Last Updated : 04 Nov, 2015 04:27 PM

 

Published : 04 Nov 2015 04:27 PM
Last Updated : 04 Nov 2015 04:27 PM

சாலைகளைக் கடந்து செல்லும் ஒரு வாழ்க்கைப் பயணம்

வாழ்க்கையின் சில பயணங்கள் நமக்கு வேகமாக சில உண்மைகளை உணர்த்திவிட்டு நம்மைக் கடந்துசென்று விடுகிறது என்பதை மிக அழகாக சொல்கிறது The Fifth Season of the year எனும் போலந்து திரைப்படம்.

இப்படத்தில் இடம்பெறும் பயணம் ஒரு அனுபவம் என்றால் இப்படத்திற்கு ஆதாரமாக உள்ள கதை ஒரு தத்துவம் என்று கொள்ளலாம்.

ஓய்வு பெற்ற பியானோ டீச்சர் பார்பராவோடு வாழ்ந்த ஓவியர் இறந்துவிட, வயதான காலத்தில் பார்பரா தனித்துவிடப்படுகிறாள்.

ஓவியரின் இறுதிச் சடங்கில் பேண்ட் வாசிக்க வந்தவர்தான் விட்டெக். பார்பராவின் காதல் கணவரின் சாம்பல் எச்சத்தைக் கடலில் கரைக்கச் செல்லும் பயணத்தில் டாக்ஸி டிரைவராகவும் விட்டெக் வருவது பார்பரா எதிர்பாராதது.

விட்டெக் பல ஆண்டுகாலம் சுரங்கப் பணியாளராக வேலை பார்த்தவர். இறுதிச் சடங்குகளில் பேண்ட் வாசிப்பது தொழிலுக்காக அல்ல. அது ஒரு ஆத்மார்த்தமான காரியம் என்பதற்காகவே செய்துவருபவர்.

இறந்த ஓவியரின் சாம்பல் எச்சத்தை கடலில் கரைக்க பார்பரா மேற்கொள்ளும் பயணத்திற்கு மேலும் சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன. பார்பராவின் காதல் கணவர் இறந்தபிறகு அவளது குடியிருப்பை காலி செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தி வெளியேற்றிவிடுகிறார்கள் ஓவியரது வீட்டைச் சேர்ந்தவர்கள்.

இந்த நிலையில் அவள் எங்கு செல்வாள் என்ற எந்தக் கவலையும் அவர்களுக்கு இல்லை. வேறுவழியின்றி வெளியேறவேண்டிய நிலைமை பார்பராவுக்கு. பார்பராவின் கையறுநிலையைப் பார்க்கும்போது பெண்கள் எவ்வகையிலேனும் தங்கள் சுயபலத்தில் நிற்க வேண்டும் என்பதை அழுத்தமாக உணர முடிகிறது.

சரி, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி போலந்து கடற்கரைப் பிரதேசத்தின் வடக்குப் பகுதியை நோக்கி தனது காதல் கணவரது அஸ்தியைக் கரைக்க 500 கிலோ மீட்டர் தூரம் பயணம் செல்லலாமென பார்பரா நினைக்கிறாள். இடுகாட்டு பொறுப்பாளர்களிடம் விசாரித்து ஒரு டாக்ஸியைக் கொண்டுவர செய்கிறாள். அந்த பயணத்தில் டாக்ஸி ஓட்டுனராக வருபவர் இறுதி சடங்கில் பேண்ட் வாசித்த அதே மனிதர் - விட்டெக்.

டாக்ஸி பயணத்தின்போது வெகு நேரம் மௌனம். நீண்ட மௌனத்தைக் கலைத்து தனது கணவரின் உயர்ந்த குணங்களை அவ்வப்போது டிரைவருடன் பகிர்ந்துகொள்வதில் பார்பராவுக்கு சற்றே ஆறுதல்.

மேலோட்டமாகப் பார்த்தால் கதையின் நாயகர் விட்டெக் (மேரியன் ட்சிடெஸியல்) ஆகட்டும், நாயகி பார்பரா (இவா விஸ்னிவ்ஸ்கா) ஆகட்டும் ஆரம்பத்தில் நாம் பார்க்கத் துவங்கும்போது ஏதோ பொழுதை ஓட்டிக்கொண்டிருக்கும் சீனியர் சிட்டிசன்கள் போலத்தான் தோன்றுகிறார்கள். (உலகில் பலரும் வெளித்தோற்றத்திற்கு நமக்கு அப்படித்தான் தோன்றுவார்கள்.)

