டேனிஷ் திரைப்படம் இன் டு தி டார்க்னஸுக்கு  தங்க மயில் விருது: 51-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா நிறைவு

டேனிஷ் திரைப்படம் இன் டு தி டார்க்னஸுக்கு  தங்க மயில் விருது: 51-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா நிறைவு
Updated on
1 min read

உலகத் திரைப்படங்களைக் கொண்டாடும் 51-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது.

51-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் உயரிய தங்க மயில் விருதை இரண்டாம் உலகப் போர் பற்றிய டேனிஷ் திரைப்படமான இன் டு தி டார்க்னஸ் வென்றுள்ளது. இந்த விருதுக்கான ரூ.40 லட்சம் ரொக்கப் பரிசை இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் ஆண்டர்ஸ் ரெஃப்னும், தயாரிப்பாளர் லேனே போர்க்லும் சமமாகப் பெற்றுக்கொள்வார்கள். அவர்களுக்குத் தலா ஒரு சான்றிதழும் வழங்கப்பட்டது.

கோவாவில் நேற்று நடைபெற்ற திரைப்படத் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியில் இந்த விருது அறிவிக்கப்பட்டது. இது தவிர சிறந்த இயக்குநர், நடிகருக்கான வெள்ளி மயில் விருதுகளும் வழங்கப்பட்டன. மேலும் 51-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் சிறப்பு நடுவர்மன்ற விருதும் வழங்கப்பட்டது.

மத்திய சுற்றுச்சூழல், வன இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ, கோவா மாநில ஆளுநர் பகத்சிங் கோஷியாரி, மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். பழம்பெரும் இந்தி நடிகை ஜீனத் அமன், நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகருமான ரவி கிஷன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். பிரபல நடிகர் பிஸ்வஜித் சட்டர்ஜிக்கு இந்த ஆண்டின் இந்திய ஆளுமை விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பாபுல் சுப்ரியோ, பெருந்தொற்றுக்கு இடையேயும் பல்வேறு குழப்பங்களையும், தடைகளையும் கடந்து அனைவரின் ஒத்துழைப்போடும் இந்தத் திருவிழா வெற்றிகரமாக நடைபெற்றிருப்பதாகத் தெரிவித்தார்.

தகவல் மற்றும் ஒலிபரப்புச் செயலாளர் அமித் கரே, ஆசியாவிலேயே முதன்முறையாக ஹைபிரிட் முறையில் திரைப்படத் திருவிழா இந்தியாவில் நிகழ்ந்திருப்பதாகப் பெருமிதம் கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in