உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மறைவு: கமல் இரங்கல்

உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மறைவு: கமல் இரங்கல்

Published on

உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மறைவுக்கு கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்', 'பம்மல் கே சம்பந்தம்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி (98). இவர் மலையாளத் திரைப்படங்களில் தாத்தா கதாபாத்திரங்களில் நடித்துப் பிரபலமானவர்.

சில தினங்களுக்கு முன்பு தான் கரோனா தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பினார். 98 வயதில் கரோனாவை வென்றிருப்பதாகப் பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். இதனிடையே வீட்டிலிருந்த உன்னிகிருஷ்ணன் நம்பூதிரிக்கு மீண்டும் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது.

உடனடியாக அவருடைய குடும்பத்தினர் கண்ணூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவருடைய உயிர் பிரிந்தது. உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மறைவுக்கு மலையாளத் திரையுலகினர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

'பம்மல் கே.சம்பந்தம்' படத்தில் கமலுக்குத் தாத்தாவாக நடித்திருப்பார் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி. இருவரும் பேசும் காட்சிகள் மிகவும் பிரபலம். தற்போது அவருடைய மறைவுக்கு கமல் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"73-வது வயதில் நடிக்க வந்து 18 வருடங்களாக மலையாளிகளை சிரிக்க வைத்தவர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி. இளமை துள்ளும் தாத்தாவாகக் கலையுலகில் வளையவந்தவர். இன்னும் 2 ஆண்டுகளில் சதமடிக்க வேண்டியவர் இன்று நம்மை நீங்கியிருக்கிறார். நெஞ்சார்ந்த அஞ்சலிகள்"

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in