Published : 27 Jan 2021 10:27 AM
Last Updated : 27 Jan 2021 10:27 AM

'மாஸ்டர்' ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் 'மாஸ்டர்' படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜனவரி 13-ம் தேதி வெளியான படம் 'மாஸ்டர்'. இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று, வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவான இந்தப் படத்தின் அனைத்து உரிமைகளையும் லலித் குமார் கைப்பற்றி வெளியிட்டார்.

திரையரங்க வெளியீட்டுக்கு முன்பாக கரோனா அச்சுறுத்தல் காலத்தில் பல முறை ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், படக்குழுவினர் திரையரங்கில்தான் முதலில் வெளியீடு என்பதில் உறுதியாக இருந்தார்கள். தற்போது திரையரங்குகளில் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது 'மாஸ்டர்'.

இந்தப் படத்தின் மீது முதலீடு செய்த விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என அனைவருமே லாபத்தை எட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து 'மாஸ்டர்' படத்தின் ஓடிடி வெளியீட்டை உறுதி செய்துள்ளது படக்குழு. ஜனவரி 29-ம் தேதி வெளியாகும் என அமேசான் ப்ரைம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

படம் திரையரங்கில் வெளியான 16-வது நாளில் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதற்கு முன்பு ஓடிடி தளத்தில் சுமார் 50 நாட்களுக்குப் பிறகே வெளியிடுவார்கள். தற்போது பல்வேறு வெளிநாடுகளில் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தால், ’மாஸ்டர்’ படக்குழுவினரின் இந்த முடிவு பெருவாரியான வரவேற்பைப் பெறும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x