Published : 27 Feb 2021 11:56 am

Updated : 27 Feb 2021 21:41 pm

 

Published : 27 Feb 2021 11:56 AM
Last Updated : 27 Feb 2021 09:41 PM

முதல் பார்வை: ஏலே

aelay-movie-review

ஊரில் ஐஸ் வண்டி வைத்து ஓட்டிப் பிழைப்பை நடத்தியிருக்கும் முத்துக்குட்டி எல்லா இடங்களிலும் அடாவடி செய்து, பணம் கடன் வாங்கி, ஏமாற்றி, குடித்து, ஆட்டம் போட்டு என மற்றவர்களைப் பற்றிய கவலை இல்லாமல் வாழ்ந்தவர். தங்களைக் கவனிக்காமல் தன்னை மட்டுமே கவனித்துக் கொண்ட முத்துக்குட்டியை இந்தக் காரணத்தினாலேயே அதிகமாக வெறுக்கிறார் மகன் பார்த்தி.

முத்துக்குட்டி வயது மூப்பின் காரணமாக இறந்துபோக, தந்தைக்குத் தனது கடைசி கடமையைச் செய்ய சென்னையிலிருந்து கிராமத்துக்கு விரைகிறார் பார்த்தி. அங்கு சகோதரி மீனா, நண்பர்கள், வேறொரு திருமணத்துக்குத் தயாராக இருக்கும் முன்னாள் காதலி நாச்சியா எனப் பலரும் இருக்க, பார்த்திக்கு கடந்த கால சம்பவங்கள் கண்முன் வந்து போகின்றன. முத்துக்குட்டி உண்மையிலேயே அப்படி ஒரு சுயநலப் பேர்வழியா? அப்பா- மகன் உறவின் விரிசல் சரியானதா? பார்த்தியின் முன்னாள் காதலியுடனான பிரச்சினை தீர்ந்ததா? போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது 'ஏலே'.

சமுத்திரக்கனிக்கு உண்மையிலேயே வித்தியாசமான ஒரு கதாபாத்திரம். எந்தக் கருத்தும் சொல்லாமல் அவர் இப்படி நடிப்பதைப் பார்ப்பதே அலாதியாக இருக்கிறது. எதையும் தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல், வாழ்க்கையை அதன் போக்கில் உல்லாசமாக வாழும் ஒரு மனிதர். அவர் செய்யும் சேட்டைகளும், ஏற்படுத்தும் சங்கடங்களும் கதாபாத்திரங்களுக்கு எரிச்சலையும், நமக்குச் சிரிப்பையும் வரவழைக்கிறது.

சமுத்திரக்கனியின் மகன் என்று சொன்னால் நம்பிவிடலாம் எனும் அளவுக்கு மணிகண்டனின் உடல் மொழியும், பேசும் விதமும் அப்படியே ஒத்துப்போகிறது. நடிப்பிலும் நிறைவாகவே இருக்கிறார்.

அறிமுக நாயகி மதுமதி அழகிய கிராமத்துப் பெண்ணைக் கண்முன் நிறுத்துகிறார். வழக்கமான குறும்புக்கார நாயகிகளின் வழிசல்கள் இல்லாமல் இயல்பான நடிப்பைத் தந்திருக்கிறார். சிறு வயது பார்த்தியாக கைலாஷ், அப்பாவின் செயல்களால் வெறுப்பாவது, சக மாணவர்களுடன் சண்டையிடுவது, சங்கடப்படுவது எனத் தேர்ந்த நடிப்பு. பார்த்தியின் சகோதரியாக நடித்திருக்கும் சனா, பார்த்தியின் நண்பர்கள், கிராமத்து மக்கள் என நடிகர்கள் தேர்வு அத்தனையும் கச்சிதம்.

தேனி ஈஸ்வரின் இதமான ஒளிப்பதிவுக்கு அருள் தேவின் பின்னணி இசை நன்றாகத் துணை போயிருக்கிறது. கபீர் வாசுகியின் பாடல்கள் கதையின் போக்கில் நெருடாமல் வந்தாலும் மனதில் ஒட்ட மறுக்கிறது.

