Published : 26 Mar 2021 15:42 pm

Updated : 26 Mar 2021 18:55 pm

 

Published : 26 Mar 2021 03:42 PM
Last Updated : 26 Mar 2021 06:55 PM

பிரகாஷ்ராஜ் பிறந்த நாள் ஸ்பெஷல்: அசலான முழுமையான கலைஞன் 

prakash-raj-birthday-special

சென்னை

இந்திய சினிமாவில் பல மொழிகளில் நடித்து மாநில எல்லைகளைக் கடந்து புகழ்பெற்று சிறந்த நடிப்புக்கான பல விருதுகளை வென்று மொழி எல்லைகளுக்கு அப்பாற்பட்டு சினிமா ரசிகர்கள் அனைவரின் நன்மதிப்பைப் பெற்றுள்ள பிரகாஷ்ராஜ் இன்று (மார்ச் 24) தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

மேடையிலிருந்து திரைக்கு


பெங்களூரில் பிறந்தவரான பிரகாஷ்ராஜ் கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர். நாடகப் பின்னணியிலிருந்து சினிமாவுக்கு வந்து நீங்காத் தடம் பதித்தவர்களின் பட்டியலில் முக்கிய இடம் வகிக்கிறார். நாடகங்களில் கிடைத்த பிரபல்யத்தின் மூலமாக தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கன்னடத் தொடர்களிலும் அதன் வழியே கன்னடத் திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் பிரகாஷ்ராஜை தன்னுடைய 'டூயட்' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார். அதன் மூலம் பாலசந்தரின் பெருமைமிகு அறிமுகங்களின் நீண்ட பட்டியலில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றார் பிரகாஷ்ராஜ். மொழி எல்லைகளைக் கடந்து நன்மதிப்பைப் பெற்றவரான பாலசந்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டதாலும் 'டூயட்' படத்தில் ஒரு ஆணாதிக்க மனநிலை கொண்ட சினிமா நட்சத்திரமாக கவனம் ஈர்க்கும் வகையில் நடித்திருந்ததாலும் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாஷ்ராஜை நாடிவந்தன. 90களின் பிற்பகுதியில் நான்கு மொழிகளிலும் தொடர்ந்து நேர்மறை கதாபாத்திரம், எதிர்மறை கதாபாத்திரம், கெளரவத் தோற்றம் எனப் பல்வேறு வகையான நடிப்புகளை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனங்களில் இடம்பிடிக்கத் தொடங்கினார் பிரகாஷ்ராஜ்.

தேடிவந்த தேசிய அங்கீகாரம்

மணிரத்னம் இயக்கத்தில் 1997இல் வெளியான 'இருவர்' படத்தில் கலைஞர் மு.கருணாநிதியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ்ச்செல்வன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரகாஷ்ராஜ். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களே சிரமப்பட வைக்கும் வசனங்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்தன. அந்தச் சவாலைத் துணிந்து ஏற்றுக் கலைஞரின் மொழிவளத்தையும் சொல்நயத்தையும் வெளிப்படுத்தும் வகையிலான செந்தமிழ் வசனங்களையும் கவிதைகளையும் அநாயசமாகப் பேசினார் பிரகாஷ்ராஜ்.

உடல் மொழியிலும் கருணாநிதியின் கொள்கைப் பிடிப்பு சார்ந்த களச் செயல்பாடும் போராட்டங்களும் நிறைந்த இளவயது வாழ்க்கையின் தீவிரத்தன்மையைப் பதவிக்கு வந்தவுடன் அரசியல் சிக்கல்களையும் சவால்களையும் எதிர்கொள்ளும்போது எதிர்கொண்ட மதியூகத்தை, நிதானத்தை, உடல்மொழியில் மிகக் கச்சிதமாக வெளிப்படுத்தினார் பிரகாஷ்ராஜ். குறிப்பாக முன்னாள் தோழனும் தற்போதைய அரசியல் எதிரியுமான ஆனந்தனின் மறைவுக்குப் பிறகு தனியாகச் சென்று கண்ணீர் வடித்துக்கொண்டே கவிதை பாடும் காட்சியில் பிரகாஷ்ராஜின் நடிப்பு ஒரு நடிகர் காட்சியைத் தனியாளாக ஆக்கிரமித்து நடிப்பது எப்படி என்பதற்கான இலக்கணம். கறுப்பு வெள்ளைக் காலத்துடன் கிட்டத்தட்ட வழக்கொழிந்துவிட்ட இதுபோன்ற ஒற்றை நடிப்பு (Mono-acting) காட்சிக்கு தன் நடிப்பால் புத்துயிர் அளித்திருந்தார் பிரகாஷ்ராஜ்.

