Published : 09 Feb 2021 05:52 PM
Last Updated : 09 Feb 2021 05:52 PM

அரசியலுக்கு வரவேண்டுமென்றால் ராஜ்யசபா சீட்: சந்தானம் கலகலப்பான பேச்சு

சென்னை

அரசியலுக்கு வரவேண்டுமென்றால் ராஜ்யசபா சீட் கொடுத்தால் பார்க்கலாம் என்று 'பாரிஸ் ஜெயராஜ்' பத்திரிகையாளர் சந்திப்பில் சந்தானம் கலகலப்பாகப் பேசினார்.

'ஏ1' படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் சந்தானம் - இயக்குநர் ஜான்சன் மீண்டும் இணைந்துள்ள படம் 'பாரிஸ் ஜெயராஜ்'. அனைகா சோடி, சஷ்டிகா ராஜேந்திரன், மாருதி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் சந்தானத்துடன் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படம் முழுக்க வடசென்னை பின்னணியில் நடக்கும் காமெடிக் கதையாகும்.

முழுக்க கானா பாடல்கள் கொண்ட இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்துள்ளார். பிப்ரவரி 12-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று (பிப்ரவரி 9) நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் சந்தானம் பேசியதாவது:

" ’ஏ 1’ படமே ஜாலியாகப் பண்ண வேண்டும் என்பதால்தான் இயக்குநர் ஜான்சனுடன் பணிபுரிந்தேன். அந்தப் படம் ஹிட்டானது. அடுத்து என்ன என்று நிறைய கதைகள் யோசித்தோம். அடுத்து நம்மிடம் காமெடியைத்தான் எதிர்பார்ப்பார்கள் என்று இயக்குநர் ஜான்சனிடம் பேசி இந்தக் கதையை முடிவு செய்தோம்.

இது ரொம்ப தனித்துவமான கதை. காமெடி அருமையாக வந்திருக்கிறது. எனக்காக அவருடைய அணியுடன் உட்கார்ந்து காமெடிக்காக உழைத்துள்ளார் இயக்குநர் ஜான்சன். ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் பார்ப்பதற்குத்தான் அமைதியாக இருப்பார். அவரோடு இப்போதுதான் முதலில் பணிபுரிகிறேன். அவருடைய உழைப்பு மிகவும் அபாரமானது. குறைந்த நாட்கள் படப்பிடிப்பில் அருமையான ஒளிப்பதிவு செய்து கொடுத்துள்ளார். அவருக்கு மிகப்பெரிய நன்றி.

இந்தப் படத்தின் இன்னொரு ஹீரோ இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சார்தான். 'ஏ 1' படம் ஹிட்டுக்கு அவரும் ஒரு முக்கியமான காரணம். இந்தப் படத்தில் அனைத்துமே கானா பாடல்கள்தான். ரொம்பவே ரசித்து இசையமைத்தார். அவருடைய உழைப்புக்கு மிகப் பெரிய நன்றி. கலை இயக்குநர், எடிட்டர் உள்ளிட்ட அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி.

இந்தப் படத்தில் லோக்கலாக கானா பாடிக் கொண்டிருக்கும் ஒருவர் என்று கேரக்டர் பிக்ஸ் பண்ணிட்டோம். வியாசர்பாடி, புளியந்தோப்பு, பாரிஸ் உள்ளிட்ட ஏரியாக்களில்தான் கானா பாட்டுகள் மிகவும் பிரபலம். அங்குதான் ஹீரோ வீடு என்று முடிவு செய்தோம். அப்போதுதான் 'பாரிஸ் ஜெயராஜ்' என்று ரைமிங்காக நல்லாயிருக்கு என்று தலைப்பு வைத்தோம்.

மக்கள் மத்தியில் ஒரு கூட்டணி ஹிட்டாகிவிட்டால், அடுத்து படம் பண்ணும்போது எளிதாக இருக்கும். அதனால்தான் 'ஏ 1' படத்தில் நடித்த மொட்டை ராஜேந்திரன், மாறன், தங்கதுரை, சேசு உள்ளிட்டோரை இந்தப் படத்திலும் பயன்படுத்தியுள்ளோம். இன்றைக்கு மொட்டை ராஜேந்திரன் ரொம்ப அருமையாக காமெடி பண்ணிக் கொண்டிருக்கிறார்.

உதயநிதி சார் அரசியலுக்குப் போய்விட்டார் என்பதால், நீங்கள் எப்போது என்று கேட்கிறார்கள். ராஜ்யசபா எம்.பி. சீட் கொடுத்தால் ஏதாவது பண்ணலாம் என்று இருக்கிறேன். போன முறையும் இந்த மாதிரி அரசியல் கேள்வியைக் கேட்டுச் சிக்கலாக்கி விட்டார்கள். பாஜகவில் சேரப் போகிறீர்களா என்றுதான் பலரும் தொலைபேசியில் கேட்டார்கள். உதயநிதி சாருடன் இணைந்து காமெடி கேரக்டரில் நடித்தேன். அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை எல்லாம் பண்ணினேன். இப்போதும் படம் மட்டும்தான் பண்ணுவேன்.

சில ஆக்‌ஷன் படங்களில் நடித்தால், ஏன் ஆக்‌ஷன் படம் காமெடி படம் பண்ணுங்கள் என்கிறீர்கள். காமெடி படம் செய்தால் ஏன் ஆக்‌ஷன் படம் பண்ணுவதில்லை என்கிறார்கள். இப்படிப் பல பேர் குழப்புவதால்தான் சில சமயங்களில் அடுத்து ஆக்‌ஷன் படம் பண்ணலாமா என்று யோசிப்பதுண்டு. மக்கள் கவலையை மறந்து சிரிப்பதற்கான முயற்சியைச் செய்து கொண்டிருக்கிறேன். அதைச் சரியாகச் செய்வோம்".

இவ்வாறு சந்தானம் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x