Published : 10 Feb 2021 12:41 PM
Last Updated : 10 Feb 2021 12:41 PM

என்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை ஏற்றுக் கொள்கிறேன்: கெளதம் மேனன்

என்னைச் சுற்றி நடக்கும் அத்தனை விஷயங்களையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான கெளதம் மேனன் தயாரிப்பாளராகவும் சில படங்களில் பணிபுரிந்தார். அந்தப் படங்கள் வசூல் ரீதியில் எடுபடவில்லை என்பதால் பைனான்ஸ் சிக்கலில் மாட்டிக் கொண்டார். இதனால் அவருடைய படங்கள் வெளியாகும் போதெல்லாம், பைனான்ஸ் பிரச்சினை தலை தூக்கியது.

'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டபோது, அதைப் பேசித் தீர்த்து வைத்தது வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம். தற்போது அந்நிறுவனத்துக்குத் தொடர்ச்சியாகப் படங்கள் இயக்கி வருகிறார் கெளதம் மேனன். 'ஜோஷ்வா' படத்தை முடித்துவிட்டு, சிலம்பரசன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.

இந்தப் பணப் பிரச்சினை எப்போதுதான் தீரும் என்ற கேள்விக்கு கெளதம் மேனன் கூறியிருப்பதாவது:

"அந்த நேரம் இதுதான். இப்போது நான் நிஜமாகவே ஒரு மகிழ்ச்சியான நிலையில் இருக்கிறேன். பலர் என்னை அழைக்கின்றனர். புதிய கதவுகள் ஒவ்வொரு நாளும் திறக்கின்றன. அன்வர் ரஷீத் மற்றும் ஃபஹத்துடனான எனது சந்திப்பு என்னை நடிகனாக்கியது. அது ஒரு நல்ல கற்றல் அனுபவம்.

ஒரு இயக்குநராக 'பாவக் கதைகள்' எனக்குப் பரிசோதனை முயற்சி. இன்னும் அப்படிப் பல சவாலான, வித்தியாசமான கதைகளை அடுத்த 4-5 வருடங்களில் கையாள வேண்டும் என்று விரும்புகிறேன். என்னால் இப்போது ஒரு கதையை எழுதி அதன்பின் நடிகரைத் தேர்வு செய்ய முடியும். அந்தச் சுதந்திரம் இருக்கிறது. வழக்கமாக நடிகரை வைத்துத்தான் கதை எழுதுவோம்.

மேலும் எனது பணி, தொழில் குறித்து எனக்கு எந்த அச்சமும் இல்லை. என்னைச் சுற்றி நடக்கும் அத்தனை விஷயங்களையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். அதை எதிர்கொள்ள வலிமையான தோள்களைத்தான் நான் கேட்கிறேன். ரஹ்மான் போன்றவர்களிடம் இருந்துதான் இதைக் கற்றுக்கொண்டேன்".

இவ்வாறு கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x