Published : 24 Mar 2021 10:41 AM
Last Updated : 24 Mar 2021 10:41 AM
இயக்குநர் விஜய் இயக்கத்தில் கங்கணா ரணாவத், அரவிந்த்சாமி, தம்பி ராமையா, சமுத்திரக்கனி, மதுபாலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தலைவி'. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. 'பாகுபலி' கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் இந்தப் படத்தின் கதையில் பணிபுரிந்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
நேற்று (மார்ச் 23) 'தலைவி' படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர்.
சென்னையில் 'தலைவி' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கங்கணா ரணாவத், அரவிந்த்சாமி உள்ளிட்ட ஒட்டுமொத்தப் படக்குழுவினரும் கலந்து கொண்டனர். கங்கணா ரணாவத் வருகையால் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த விழாவில் அரவிந்த்சாமி பேசியதாவது:
''கடந்த ஒன்றரை வருடம் சென்ற இந்தப் பயணத்தால் மைக்கைப் பார்க்கும்போதெல்லாம் ‘என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே’ என்று ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், அந்த வார்த்தைகள் ஒருவருக்கு மட்டுமே சொந்தம் என்பதால் வணக்கம் என்று மட்டும் கூறித் தொடங்குகிறேன். பல ஆளுமைகளின் கதாபாத்திரங்கள் நிறைந்த இப்படத்தில் என்னைப் புரட்சித் தலைவராக நடிக்க வைத்த விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு கதாபாத்திரத்தை எடுத்துக்கொண்டால் அதற்கு என்ன தேவை என்பது நமக்கு முன்னாலேயே தெரியும். அது நன்றாக வரவேண்டும் என்ற ஆர்வத்துடன் நாம் நடிக்கும்போது அது கஷ்டமாகத் தெரியாது. இந்தப் பாத்திரத்துக்காக நான் கஷ்டப்படவில்லை. மாறாக, அதை ரசித்துச் செய்தேன். சிறு வயதிலிருந்து பிரம்மாண்டமாகப் பார்த்து ரசித்த மனிதரின் கதாபாத்திரம் இது. இதை ஒரு மிகப்பெரிய பொறுப்பாக நினைத்துதான் நடித்தேன்''.
இவ்வாறு அரவிந்த்சாமி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT