Published : 01 Feb 2021 09:06 PM
Last Updated : 01 Feb 2021 09:06 PM

எனக்கு பிடிவாரண்ட்டா?- இயக்குநர் ஷங்கர் விளக்க அறிக்கை

தனக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள இயக்குநர் ஷங்கர், சரி பார்க்காமல் செய்தி வெளியிடப்படும் போக்கு ஆச்சர்யம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர் என்று பெயர் பெற்றவர் இயக்குநர் ஷங்கர். இவரது இயக்கத்தில் வெளியான எந்திரன் திரைப்படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் இயக்குநர் ஷங்கருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகின.
இதனை மறுத்துள்ள இயக்குநர் ஷங்கர். இது தொடர்பாக விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

எழும்பூர் நீதிமன்றம் எனக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்திருப்பதாக ஒரு பொய்யான செய்தியைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். எனது வழக்கறிஞர் சாய் குமார் இன்று நீதிமன்றத்தை அணுகி இந்தச் செய்தியை அவர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். எனக்கெதிராக எந்த வாரண்ட்டும் பிறப்பிக்கப்படவில்லை என்பதை உடனடியாக நீதிபதி உறுதி செய்தார்.

இணையத்தில் தினசரி நீதிமன்ற வழக்குகளின் நிகழ்வுகள் பதிவேற்றுவதில் நடந்த தவறு காரணமாக இப்படி ஒரு விஷயம் நடந்துள்ளது. அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது.

சரி பார்க்கப்படாமல் இப்படி ஒரு பொய்யான செய்தி உலவுவதைப் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த விஷயம் எனது குடும்பத்துக்கும், நல விரும்பிகளுக்கும் தேவையில்லாத மன உளைச்சலைத் தந்துள்ளது.

இது போன்ற பொய்யான செய்திகள் இனி பரவாது என்பதை உறுதி செய்ய, இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x