Published : 25 Feb 2021 15:30 pm

Updated : 25 Feb 2021 15:30 pm

 

Published : 25 Feb 2021 03:30 PM
Last Updated : 25 Feb 2021 03:30 PM

இயக்குநர் கெளதம் மேனன் பிறந்த நாள் ஸ்பெஷல்: இயக்குநர்களில் ஒரு அரிதான படைப்பாளி

gautham-menon-birthday-special

மக்கள்தொகையில் பெரும்பகுதியினரைத் திருப்தியடையச் செய்வதைத் தவிர்க்க முடியாத முன்நிபந்தனையாகக் கொண்ட வெகுஜன சினிமாவில் திரைப்பட இயக்குநர்கள் தன்னுடைய படைப்பு முத்திரையை ஒவ்வொரு படத்திலும் தக்கவைக்கும் படைப்பாளிகளாக இருப்பது மிக மிகக் கடினமானது. தன்னுடைய பிரத்யேக படைப்பு மனத்தை இழக்காமல் இருக்கும் இயக்குநர்கள் மிக மிக அரிதானவர்கள். இன்று தமிழ் சினிமாவில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் அப்படிப்பட்ட அரிதான படைப்பாளியும் ஆவார். வணிக கட்டாயங்களை மீறி தனக்குள் இருக்கும் படைப்பு மனத்தை துளியும் நீர்த்துப்போகச் செய்துவிடாதவரான கெளதம் இன்று (பிப்ரவரி 25) தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

கெளதம் மேனன் இயக்கிய முதல் திரைப்படமான ‘மின்னலே’ 2001 பிப்ரவரி 2 அன்று வெளியானது. அதையொட்டி கெளதம் திரையுலகுக்கு அறிமுகமாகி 20 ஆண்டுகள் ஆகிவிட்டன என்கிற கணக்கில் தமிழ், ஆங்கில வெகுஜன ஊடகங்களும் சமூக ஊடகங்களும் அவருடைய திரைப் பயணத்தையும் படைப்பாளுமையையும் கொண்டாடித் தீர்த்தன. அவருடைய பேட்டிகள் வெளியாகின. இருபது ஆண்டுகளாக திரைப் பார்வையாளர்களில் அதிகம் பேரால் கொண்டாடப்படும் இயக்குநராக அவர் திகழ்கிறார் என்பதற்கு இதுவே சான்று.


வெற்றிகள் நிரம்பிய காலகட்டம்

இருபது ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இருபது திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் கெளதம். இந்த இருபது ஆண்டு திரைவாழ்வில் முதல் பத்தாண்டுகள் வெற்றிகளாலும் பாராட்டுகளாலும் நிறைந்தவை. ’மின்னலே’, ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘வாரணம் ஆயிரம்’, ’விண்ணைத்தாண்டி வருவாயா’ என இந்தக் காலகட்டத்தில் கெளதம் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் இன்றளவும் ரசிகர்களால் மகிழ்ச்சியுடன் நினைவுகூரப்படும் படங்கள். அதோடு தமக்கென்று ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தை என்றென்றும் தக்கவைத்திருக்கும் படங்கள். மேலும் உள்ளடக்கம். உருவாக்கம் என அனைத்திலும் கெளதம் என்னும் படைப்பாளியின் முத்திரை படிப்படியாக ரசிகர்களால் உள்வாங்கப்பட்டு அவருக்கென்று ஒரு பெரும் ரசிகர் படை உருவான காலகட்டம் இது.

’பச்சைக்கிளி முத்துச்சரம்’, ‘ரெஹ்னா ஹே தேரே தில் மே’ (’மின்னலே’ இந்தி மறு ஆக்கம்) என ஒருசில தோல்விகள் கெளதம் மீதான ரசிகர்களின் மதிப்பையோ அவருடைய படங்களுக்கான வணிக மதிப்பையோ துளியும் குறைக்கவில்லை. வலுவான சுயசிந்தனையும் கொண்ட பெண் கதாபாத்திரங்கள், மிகச் சிறப்பான பாடல்கள், அவற்றுக்கு நியாயம் செய்யும் அற்புதமான திரையாக்கம், படம் முழுவதும் ஸ்டைலிஷான தோற்றம், நறுக்கென்ற வசனங்கள், இயல்பான மெல்லிய நகைச்சுவை, அறிவியல் விதிகளை அதிகமாக கேலிக்குள்ளாக்காத சண்டைக் காட்சிகள் என கெளதமின் படைப்பு முத்திரைகள் அவருடைய வெற்றிப் படங்கள் மட்டுமல்லாமல் தோல்விப் படங்களிலும் வெளிப்பட்டு ரசிகர்களை ஈர்த்ததே இதற்கு முக்கியக் காரணம்.

