Published : 11 Feb 2021 12:59 PM
Last Updated : 11 Feb 2021 12:59 PM

பள்ளி நண்பர்களுடன் இணைந்து படம் தயாரிக்கும் வசந்தபாலன்

தனது பள்ளி நண்பர்களுடன் இணைந்து புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார் இயக்குநர் வசந்தபாலன்.

'வெயில்', 'அங்காடி தெரு', 'அரவான்', 'காவியத் தலைவன்' உள்ளிட்ட பல வரவேற்பு பெற்ற படங்களை இயக்கியவர் வசந்தபாலன். தற்போது ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'ஜெயில்' படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவுற்று வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. அதுமட்டுமன்றி, ஜி.வி.பிரகாஷை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியதும் வசந்தபாலன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, தனது அடுத்த படத்தின் பணிகளைத் தொடங்கியுள்ளார். இந்தப் படத்தை இயக்குவது மட்டுமன்றி தனது பள்ளி நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கவும் செய்கிறார் வசந்தாபலன். விருதுநகரில் காமராஜர் படித்த நூறு ஆண்டுகளைக் கடந்த பெருமைமிகு பள்ளியான க்ஷத்திரிய வித்யாசாலாவில் தன்னுடன் பயின்ற மூன்று நண்பர்களுடன் இணைந்து 'அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ்' என்னும் தயாரிப்பு நிறுவனத்தை இயக்குநர் வசந்தபாலன் தொடங்கியுள்ளார்.

அதில் ஒருவரான வரதராஜன் வசந்தபாலனுடன் 'ஆல்பம்' திரைப்படம் துவங்கி அவரது எல்லா திரைப்படங்களிலும் உதவி இயக்குநர், கேஸ்டிங் இயக்குநர், புராஜெக்ட் டிசைனர் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர் என பல்வேறு பணிகளில் ஈடுபட்ட அனுபவம் பெற்றவர். 'வெயில்' திரைப்படத்தில் இடம்பெற்ற பரத் கதாபாத்திரம், லோக்கல் விளம்பர நிறுவனம் எல்லாம் அவரை மனதில் கொண்டு எழுதப்பட்டவை.

இன்னொரு நண்பரான முருகன் ஞானவேல் தற்போது அமெரிக்காவின் கணிப்பொறி நிறுவனத்தில் உயர் அதிகாரியாக உள்ளார். மற்றொரு நண்பரான கிருஷ்ணகுமார் கணினி உபபொருட்களை சிறியதாக விற்கத்துவங்கி தன் கடின உழைப்பால் இன்று தொழிலதிபராக உயர்ந்த இடத்தில் உள்ளார்.

விரைவில் இந்தப் புதிய படத்தின் பெயர் மற்றும் நடிகர்களின் விவரம் உள்ளிட்டவை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. தனது முந்தைய படங்களைப் போலவே, புதிய படமும் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அழுத்தமாகவும், அதே சமயம் ஜனரஞ்சகமாகவும் இருக்கும் என்று இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x