ஆனால் இவர்கள் கடந்து வந்த வாழ்க்கையில்தான் எவ்வளவு வித்தியாசங்கள். எவ்வளவு வலிகள். சொல்லமுடியாத வாதனைகள்.

பயணத்தின்போது தங்கள் அனுபவங்களை இருவரும் பகிர்ந்துகொள்ளும் காட்சிகள் மட்டுமல்லாமல், ஆங்காங்கே சிற்றுண்டி உண்ணச் சென்ற சிறு உணவுவிடுதி, ஒரு காரில் லிப்ட் கேட்டு வந்து திருடிய இளம்பெண் ஒரு பையனோட பைக்கில் தப்பிச்செல்கையில் அவர்களை விரட்டிப்பிடிக்கும் காட்சி, வழியில் ஒரு வீட்டிற்கு சென்று தன் தோழியை சந்தித்து திரும்புதல், ஒரு ராத்தங்கல் உள்ளிட்ட காட்சிகளும் பயணத்தை சுவாரஸ்யப்படுத்துகின்றன.

வெவ்வேறு வாழ்க்கையிலிருந்து நீண்ட பயணம் செல்வதற்காக சந்தித்துக்கொள்ளும் இந்த இருவருக்குள்ளும் ஏற்படுவது என்ன நட்பா? காதலா? அல்லது நட்பும் காதலுமா? அல்லது ஆத்மார்த்தமானதொரு பிணைப்பா? என்றெல்லாம் நமக்குக் கேட்கத் தோன்றுகிறது...

ஆனால் அதற்குள் பயணம் கடந்துவிடுகிறது. படத்தின் இறுதியில் இதையெல்லாம் கடந்ததொரு விடையும் உண்டு.

பயணத்தின் ஸ்பிக்நீயூ விச்லேக்ஸ் ஒளிப்பதிவு வழியே இரு பக்கங்களிலும் காணக்கிடைக்கும் போலந்து நாட்டின் சலேசிய நிலப்பரப்பின் இயற்கை காட்சிகளும் மிக மிக அற்புதமானவை...

கடைசியில் போலந்தின் வடக்குக் கடற்கரையும் வந்துவிடுகிறது. கார் டிரைவரிடம் தன்னிடமிருந்து மதிப்புமிக்க மோதிரத்தையும் தந்துவிட்டு படகில் நடுக்கடலில் அஸ்தியைக் கரைக்கச் செல்கிறாள் பார்பரா. திரும்பி வர விருப்பமில்லாதவளாக கடலில் அவளும் கரைந்துவிடுகிறாள் தனது கணவன் சாம்பல் எச்சத்தோடு.

நீண்டதூரப் பயணத்தின் வழியே வந்த ஓவியரின் மனைவி ஒரு எஜமானியாக இல்லாமல் ஒரு தோழிபோல நடந்துகொண்டதை நினைத்துப் பார்க்கிறார் விட்டெக். அந்தப் பண்பில் மனம் கரைகிறது. சில நிமிடங்களுக்குமுன் வாழ்வைக் கடந்துசென்றுவிட்ட அந்தத் தோழியை நினைத்து, கடலை வலியோடு பார்த்துவிட்டு திரும்புகிறார் விட்டெக்.

இயக்குநரின் திரைக்கதைக்கு தனது உயிரோட்டமான நடிப்பாற்றலால் நம்மையும் தனது பயணத்தில் உடன்வரச்செய்த மேரியன் ட்சிடெஸியலும், இவா விஸ்னிவ்ஸ்காவும் படத்திற்கு உயிரோட்டமான பங்களிப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

சாலையின் திருப்பங்களைப் போலவே வாழ்க்கையும் திருப்பங்கள் நிறைந்ததாக அமைந்துள்ளதை இயக்குநர் ஜெர்ஸி டொமரட்ஸ்கி, தூரதேசத்து ரசிகனுக்கும் புரியும்படியான காட்சிப்பூர்வ அழகியலோடு கொடுத்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x