விமர்சனங்களும் அதைத் தாண்டியும்

அடுத்த பத்தாண்டுகளைப் பார்க்கும்போது கெளதம் இயக்கிய சில படங்கள் தோல்வியடைந்தன. சில படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றாலும் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றன. சில படங்கள் இரண்டையும் பெற்றன. மேலும் கெளதமிடம் காதல் கதை, காவல்துறை அதிகாரியை மையப்படுத்திய கதை ஆகிய இரண்டு கதைச் சட்டகங்கள் மட்டுமே உள்ளன. அதையே அவர் மீண்டும் மீண்டும் சமைத்துக் கொண்டிருக்கிறார் என்னும் விமர்சனமும் வலுப்பெற்றது.

இப்போது ஓடிடி தளங்களில் வெளியாகும் ஆந்தாலஜி படங்களின் பகுதியாக கெளதம் இயக்கும் குறும்படங்கள் அவருடைய ரசிகர்களால் கொண்டாடப்படுவதாகவும், அவரை ஏற்காதவர்களால் நிராகரிக்கப்படுவதாகவும், பொதுவான பார்வையாளர்களுக்குக் கலவையான உணர்வுகளைத் தருவதாகவும் அமைந்துள்ளன. ஆனால், இந்த இரண்டாம் பத்தாண்டு காலத்தில் கெளதமின் படைப்புகளை விமர்சிப்பவர்கள் அதிகரித்திருப்பதைப் போலவே அவரைக் கொண்டாடும் ரசிகர்களும் அதிகரித்திருக்கிறார்கள். இத்தகைய ரசிகர்களுக்கு கெளதமின் படைப்புகள் மீது புகார்களே இல்லை என்று சொல்லிவிட முடியாது. அவருடைய படைப்புகளின் குறைகளைத் தாண்டி அவருடைய படைப்பு மனத்துடன் தம்மை நெருக்கமாக உணர்வதால் அவரை நேசிப்பவர்கள் அல்லது மதிப்பவர்கள் என்று இவர்களைச் சொல்லலாம்.

படைப்பாளியின் மன உறுதி

கெளதம் இதுவரை இயக்கியுள்ள படங்களில் காதல், காவல்துறையை மையப்படுத்திய படங்களே அதிகம் என்பது உண்மைதான். அதே நேரம் ஒரு நடுத்தர வயது மனிதனின் சபலத்தை அடிப்படையாகக் கொண்ட ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’, ஒரு தந்தை - மகனின் வாழ்வில் செலுத்தும் தாக்கத்தை உயர்வாகவும் உணர்வுபூர்வமாகவும் சித்தரித்த ‘வாரணம் ஆயிரம்’, கொடூரமான பாலியல் கொலைகாரனின் கதையைச் சொன்ன ‘நடுநிசி நாய்கள்’ போன்ற படங்களும் அவரிடமிருந்து வெளிவந்தன. கெளதமின் மிகப் பெரிய வெற்றிப் படமும் அவருடைய ஆகச் சிறந்த படமாக பெரும்பாலான சினிமா பார்வையாளர்களால் அங்கீகரிக்கப்படுவதுமான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’வுக்கு அடுத்து அவருடைய படங்களில் மிக அதிகமாக விமர்சிக்கப்பட்ட, சர்ச்சைகளையும் சாடல்களையும் எதிர்கொண்ட ’நடுநிசி நாய்கள்’ வெளியானது.

’தசாவதாரம்’ படத்தை இயக்க கமல்ஹாசன் அளித்த வாய்ப்பை கெளதம் ஏற்கவில்லை. மாறாக தன்னுடைய கதையில் கமலை நடிக்க வைத்தார். அதுவே ‘வேட்டையாடு விளையாடு’ என்னும் வெற்றிப் படமாக அமைந்தது. இத்தனைக்கும் தன்னை கமலின் மிகப் பெரிய ரசிகர், அவருடன் பணியாற்றுவதை வாழ்வின் பெரும் வரமாகக் கருதுபவர் கெளதம். இருந்தாலும் கமலுடன் பணியாற்றும் வாய்ப்புக்காக தன்னால் இயலாது என்று தான் நினைத்த கதையை அவர் இயக்க முன்வரவில்லை.

