Published : 01 Feb 2021 04:57 PM
Last Updated : 01 Feb 2021 04:57 PM

படம் வெளியாகும்வரை மொபைல் வேண்டாம்: ஆமிர் கான் முடிவு

தனது 'லால் சிங் சட்டா' திரைப்படம் வெளியாகும்வரை மொபைல் போன்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று நடிகர் ஆமிர் கான் முடிவு செய்துள்ளார்.

டாம் ஹாங்ஸ் நடிப்பில், ராபர்ட் ஸெமிக்ஸ் இயக்கத்தில் 1994-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump). 1986-ல் வின்ஸ்டன் க்ரூம் எழுதிய நாவலின் அடிப்படையில் உருவான படம் இது. ஹாலிவுட்டில் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்று எனப் பெயர் பெற்று, உலக அளவில் எண்ணற்ற ரசிகர்களைக் கொண்ட திரைப்படம்.

இன்றளவும் இந்தப் படத்தின் வசனங்களும், காட்சிகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த தழுவல் திரைக்கதை, சிறந்த கிராபிக்ஸ், சிறந்த படத்தொகுப்பு உள்ளிட்ட பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளையும் இப்படம் அள்ளியது. தற்போது இந்தப் படத்தின் அதிகாரபூர்வ இந்தி ரீமேக்கில் ஆமிர் கான் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஷாரூக் கானும், சல்மான் கானும் கவுரவ கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தற்போது இந்தப் படம் வெளியாகும் வரை மொபைல் போன் பயன்படுத்தப் போவதில்லை என்று ஆமிர் கான் முடிவெடுத்துள்ளார். தான் வேலை செய்யும் விதத்தில் மொபைல் அழைப்புகளால் தொடர்ந்து இடையூறு ஏற்படுகிறது என்கிற காரணத்தால் அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது.

வழக்கமாக ஆமிர் கான், தான் நடிக்கும் கதாபாத்திரமாகவே படப்பிடிப்பு முடியும் வரை இருப்பார். எனவே தனது சிந்தனை ஓட்டத்துக்கு எந்த இடையூறும் ஏற்படாத வண்ணம் இப்படி மொபைலை ஒதுக்கி வைத்துள்ளார். படம் தொடர்பான தகவல்களைத் தனது அணியினர் மூலமாகவே மற்றவர்களுக்குத் தெரிவிக்கவுள்ளார்.

கடந்த வருடமே வெளியாக வேண்டிய ‘லால் சிங் சட்டா’ கரோனா நெருக்கடியால் ஒத்தி வைக்கப்பட்டது. எனவே இந்த வருடம் கிறிஸ்துமஸ் தினத்தன்று படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆமிர் கான் ஜோடியாக கரீனா கபூர் நடித்துள்ளார். இதற்கு முன் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியான 'பிகே', 'டங்கல்', 'தூம் 3', 'தாரே ஸமீன் பர்', 'கஜினி' ஆகிய அத்தனை ஆமிர் கான் படங்களும் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x