Published : 13 Feb 2021 11:45 AM
Last Updated : 13 Feb 2021 11:45 AM

விஜய்க்குக் கொடுக்கப்படும் சம்பளம் நியாயமானதே: 'மாஸ்டர்' தயாரிப்பாளர்

சென்னை

விஜய்க்குக் கொடுக்கப்படும் சம்பளம் நியாயமானதுதான் என்று 'மாஸ்டர்' தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் தற்போதைய முன்னணி நாயகர்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ரஜினிக்கு அடுத்து இருப்பது விஜய்தான். அவருடைய படங்களின் உலகளாவிய வசூல் உள்ளிட்டவற்றைக் கணக்கில் கொண்டு, சுமார் ரூ.80 கோடி வரை சம்பளமாகப் பெற்றுக் கொண்டிருக்கிறார். நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் நீண்ட காலமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் 'மாஸ்டர்' தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோ, விஜய்க்குக் கொடுக்கப்படும் சம்பளம் நியாயமானதுதான் என்று தெரிவித்துள்ளார்.

'மாஸ்டர்' வசூல் நிலவரம் குறித்து அளித்துள்ள பேட்டியில், விஜய் சம்பளம் குறித்து அவர் கூறியிருப்பதாவது:

"ஒரு தொழிலதிபராக, தயாரிப்பாளராக நாம் ஒரு பிரச்சினையில் இருக்கும்போது அதில் உடனடியாக இன்னொருவரைக் கொண்டுவருவது சரியாக இருக்காது. என் வியாபாரத்தில் எனது கூட்டாளிகள், என் ஊழியர்கள் என எல்லாரும் நன்றாக வேலை செய்தாலும் சந்தை நிலவரத்தால் எனக்கு நஷ்டம் ஏற்படலாம். உடனே எனது ஊழியர்களிடம் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று நான் சொல்வேன் என நினைக்கிறீர்களா? அப்படித்தான் சினிமா வியாபாரத்தையும் பார்க்கிறேன்.

எதிர்காலத்தில் நம் தயாரிப்பில் இன்னொரு படம் நடிக்கச் சொல்லி அவர்களிடம் கோரிக்கை வைக்கலாம். ஆனால், சந்தைச் சூழலால் மீண்டும் முதலில் போட்ட ஒப்பந்தத்தை எடுத்து வைத்து அதை மாற்ற வேண்டும் என்று சொல்வது சரியாக இருக்காது. விஜய் ஒரு சம்பளத்தை ஏற்றுக்கொண்டார். அது அவருக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது. அவ்வளவே. மீண்டும் அவரிடம் சென்று எதுவும் பேரம் பேசவில்லை. முதலிலிருந்தே அவருடனான என் உறவு தொழில் முறையாக ஒழுங்காக உள்ளது. நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம்.

விஜய்க்குக் கொடுக்கப்படும் சம்பளம் நியாயமானதே. இன்று நல்ல வியாபாரம் இருக்கும் நாயகர்களில் ஒருவர் அவர். வெள்ளி, தங்கம், வைரம் என ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை தருகிறோம். அதன் மதிப்பு மாறுகிறது இல்லையா? அதேபோல வைரத்துக்கு அதிக விலைதான் தர வேண்டும். அதை நாம் எவ்வளவு வைத்திருக்கிறோமோ அதன் மதிப்பு அவ்வளவு கூடும்.

எனவே, விஜய் கேட்கும் சம்பளம் நியாயமானதே. ஏனென்றால் அவர் இந்தத் துறையில் நீண்ட காலமாக இருக்கிறார், பல வெற்றிப் படங்களைத் தந்திருக்கிறார், பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கியிருக்கிறார். அது எல்லாம் முக்கியம். இவை வெறும் ஒன்றிரண்டு வருடங்களில் வராது. பல வருடங்கள், 1992-ல் ஆரம்பித்து இன்றுவரை அதற்காகக் கடினமாக உழைத்து வருகிறார். எனவே அவர் அந்த சம்பளத்துக்குத் தகுதியானவர்”.

இவ்வாறு சேவியர் பிரிட்டோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x