Last Updated : 08 Feb, 2021 05:49 PM

Published : 08 Feb 2021 05:49 PM
Last Updated : 08 Feb 2021 05:49 PM

’அந்த நடிகையை பளார்னு அறைந்துவிட்டேன்!’ - பாரதிராஜாவின் ‘கல்லுக்குள் ஈரம்’ அனுபவங்கள்

படத்தின் க்ளைமாக்ஸில் ஒரேயொரு வரியை வசனமாகச் சொல்லவேண்டும். அந்த எக்ஸ்பிரஷன் சரியாக வராததால், அருணாவை பளார்னு அறைந்துவிட்டேன்’ என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்தார்.

இயக்குநர் பாரதிராஜா, தன் ‘என் இனிய தமிழ் மக்களே’ எனும் இணையதள சேனலில் தன் வாழ்க்கை அனுபவங்களையும் திரை அனுபவங்களையும் பகிர்ந்து வருகிறார். அதில் ‘கல்லுக்குள் ஈரம்’ பட அனுபவங்களை அவர் பகிர்ந்துகொண்டார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது :

புதிய வார்ப்புகள்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. என் உதவியாளர் பாக்யராஜை, ஹீரோவாக்கினேன். ரத்தி அக்னிஹோத்ரியை நடிக்கவைத்தேன். நான் தயாரித்த முதல் படம் ‘புதியவார்ப்புகள்’தான். இதுவரை நான் சம்பாதிக்காத அளவுக்கு பத்துலட்சம் ரூபாய் சம்பாதித்தேன். அதை என் உறவினருக்கெல்லாம் பிரித்துக் கொடுத்தேன்.

இதன் பிறகு ‘நிறம் மாறாத பூக்கள்’ செய்தேன். அதுவும் வெற்றியைப் பெற்றது. இந்தசமயத்தில், என் நண்பனும் என்னுடைய ஒளிப்பதிவாளருமான நிவாஸ், ‘நான் ஒரு படம் டைரக்ட் பண்ணலாம்னு இருக்கேன்’ என்று சொன்னான். மேலும் படத்துக்கு அவனே தயாரிப்பாளர் என்றும் சொன்னான். ’நீலிமா மூவி மேக்கர்ஸ்’ என்ற பெயரில், அவனும் இன்னொருவரும் சேர்ந்து தயாரித்தார்கள். அதில் நான் நடிக்கவேண்டும் என்று நிவாஸ் சொல்லிவிட்டான்.

வேணாம்டா’ என்று எவ்வளவோ சொன்னேன். ஆனால் நிவாஸ் கேட்கவே இல்லை. ‘இது டைரக்டர் பற்றிய கதை. நீதான் நடிக்கணும்’ என்று உறுதியாகச் சொன்னான்.

இந்த ‘கல்லுக்குள் ஈரம்’ கதை வந்ததற்கு ஒரு கதை இருக்கிறது. சந்திரபோஸ் என்றொரு நண்பன். இப்போது அவனில்லை. அவனும் நானும் ரூம் மேட். அவன் காரைக்குடிக்காரன். இரண்டு படம் டைரக்ட் பண்ணினான். இறந்துவிட்டான்.

அப்போது மினர்வா என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கே ஆங்கிலப்படம் போடுவார்கள். நானும் அவனும் போய்ப் பார்ப்போம். பக்கெட் என்றொரு படம் பார்க்கப் போனோம். முன்னதாக, மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸில் ‘சும்மா ஒரு கதை’ என்று டிராமா போட்டோம். மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. நாடகத்தில் அண்ணன் தங்கை என்று கேரக்டர்கள். அதில் தங்கை கெட்டுப்போய்விடுவாள்.