அப்பா - மகன் உறவுக்குள் இருக்கும் கசப்பு, அது மாறியதா இல்லையா என்பதை முதல் பாதியில் ஆவணப் படம் போன்ற யதார்த்தமான அணுகுமுறையோடும், இரண்டாவது பாதியில் மசாலா கலந்த வணிக சினிமா அணுகுமுறையோடும் சொல்லியிருக்கிறார் ஹலிதா ஷமீம். இதுவே ஒரு வகையில் படத்தை பாதிக்கவும் செய்கிறது. கிராமத்துச் சடங்குகள், மனிதர்கள், சம்பவங்கள் அத்தனையும் மெல்லிய நகைச்சுவையுடனேயே திரையில் விரிகிறது.

பல கிராமத்துப் படங்களைப் பார்த்திருக்கும் ரசிகர்களுக்கும் புதிய அனுபவத்தைக் கொடுக்கும் காட்சிகள் முதல் பாதியில் நிறைந்துள்ளன. அவ்வபோது கடந்த கால சம்பவங்களைச் சொல்லும் காட்சிகள் ஒரு கட்டத்துக்குப் பின் களையிழக்கிறது. சமுத்திரக்கனி எப்படிப்பட்டவர் என்பதை நமக்குச் சொல்லிப் புரியவைத்த பிறகும் ஒரு பாடல், இன்னும் இரண்டு சம்பவங்கள் என அதை இன்னும் அழுத்தமாகச் சொல்ல முற்பட்டது பெரிய தாக்கத்தைத் தரவில்லை. ரேமண்ட் டெரிக் க்ராஸ்டாவுடன் படத்தொகுப்பையும் கவனித்திருக்கும் இயக்குநர் ஹலிதா ஷமீம் முதல் பாதியின் பல காட்சிகளைச் சுருக்கியோ, நீக்கியோ இருந்திருக்கலாம்.

இடைவெளியில் வரும் திருப்பத்தில் ஆரம்பித்து அடுத்தடுத்து திருப்பம் என, சட்டென்று 'களவாணி' போன்ற கிராமத்து நகைச்சுவைப் படப் பாணிக்கு திரைக்கதை மாறுகிறது. இரண்டாவது சமுத்திரக்கனி, அவர் யார் என்ன எப்படி வந்தார், அவரை வைத்து திரைக்கதையில் வரும் பிரச்சினைகள், குழப்பங்கள், கடைசியில் ஒரு தீர்வு என அத்தனையுமே சுவாரசியமாக இருந்தாலும் முதல் பாதி நமக்குத் தந்த உணர்வுக்கும், இரண்டாவது பாதி தரும் உணர்வுக்கும் தொடர்பே இல்லாதது போலவே இருக்கிறது. பொழுதுபோக்கு சினிமா ரசிகர்களுக்கு இது பெரிய குறையாகத் தெரியாமல் சுவாரசியமாகவே இருக்கலாம். ஆனால், தூய சினிமா ஆர்வலர்களை அதே அளவு திருப்திப்படுத்துமா என்பது சந்தேகமே.

இப்படி ஒரு அற்பமான காரணத்துக்கா காதலர்களுக்கு இடையே சண்டை என்கிற கேள்விக்கு பதில் இல்லை. அதேபோல பார்த்தியின் மன மாற்றத்துக்கும் அழுத்தமான காரணமோ, காட்சிகளோ இல்லை. படத்தை முடிக்க வேண்டும், சரி இதற்கு ஒரு முடிவு கட்டுவோம் என்றே கடைசி அரை மணி நேரம் விரைந்து முடிக்கப்பட்ட ஒரு உணர்வைத் தருகிறது.

ஒரே நேரத்தில் நல்ல திரைப்படமாகவும், வெகுஜன ரசனைக்கான திரைப்படமாகவும் ஒரு படைப்பைக் கொடுப்பது கடினம். இதைத் தவிர்த்துப் பார்த்தால் ஒரு வாழ்வியல் அனுபவத்தைப் போகிற போக்கில் இயல்பான நகைச்சுவையுடன் பதிவு செய்த விதத்தில் 'ஏலே' கவனிக்கத்தகுந்த படங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.


தவறவிடாதீர்!

Aelay reviewYeley reviewElay reviewஏலே விமர்சனம்ஹலிதா ஷமீம் விமர்சனம்சமுத்திரகனி விமர்சனம்மணிகண்டன்மதுமதிமுத்துக்குட்டிதமிழ் பட விமர்சனம்இந்து தமிழ் விமர்சனம்புதுப்பட விமர்சனம்இந்து தமிழ் முதல் பார்வை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x