

பெண்கள் கிழிந்த ஜீன்ஸ் அணிவது குறித்து உத்தராகண்ட் முதல்வர் திராத் சிங் ராவத்தின் கருத்துகளைக் கண்டித்திருக்கும் நடிகை ஜெயா பச்சன், இது போன்ற மனநிலை தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஊக்குவிக்கிறது என்று கூறியுள்ளார்.
முன்னதாக, உத்தராகண்ட் முதல்வர் ராவத், குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மாநில ஆணையம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் பெண் ஒருவர், கிழிந்த ஜீன்ஸ் அணிந்து தன் குழந்தைகளுடன் விமானத்தில் பயணப்படுவதைத் தான் பார்த்ததாகவும், கிழிந்த ஜீன்ஸ் அணியும் பெண்கள் சமூகத்தில், குழந்தைகளிடத்தில் தவறான பிம்பத்தை உருவாக்குகின்றனர் என்றும், இது குழந்தைகளுக்குத் தவறான எடுத்துக்காட்டு என்றும் கூறியிருந்தார்.
ராவத்தின் கருத்துக்களுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. கிழிந்த ஜீன்ஸ் என்கிற வார்த்தைகள் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்தன.
இதுகுறித்து பேசியிருக்கும் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும் நடிகையுமான ஜெயா பச்சன், "இது ஒரு தவறான மனநிலை, இந்த மனநிலை தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஊக்குவிக்கிறது. பெண்கள் குட்டையான ஆடைகள் அணிவதால் பாலியல் வன்கொடுமைகள் நிகழ்வதில்லை. திராத் சிங் ராவத் போன்ற ஆண்கள் பெண்கள் மீது வெறுப்பைப் பரப்புவதாலும், அவர்கள் கடமையைச் செய்யத் தவறுவதாலும் தான் நடக்கிறது. கிழிந்த ஜீன்ஸ் அணியும் பெண்களுக்கு என் ஆதரவு" என்று கூறியுள்ளார்.