம்' நாகையா காலமானார்: அனுஷ்கா இரங்கல்
Updated on
1 min read

தெலுங்கு நடிகர் 'வேதம்' நாகையா காலமானார். அவருக்கு வயது 77. அவரது மறைவுக்கு நடிகை அனுஷ்கா இரங்கல் தெரிவித்துள்ளார்.

'வேதம்' (தமிழில் 'வானம்') திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் நாகையா. கிருஷ் இயக்கத்தில் உருவான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியிலும் வெற்றி கண்டது. நாகையாவின் கதாபாத்திரமும், நடிப்பும் பாராட்டப்படன. இதனால் 'வேதம்' நாகையா என்றே இவர் அறியப்பட்டார்.

தொடர்ந்து 'யே மாய சேஸாவே', 'ஸ்பைடர்', 'கமனம்', 'நாகவல்லி', 'பலுபு' உள்ளிட்ட படங்களில் நாகையா நடித்தார். கடந்த சில மாதங்களாகவே வயது மூப்பின் காரணமாக சில உடல் நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார் நாகையா. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்தார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அன்று நாகையா காலமானார். தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த பலரும் நாகையாவின் குடும்பத்தினருக்கு தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர். பிரபல நடிகை அனுஷ்கா, நாகையாவுடன் தான் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து தனது இரங்கலை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

"ஒரு நல்ல ஆத்மா இன்று சொர்க்கம் சென்றிருக்கிறது. நாகையாவின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். இந்தத் துயரமான சமயத்தில் கடவுள் அவர்களுக்கு ஆறுதலும், ஆசிர்வாதமும் தரட்டும். ஓம் ஷாந்தி" என்று அனுஷ்கா குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in