அந்தப் பின்னணியில் நாலுவரிப் பாட்டு எழுதவேண்டும். படம் பார்க்கச் சென்று க்யூவில் நின்ற போது, ‘எங்கே ஒரு பாட்டு நாலுவரியில எழுது’ என்றேன். உடனே அவன் அங்கே இருந்த சிகரெட் அட்டையை எடுத்துவிட்டு, ’ஆலயத்தின் தெய்வம் கூட வெளியில் வந்தால் கல்லாகும். அணிந்திருந்த மலர்மாலை தெருவினிலே மதிப்பிழக்கும். கூடுவிட்டு பறந்த புறா வேடனுக்கு இரையாகும். குடும்பப் பெண் தவறிவிட்டால் உலகுக்கே பகையாகும்’ என்று எழுதினேன். வியப்பாகிவிட்டது எனக்கு. ஷாக்காகிவிட்டேன். நாடகத்தில் இந்தப் பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

பிறகு அவன் படங்களை இயக்கினான். அவனிடம் ஒரு கதை இருந்தது. அதுதான் ‘கல்லுக்குள் ஈரம்’. ’இதில் வரும் டைரக்டர் கேரக்டர் நீயே பண்ணிரு’ என்று நிவாஸ் சொன்னான். இஷ்டமில்லாமல்தான் ஆரம்பித்தது அந்தப் படம். அப்புறம் ஹீரோயின் தேடினோம்.

அப்போது விஜயசாந்தி படித்துக்கொண்டிருந்தார். அவருடைய சித்தி ஒரு நடிகை. பிறகு ஐதராபாத்துக்குச் சென்று அருணாவைப் பிடித்துவிட்டான் நிவாஸ். அருணாவுக்கு தமிழ் தெரியாது. விஜயசாந்தி சின்னப்பொண்ணு. நான் நடிக்கவும் செய்யவேண்டும். நடிக்கவும் கற்றுக்கொடுக்கவேண்டும். இயக்கவும் வேண்டும். ஆனால் இயக்குநர் என்று நிவாஸ் பெயர்தான் வரும்.

அப்போதெல்லாம் எனக்கு ரொம்பவே கோபம் வரும். இப்போது பக்குவப்பட்டுவிட்டேன். அப்போது கோபம் வந்தால் என்ன செய்வேன் என்றே தெரியாது. நிவாஸுக்கு, சிக்கனமாகவும் படம் எடுக்கவேண்டும்.

படத்துக்குள் படம். அதில் ரொம்ப கோபக்காரனாக இருப்பேன். சலவைக்காரப் பெண்ணாக அருணா நடித்திருப்பார். என் சட்டையைப் பார்த்தாலே மிரண்டுபோவார். படத்தில் நடிகையாக நடிக்கும் வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு ‘சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்’ பாட்டு. அதைக் கற்பனையாக அருணா நினைத்துக்கொண்டே இருப்பார். வருவார். நடப்பார். என் அறைக்கு வந்து துணிகளையெல்லாம் வைத்துவிட்டுச் செல்வார்.

அப்போது துணிக்கு மேலே ஒரு பூ வைத்துவிட்டுப் போவார். நான் பார்த்துவிட்டு, ஜன்னலைப் பார்ப்பேன். அருணா கேர்க்டர். ‘உம் பேர் என்னம்மா?’ என்று கேட்பேன். பதில் சொல்லாமல் சென்றுவிடுவார். இது படத்தின் தொடக்கக் காட்சிகளில் ஒன்று. க்ளைமாக்ஸில் படம் முடியும் வேளையில், ஊரில் காற்று, சூறாவளி. டைரக்டர் கேரக்டரில் நடிக்கும் நான், வீடுவீடாகச் சென்று நன்றி சொல்லுவேன். நான் போகும் இடங்களுக்கெல்லாம் அவரும் மறைந்து மறைந்து வருவார்.

அப்போது ஒருவீட்டுக்குச் சென்றுவிட்டு வரும் போது, அருணா, கைவளையல்களைக் கொண்டு சத்தமிடவேண்டும். ‘எம் பேரு சோலை’ என்று சொல்லவேண்டும். இந்த ஒரேயொரு வரி. ஆனால் சரியாகச் சொல்லவில்லை. நான் அறைந்துவிட்டேன்’’

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்தார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x