'இருவர்' படத்தில் நடித்ததற்காகச் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை அவர் வென்றது மிகவும் பொருத்தமானது. அடுத்த ஆண்டு 'அந்தப்புரம்' என்னும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததற்காகச் சிறந்த நடிப்புக்கான நடுவர்களின் சிறப்பு விருதை வென்றார் பிரகாஷ்ராஜ். குறுகிய இடைவெளியில் கிடைத்த இவ்விரு தேசிய அங்கீகாரங்களின் மூலம் பிரகாஷ்ராஜின் புகழின் வீச்சு பன்மடங்கு அதிகரித்தது. பல எல்லைகளைக் கடந்தது.

பலவகைக் கதாபாத்திரங்கள், புதிய பரிமாணங்கள்

புத்தாயிரத்தில் பிரகாஷ்ராஜின் நடிப்பில் இன்னும் பல புதிய பரிமாணங்கள் வெளிப்பட்டன. அதனால் அவருடைய நடிப்புப் பயணம் மேலும் பல புதிய பரிணாமங்களை அடைந்தது. வசந்த் இயக்கத்தில் வெளியான 'அப்பு' திரைப்படத்தில் பெண்களை வைத்து பாலியல் தொழில் விடுதி நடத்தும் திருநங்கையாக நடித்திருந்தார் பிரகாஷ்ராஜ். சமூகத்தில் திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வும் அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான் என்கிற பரிவுணர்வும் அதிகரித்துள்ளது. ஆனால், திருநங்கைகள் என்றால் யாரென்றே தெரியாத அவர்களைப் பார்த்தாலே இழிவாகவும் ஏளனமாகவும் கிண்டல் செய்வதுமே பொது வழக்கமாக இருந்த காலகட்டத்தில் திருநங்கையாக நடிக்கும் பெரும் துணிச்சல் பிரகாஷ்ராஜுக்கு இருந்தது.

இலங்கைத் தமிழர் பிரச்சினையை முன்வைத்து உருவாக்கப்பட்ட உணர்வுபூர்வமான திரைப்படமான 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் மனசாட்சியுள்ள சிங்களவராக நடித்து நேர்மறை கதாபாத்திரங்களிலும் அவரால் வெகு சிறப்பாக நடிக்க முடியும் என்பதை அழுத்தமாகப் பதியவைத்தது. அதே நேரம் அடுத்த ஆண்டில் தெலுங்கில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றிபெற்ற 'ஒக்கடு' அதன் தமிழ் மறு ஆக்கமான 'கில்லி' படங்களின் வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்திருந்த விதம் அவரை ஒரு தனித்துவம் மிக்க வில்லன் நடிகராக அடையாளப்படுத்தியது.

குறிப்பாக தமிழில் மதுரையைச் சேர்ந்த 'முத்துப்பாண்டி' கதாபாத்திரம் பிரகாஷ்ராஜின் மறக்க முடியாத அடையாளங்களில் ஒன்றாக ஆகிவிட்டது. இந்த இரு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் மாறி மாறி பிரதான வில்லன் வேடத்தில் நடித்து வந்தார் பிரகாஷ்ராஜ். ஒரு காலகட்டத்தில் நட்சத்திர நாயகர்களின் படம் என்றாலே பிரகாஷ்ராஜ்தான் மெயின் வில்லனாக இருக்க வேண்டும் அல்லது அவர் ஒரு முக்கியமான துணைக் கதாபாத்திரத்திலாவது நடித்தாக வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக அனைவராலும் பின்பற்றப்பட்டது. பிரகாஷ்ராஜ் தென்னிந்திய அளவிலான முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தார். பாலிவுட் படங்களில் தடம் பதித்தார். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் வெற்றிபெற்ற 'போக்கிரி', தொடங்கி 'சிங்கம்' வரை கொடூர வில்லன் கதாபாத்திரங்களின் மூலம் பிரகாஷ்ராஜ், ரசிகர்களை வசீகரித்த படங்களின் பட்டியல் நீளமானது

