விமானத்தில் என் முகத்தைப் பார்க்க என் பெற்றோர் இருந்திருக்கலாம்: சோனு சூட் உருக்கம்

விமானத்தில் என் முகத்தைப் பார்க்க என் பெற்றோர் இருந்திருக்கலாம்: சோனு சூட் உருக்கம்
Updated on
1 min read

விமானத்தில் தன் முகம் பதிக்கப்பட்டதைப் பார்க்க தனது பெற்றோர் இருந்திருக்கலாம் என்று நடிகர் சோனு சூட் உருக்கமுடன் கூறியுள்ளார்.

கரோனா நெருக்கடி காரணமாக பிற மாநிலங்களில் போக்குவரத்து வசதியின்றி தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அவரவர் சொந்த ஊருக்குத் திரும்ப சோனு சூட் போக்குவரத்து உதவிகளைச் செய்தார். மேலும், அத்தகைய தொழிலாளர்களுக்காகத் தனியாக வேலைவாய்ப்புத் தளம் ஒன்றையும் ஆரம்பித்தார். இவற்றோடு கல்வி உதவித்தொகை, ஸ்மார்ட்போன்கள், மொபைல் டவர் அமைப்பு என எண்ணற்ற உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்.

சோனு சூட் செய்த நல உதவிகளைப் பாராட்டி அவருக்குப் பல்வேறு விருதுகள், கவுரவங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் ஸ்பைஸ்ஜெட் விமானச் சேவை நிறுவனம் சோனு சூட்டைப் பாராட்டும் வண்ணம் தங்களது போயிங் 737 விமானத்தில் அவரது முகத்தைப் பதித்து நன்றி தெரிவித்துள்ளது.

இதைச் சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து சோனு சூட்டைப் பாராட்டி வருகின்றனர். இதுகுறித்துப் பேசியுள்ள சோனு சூட், "அந்தப் புகைப்படங்களைப் பார்த்தபோது மிகவும் பெருமையாக உணர்ந்தேன். ஹைதராபாத், பஞ்சாப், டெல்லி எனப் பல்வேறு இடங்களுக்கு அந்த விமானம் பயணப்பட்டுள்ளது. அந்த நகரங்களிலிருந்து பலரும் எனக்கு விமானத்தின் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். எனது பெற்றோர் இந்தத் தருணத்தில் இல்லாத குறையை அதிகம் உணர்கிறேன். அவர்கள் இதைப் பார்த்திருக்கலாம். ஸ்பைஸ்ஜெட் என்னைக் கவுரவித்தது தெரிந்தபோது நான் மிகவும் சிறியவனாக உணர்ந்தேன். விண்ணைத் தொட வைக்கும் முயற்சிகளைத் தொடர்ந்து நான் செய்வேன்" என்று கூறியுள்ளார்.

சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் ’ஆச்சார்யா’ திரைப்படத்திலும், இந்தியில் 'பிரித்விராஜ்’ திரைப்படத்திலும் சோனு சூட் நடித்து வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in