Published : 19 Feb 2021 17:15 pm

Updated : 19 Feb 2021 17:15 pm

 

Published : 19 Feb 2021 05:15 PM
Last Updated : 19 Feb 2021 05:15 PM

முதல் பார்வை: சக்ரா

chakra-movie-review

தந்தையின் அசோக சக்ரா பதக்கத்தைக் கொள்ளையடித்துச் சென்ற கும்பலைக் கண்டுபிடித்து அதை மீட்கப் போராடும் ராணுவ வீரனின் கதையே 'சக்ரா'.

சுதந்திர தினத்தன்று சென்னையில் 50 வீடுகளில் ஒரு கொள்ளை கும்பல் தங்கள் கைவரிசையைக் காட்டி ரூ.7 கோடி பணத்தையும், தங்க நகைகளையும் கொள்ளையடித்துச் செல்கிறது. துப்பு கிடைக்காமல் போலீஸார் திணறுகின்றனர். இந்தச் சூழலில் கொள்ளையடிக்கப்பட்ட வீட்டில் தனியாக இருந்த பாட்டிக்கு என்ன ஆனது என்ற பதைபதைப்புடன் ராணுவத்திலிருந்து சொந்த ஊருக்கு வருகிறார் விஷால். தந்தையின் அசோக சக்ரா பதக்கம், பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது அறிந்து வெடிக்கிறார். பதக்கத்தை மீட்டே தீருவேன் என்று சவால் விடுத்து தேடலைத் தொடர்கிறார்.

நூதன கொள்ளைச் சம்பவத்தின் பின்னணி என்ன, 50 வீடுகளில் கொள்ளை அடித்தவர்கள் யார், அவர்களின் நோக்கம் என்ன, பதக்கத்தைக் கொள்ளை அடித்தது ஏன், ராணுவ அதிகாரி விஷாலால் கொள்ளை கும்பலை எப்படிக் கண்டுபிடிக்க முடிந்தது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது திரைக்கதை.

ஹேக்கிங்கை மையமாகக் கொண்டு டெக்னாலஜியை நம்பி 'சக்ரா' படத்தை இயக்கியுள்ளார் எம்.எஸ்.ஆனந்தன். ஆனால், அதில் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

விஷால் இந்தப் படத்துக்காக உடல் எடையைக் கூட்டியுள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளில் திமிறி எழுந்து தீவிரம் காட்டுகிறார். ரவுடிகளைப் புரட்டி எடுக்கிறார். எமோஷனல் காட்சிகள் சரியாக எழுதப்படாததால் அவருக்கு உணர்வுபூர்வமாக நடிக்கும் வாய்ப்பு இல்லை. மற்றபடி ஹீரோயிசத்துக்கான டெம்ப்ளேட் பில்டப்புகளில் மாறாத நடிப்பைக் கொடுத்துள்ளார்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத்தான் படத்தின் முதல் பாவம். காவல் உதவி ஆணையர் பதவியில் இருக்கும் அவரை கான்ஸ்டபிள் லெவலுக்குத் தகுதிக்குறைப்பு செய்திருக்கிறார்கள். விஷால் சொல்லும் எல்லாவற்றுக்கும் ஆமாம் சாமி போகிறார். நாயகிக்கான எந்த முக்கியத்துவமும் படத்தில் இல்லை. அதுவும் அவராக எடுக்கும் ஒரு முடிவும் சொதப்பலிலும், ஆபத்திலும் முடிகிறது.

ரோபோ ஷங்கரின் ஒரு கவுன்ட்டர் வசனம் கூட எடுபடவில்லை. சீரியஸ் தருணங்களில் அவரின் நகைச்சுவை அந்தரத்தில் தொங்கி ஆதரவின்றி நிற்கிறது. கே.ஆர்.விஜயாவின் மறுவருகை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. மனோபாலா, விஜய் பாபு, சிருஷ்டி டாங்கே ஆகியோரும் படத்தில் ஒட்டாமல் வந்து போகிறார்கள்.

நாயகியாக மட்டுமே நடித்து வந்த ரெஜினா '7' படத்தில் இன்னொரு பரிணாமத்தைக் காட்டினார். அதேபோல் 'சக்ரா'வில் எதிர் நாயகியாகத் தன் பங்களிப்பை வழங்கியுள்ளார். கதாபாத்திரம் சரியாக எழுதப்படாததால் ஃபார்முலா வில்லியாகவே தன் நடிப்பைப் பதிவு செய்துள்ளார். அதிலும் போதாமை எட்டிப் பார்க்கிறது.

பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு மட்டும் படத்தின் தரத்துக்கு நியாயம் சேர்க்கிறது. பாடல்கள் இல்லாதது ஒரே ஆறுதல். பின்னணி இசை யுவன் என்று சொன்னால் அவர் அண்ணன் கார்த்திக் ராஜா கூட நம்பமாட்டார்.

படத்தின் ஆகப்பெரிய சிக்கல் திரைக்கதைதான். 'துப்பாக்கி', 'துப்பறிவாளன்', 'இரும்புத்திரை' ஆகிய படங்களின் சாயலைப் பேருக்கு மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். அது எந்தவிதத்திலும் புத்திசாலித்தனமாகவோ, புதுமையாகவோ இல்லை. பார்த்துப் பழகிய வழக்கமான காட்சிகளே இடம்பெறுகின்றன. ஊகிக்கக் கூடிய காட்சிகள் அடுத்தடுத்து வருவதால் திரைக்கதையில் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் சலிப்பு தட்டுகிறது.

ராணுவ அதிகாரியால் எப்படிக் காவல் ஆணையர் உள்ளிட்ட ஒட்டுமொத்த அதிகாரிகளையும் கட்டுப்படுத்த முடிகிறது, அதை எப்படிக் காவல்துறை அனுமதிக்கிறது போன்ற லாஜிக் மீறல்களின் பட்டியல் பெரிது. ராணுவ அதிகாரியாக விஷாலைக் காட்சிப்படுத்த வேண்டிய தேவையும் பெரிதாக இல்லை. ஹேக்கிங் பற்றியும் தெளிவாகப் பதிவு செய்யவில்லை. ரிப்பீட் காட்சிகள், ரிப்பீட் வசனங்கள் அலுப்பு தட்டுவதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு துளியும் ஏற்படவில்லை.

மிகுந்த பலவீனமான திரைக்கதையில் தடுமாறிய, தடம் மாறிய 'சக்ரா' சத்தே இல்லாமல் வலுவிழந்துள்ளது.


முதல் பார்வைசக்ரா விமர்சனம்சக்ராவிஷால்எம்.எஸ்.ஆனந்தன்ஷ்ரத்தா ஸ்ரீநாத்ரெஜினாசினிமா விமர்சனம்தமிழ் சினிமா விமர்சனம்Chakra reviewChakra movi review

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x