வில்லனாகப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட கதாபாத்திரங்களில் நடித்தார். நாயகனைப் பார்த்துக் குரலை உயர்த்தி சவால்விடும் வேடங்களிலும் தன் தனித்தன்மையை வெளிப்படுத்தினார் அதே நேரம் கமல்ஹாசனுடன் நடித்த 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' உள்ளிட்ட படங்களில் வழக்கமான வில்லன் என்று வரையறுக்க முடியாத அதே நேரம் சுயநலம், கயமை போன்ற தீய எண்ணங்கள் கொண்ட கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துப் புகழ்பெற்றார்.

எல்லைகளில் சிக்காதவர்

தொடர்ந்து வில்லனாக நடித்து வந்தபோதிலும் கே.பாக்யராஜ் இயக்கத்தில் விஜயகாந்துடன் 'சொக்கத் தங்கம்', ராதாமோகனின் அறிமுகப் படமான 'அழகிய தீயே', 'பொன்னியின் செல்வன்', 'பீமா', 'அறை எண் 305இல் கடவுள்' உள்பட பல படங்களில் பாசிடிவ்வான கதாபாத்திரங்களிலும் பெரிதும் ரசிக்க வைத்தார். நேர்மறை, எதிர்மறை என்னும் இருமைக்கு அப்பாற்பட்ட நிறைகளும் குறைகளும் நிரம்பிய நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களை நினைவுபடுத்தும் கதாபாத்திரங்களில் வெகு இயல்பாகப் பொருந்திச் சிறப்பாக நடித்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். தெலுங்கில் 'பொம்மரிலு' , அதன் தமிழ் மறு ஆக்கமான 'சந்தோஷ் சுப்பிரமணியம்' திரைப்படங்களில் அவர் ஏற்ற கண்டிப்பு மிக்க தந்தை கதாபாத்திரம் இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.

தொடர்ந்து துணைக் கதாபாத்திரங்களில் நடித்துவந்தாலும் அவ்வப்போது முதன்மைக் கதாபாத்திரத்திலும் நடித்தார் பிரகாஷ்ராஜ். பிரியதர்ஷன் இயக்கிய 'காஞ்சிவரம்' திரைப்படம் இந்த வகைமையில் முக்கியமானது. காஞ்சிபுரத்தில் வாழும் நெசவாளிகளின் வாழ்வியல் பதிவான இந்தத் திரைப்படத்தில் தன் மகளுக்கு ஒரு பட்டுச் சேலை வாங்க முடியாத வறுமையில் வாழும் ஒரு ஏழை பட்டு நெசவாளியாகவே வாழ்ந்ததன் மூலம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார் பிரகாஷ்ராஜ்.

மூன்று தேசிய விருதுகளை வென்றிருக்கும் பிரகாஷ்ராஜ், தொடர்ந்து வணிகப் படங்களில் பெரிய பட்ஜெட் படங்களில் நடித்துக்கொண்டே வணிகச் சட்டகத்துக்குள் நிகழும் மாற்று முயற்சிகளில் நடிப்பு உட்படப் பல வகைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். ஒரு நடிகராகப் பல மொழித் திரைப்படங்களில் எல்லா விதமான கதாபாத்திரங்களிலும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாகத் தன் வெற்றிப் பயணத்தைத் தொடரும் நடிகர்கள் வெகு சிலரே. அதேபோல் தொடக்கக் காலத்தில் சில படங்களைத் தவிர எல்லா மொழிகளிலும் சொந்தக் குரலில் பேசி நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். இதன் மூலம் முழுமையான பன்மொழிக் கலைஞராகத் திகழ்வதும் அவருடைய தனித்தன்மைகளில் ஒன்று.