மாபெரும் நட்சத்திர நடிகரான அஜித்துடன் அவர் இணைந்து பணியாற்றிய ‘என்னை அறிந்தால்’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும், அஜித் படம் என்பதைவிட கெளதம் படமாகவே இருந்தது. அதற்கு அஜித் தனக்கு அளித்த சுதந்திரம்தான் காரணம் என்று பல பேட்டிகளில் பதிவு செய்திருக்கிறார் கெளதம். அதே நேரம் அத்தகைய சுதந்திரத்தை அளிக்கத் தயங்கும் நட்சத்திரங்களுடன் அவர் பணியாற்ற மாட்டார் என்பதும் அவருடைய திரைப்பயணத்தை உன்னிப்பாக கவனிப்பவர்களுக்குத் தெரியும்.

ஒரே மாதிரியான கதைக்களங்களைத் திரும்ப திரும்ப இயக்குகிறார் என்னும் விமர்சனத்தை மாற்ற வேண்டும் என்று அவர் தீவிரமாக முயலவில்லை. என்னிடம் ஒரு கதை இருக்கிறது. அதை என்னுடைய திரைமொழியில் சொல்கிறேன். அது என் படைப்புலகம். அதற்குள் வாருங்கள், பிடித்திருந்தால் ரசியுங்கள். இல்லை என்றால் பரவாயில்லை என்று சொல்லும் தன்னம்பிக்கை வெகுஜன சினிமாவில் அரிதான சிலருக்கே அமையப் பெற்றிருக்கிறது. அவர்களில் கெளதம் ஒருவர்.

இவற்றிலிருந்தே எதற்கும் அஞ்சாமல் தான் விரும்பும், தன்னால் இதற்கு நியாயம் செய்ய முடியும் என்று தான் நம்பும் படங்களை மட்டுமே இயக்குகிறவர் கெளதம் மேனன் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

எல்லைகளை உணர்ந்தவர்

மேலும் கெளதம் தன் எல்லைகளை அறிந்தவர். தனக்கு இதெல்லாம் வராது என்று கெளதமைப் போல் வெகு சில இயக்குநர்களே தமது குறைகளையும் எல்லைகளையும் பொதுவெளியில் ஒப்புக்கொள்வார்கள். அதே நேரம் தமக்கு எதுவெல்லாம் வரும் என்பதில் அசைக்க முடியாத தன்னம்பிக்கையும் அவை சிறந்தவை என்னும் மன உறுதியும் அவர்களுக்கு இருக்கும். இதனாலேயே நியாயமான விமர்சனங்களை ஏற்கும். குறைந்தபட்சம் அவற்றை மதித்து பதில்கூறும் மனநிலையை வெளிப்படுத்துவார்கள்.

கெளதமின் படங்கள் கொண்டாடப்படலாம், ரசிக்கப்படலாம், விமர்சிக்கப்படலாம், நிராகரிக்கப்படலாம். வெற்றி பெறலாம், தோல்வியடையலாம். ஆனால், கெளதம் என்னும் படைப்பாளியின் முக்கியத்துவத்தை என்றும் மறுத்துவிட முடியாது.

கெளதம், தான் சொல்ல நினைக்கும் கதைகளைத் தன்னுடைய தனித்துவமான திரைமொழியுடன் சொல்லிக்கொண்டே இருக்க அவற்றுக்கான ரசிகர்கள் அதிகரித்துக்கொன்டே இருக்க அவர் தொடர்ந்து இயங்குவதற்கான சூழலை உறுதி செய்யும் வெற்றிகள் அவருக்குக் கிடைத்துக்கொண்டே இருக்க இந்தப் பிறந்த நாளில் அவரை மனதார வாழ்த்துவோம்.

தவறவிடாதீர்!

Gautham menon birthday specialGautham menonGautham vasudev menonகெளதம் மேனன் பிறந்தநாள் ஸ்பெஷல்கெளதம் மேனன் பிறந்தநாள்கெளதம் மேனன்Varanam ayiramVettaiyadu vilaiyaduVinnai thaandi varuvaya

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x