Published : 23 Mar 2021 10:49 AM
Last Updated : 23 Mar 2021 10:49 AM

அடுத்து என்ன வெற்றி? - 2-வது தேசிய விருதுக்கு நன்றி சொன்ன தனுஷ்

சிறந்த நடிகர் தேசிய விருது பெற்றுள்ள தனுஷ் இயக்குநர் வெற்றிமாறன், சக நடிகர்கள், திரையலக நண்பர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

67வது தேசிய விருதுகள் திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த மாநில மொழித் திரைப்படமாகத் தமிழில் அசுரன் தேர்வானது. படத்தின் நாயகன் தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார். ஆடுகளம் படத்துக்குப் பிறகு அவர் வெல்லும் இரண்டாவது சிறந்த நடிகர் தேசிய விருது இது.

இதையொட்டி செவ்வாய்க்கிழமை காலை அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்து தனுஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"அனைவருக்கும் வணக்கம், அசுரன் படத்துக்காகப் பெருமைக்குரிய தேசிய விருது கவுரவம் எனக்குக் கிடைத்திருக்கிறது என்கிற அற்புதமான செய்தியைக் கேட்டுக் கண் விழித்தேன். சிறந்த நடிகர் விருது வெல்வது ஒரு கனவு. இரண்டு விருதுகளை வெல்வது ஆசிர்வாதமே இன்றி வேறொன்றும் இல்லை. நான் இவ்வளவு தூரம் வருவேன் என்று கற்பனை கூட செய்ததில்லை.

நன்றி சொல்ல நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலரை மட்டும் குறிப்பிடுகிறேன். எப்போதும் போல முதலில் என் அம்மா, அப்பா, எனது குரு என் அண்ணனுக்கு என் முதல் நன்றிகள். சிவசாமி கதாபாத்திரத்தைத் தந்ததற்காக வெற்றிமாறனுக்கு நன்றி.

வெற்றி, உங்களை முதலில் பாலு மகேந்திரா அவர்களின் அலுவலகத்தில் உங்களை முதலில் சந்தித்த போது நீங்கள் என் நண்பராக, துணையாக ஒரு சகோதரராக மாறுவீர்கள் என்று நான் நினைத்துப் பார்க்கவே இல்லை. நாம் இணைந்து பணியாற்றிய 4 படங்கள் குறித்தும், இணைந்து தயாரித்த 2 படங்கள் குறித்தும் நான் பெருமைப்படுகிறேன்.

என்னை நீங்கள் இவ்வளவு நம்புகிறீர்கள் என்பதிலும் நான் உங்களை நம்புகிறேன் என்பதிலும் மிக்க மகிழ்ச்சி. அடுத்ததாக எனக்காக என்ன எழுதியிருக்கிறீர்கள் என்பதைக் கேட்க ஆவலாக இருக்கிறேன். அத்தனை ஆதரவையும் தந்த என் தயாரிப்பாளர் தாணுவுக்கு நன்றி.

ஒட்டுமொத்த அசுரன் குழுவுக்கும், குறிப்பாக எனது அன்பார்ந்த குடும்பத்தினர் பச்சையம்மா மஞ்சு, என் சிதம்பரம் கென் மற்றும் என் முருகன் டீஜே ஆகியோருக்கு நன்றி. வா அசுரா பாடலுக்காக ஜிவி பிரகாஷுக்கு நன்றி.

ஒட்டுமொத்த ஊடகம், பத்திரிகை, தொலைக்காட்சி சேனல்கள், சமூக ஊடகங்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துபவர்கள் என அனைவரின் ஆதரவுகும் அன்புக்கும், பெருமையுடன் என்னைக் கொண்டாடியதற்கும் நன்றி. எனக்காக நேரமெடுத்து வாழ்த்து தெரிவித்துள்ள எனது திரையுலக நண்பர்களுக்கும் நன்றி.

கடைசியாக, எனது தூண்களான என் ரசிகர்களுக்கு நன்றி. நீங்கள் தரும் நிபந்தனையற்ற அன்பு தான் என்னை செலுத்திக்கொண்டிருக்கிறது. உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. என்றும் அன்பை மட்டுமே பரப்புங்கள்.

எண்ணம் போல் வாழ்க்கை.

என்றும் நன்றியுடன் தனுஷ்" என்று தனுஷ் இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x