திறமைசாலிகளுக்குத் தளம் அமைத்தவர்

திரைத் துறைக்கு நடிப்பைத் தாண்டிய பங்களிப்புகளையும் வழங்கிவருகிறார் பிரகாஷ்ராஜ். பன்மொழிகளில் சாதனைகளைப் படைத்திருந்தாலும் தமிழில் தான் அறிமுகமான திரைப்படத்தின் பெயரில் தன் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். 'அழகிய தீயே', 'மொழி', 'கண்ட நாள் முதல்', 'பயணம்' என டூயட் மூவீஸ் தயாரிப்புகள் பலவும் அனைத்துத் தரப்பு ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த தரமான படைப்புகள்.

அதோடு பிரகாஷ்ராஜ் தயாரித்த திரைப்படங்கள் வாய்ப்பு கிடைக்காத பல இளைஞர்களின் திறமைக்குத் தளம் அமைத்துக்கொடுக்கும் களமாகத் திகழ்கிறது. இயக்குநர் ராதா மோகன், நடிகர் பிரசன்னா, குமரவேல் போன்ற பல திறமையாளர்கள் டூயட் மூவீஸ் படங்களின் மூலம் அதிக மக்களைச் சென்றடைந்தார்கள். தலைவாசல் விஜய், எம்.எஸ்.பாஸ்கர் போன்ற மூத்த நடிகர்களுக்கும் அவர்களின் திறமைக்கும் அனுபவத்துக்கும் மரியாதை செய்யும் வகையிலான கதாபாத்திரங்கள் அமைந்தன.

கல்வித்துறை சிக்கல்களை ஒரு எளிய நடுத்தரக் குடும்பத்துத் தந்தையின் பார்வையிலிருந்து பேசிய 'தோனி', உணவின் சுவையையும் முதிர்ச்சியான காதலையும் கொண்டாடிய 'உன் சமையலறையில்' போன்ற படங்களை இயக்கி ஒரு படைப்பாளியாகவும் ரசிகர்களின் நல் அபிப்ராயத்தைப் பெற்றிருக்கிறார் பிரகாஷ்ராஜ்.

சமூக அக்கறையும் துணிச்சலும்

ஒரு நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பல மொழிகளில் தன் பன்முகத் திறன்களால் முக்கியமான பங்களிப்புகளைச் செலுத்திவரும் பிரகாஷ்ராஜ் ஒரு தனிநபராகவும் சமூகத்தின் மீது உண்மையான அக்கறையுடனும் வன்முறைக்கு எதிரான துணிச்சலுடன் செயல்பட்டு வருகிறார்.

பெங்களூரில் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் மதவாத வன்முறையாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு மதவாத வன்முறைக்கு எதிராக ட்விட்டரில் மட்டுமல்லாமல் ஊடக சந்திப்புகள் தேர்தல் அரசியல் எனப் பல வகைகளில் செயல்பட்டு வருகிறார். அரசியலில் ஊடுருவியுள்ள மதவாத சித்தாந்தத்தை எதிர்க்கும் விதமாக 2019 மக்களவைத் தேர்தலில் பெங்களூரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் தோல்வியடைந்தாலும் துவண்டு விடாமல் தொடர்ந்து சமூக, அரசியல் பிரச்சினைகள் சார்ந்து அரசையும் ஆளும் வர்க்கத்தையும் எதிர்த்துப் பல தளங்களில் குரல் எழுப்பிவருகிறார்.

திறமை, கலை மீதான மதிப்பு, இளம் திறமையாளருக்கு வாய்ப்பளித்து வழிகாட்டும் பெருந்தன்மை, சமூக அக்கறை, அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்பும் துணிச்சல், சுயமரியாதை என ஒரு முழுமையான கலைஞனாக வாழும் பிரகாஷ்ராஜ் அவர் இயங்கும் அனைத்துத் தளங்களிலும் மேலும் பல வெற்றிகளைக் குவிக்க வேண்டும், சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்று மனதார வாழ்த்துவோம்.

தவறவிடாதீர்!

பிரகாஷ் ராஜ்பிரகாஷ் ராஜ் பிறந்த நாள்பிரகாஷ் ராஜ் ஸ்பெஷல்பிரகாஷ் ராஜ் பிற்ந்த நாள் ஸ்பெஷல்One minute newsPrakash rajPrakash raj specialPrakash raj birthdayPrakash raj birthday special

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x